அகிம்சையும் சத்தியாகிரகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. அகிம்சை என்பது வழிமுறை. அந்த வழிமுறையை உள்ளடக்கிய செயல்திட்டம் சத்தியாகிரகம். இந்த உலகத்துக்கு காந்தி அளித்த மிக முக்கியமான பங்களிப்புகளுள் சத்தியாகிரகமும் ஒன்று. பலவீனர்கள் என்று கருதப்பட்டவர்களை, பலவீனர்கள் என்று தங்களைத் தாங்களே கருதிக்கொண்டவர்களை நீங்களே சகல பலமும் பொருந்தியவர்கள் என்று உணர வைக்கும் செயல்திட்டமே ‘சத்தியாகிரகம்’. இந்தக் கருத்தாக்கம் ஆரம்பத்தில் இந்தப் பெயரில் அழைக்கப்படவில்லை. அந்தக் கருத்தாக்கத்தை நோக்கியும் அந்தப் பெயரை நோக்கியும் காந்தி வந்ததன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வது இங்கே அவசியம்..
அடிமையாக்கும் சட்டம்
1906-ம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று, சத்தியாகிரகத்தின் முதல் விதைகள் தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில் தூவப்பட்டன. அதற்கு முந்தைய மாதம்தான் ட்ரான்ஸ்வால் பகுதியின் நிறவெறி ஆங்கிலேய அரசு கொடுமையான அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தது. அதன்படி அந்தப் பிரதேசத்திலுள்ள ‘வந்தேறி’ இந்தியர்களில் எட்டு வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; முந்தைய பர்மிட்டுகளை ஒப்படைக்க வேண்டும்; பெயர், வயது, மதம், சாதி இன்னபிற தகவல்களைச் சொல்லிக் கைநாட்டு வைக்க வேண்டும். இந்த அவசரச் சட்டத்துக்கேற்ப இந்தியர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளத் தவறினால் அபராதம், கடுமையான சிறைத் தண்டனை, தேவைப்பட்டால் இந்தியாவுக்கே திருப்பியனுப்பப்படுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் இப்படிப் பதிவுசெய்த சான்றிதழை இந்தியர்கள் எப்போதும் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். சாலையிலோ சந்தையிலோ நடமாடும்போது அதிகாரிகள் கேட்டால் உடனே சான்றிதழைக் காட்ட வேண்டும். சான்றிதழ் இல்லாவிட்டாலோ, காட்ட மறுத்தாலோ அபராதம், கடுமையான சிறைத் தண்டனை, தேவைப்பட்டால் இந்தியாவுக்கே திருப்பியனுப்பப்படுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும், எவர் ஒருவர் வீட்டிலும் புகுந்து, அந்த வீட்டினர் சான்றிதழ்களை வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்ய போலீஸ்காரர்களுக்கு முழு உரிமை உண்டு. இதுதான் அந்தக் கொடிய சட்டத்தின் சாராம்சம்.
இந்தச் சமயத்தில், நடால் மாகாணத்தில் ஏற்பட்ட ஜுலு கிளர்ச்சியை அடக்குவதற்காகச் சென்ற படையில் மருத்துவச் சேவைப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பில் காந்தி இருந்தார். போருக்கு நடுவிலும் அவருக்குக் கடிதங்களும் தந்திகளும் வந்த வண்ணம் இருந்தன, அவரை உடனே ட்ரான்ஸ்வாலுக்குத் திரும்பி வரச் சொல்லி. போர் முடிந்து திரும்பி வந்த காந்தி இந்தச் சட்டத்தைப் படித்துப்பார்த்துவிட்டுக் கொதிப்படைந்தார். அந்த அவசரச் சட்டம் முழுவதும் இந்தியர்கள் மீதான் வெறுப்பே உமிழப்பட்டிருப்பதை காந்தி தெளிவாக உணர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களை வேரோடு பிடுங்கியெறியும் முயற்சியான இந்தச் சட்டத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் எதிர்ப்பே இல்லாமல் அமைதியாக ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு காந்தி வருத்தமுற்றார். அதைப் பற்றி காந்தி தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ எனும் நூலில் இப்படி எழுதுகிறார்: ‘இந்தியர்களுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை என்பது எனக்குத் தெள்ளத்தெளிவாக விளங்கியது. மனுக்கள் கொடுப்பதும் பிரதிநிதிகளை அனுப்புவதும் பயனளிக்காது எனினும் இந்தியச் சமூகம் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். இது போன்ற சட்டத்துக்கு அடிபணிவதைவிட மரிப்பதே மேல். ஆயின், எப்படி மரிப்பது? நமக்கு முன்பாக வெற்றி அல்லது மரணம் என்ற இரண்டு வாய்ப்புகளைத் தவிர வேறு ஏதும் இருக்கக் கூடாதென்றால் நாம் என்ன செய்தாக வேண்டும்? ஒரு வகையில், ஊடுருவ முடியாத சுவர் ஒன்று என் முன்னால் இருந்தது, அதைக் கடந்து செல்லும் வழி ஏதும் தெரியாமல் இருந்தேன்’. அந்த வழி செப்டம்பர் 11, 1906 கண்முன்னே தெளிவாய் விரியத் தொடங்கியது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானங்கள் நிறைவேற்றவும் மேற்கொண்டு என்ன செய்வதென்று விவாதிக்கவும் ட்ரான்ஸ்வால் இந்தியர்கள் ஜோஹனஸ்பர்க் நகரத்தில் இருந்த இம்பீரியல் அரங்கில் ஒன்றுகூடினார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களால் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. தென்னாப்பிரிக்க இந்தியர்கள் வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமானதொரு நிகழ்வாக அது இருக்கும் என்று காந்தி அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்தக் கூட்டத்தின் விரிவையும் பொங்கித் ததும்பிய உணர்ச்சிகளையும் எத்தனை எத்தனை பிரிவினர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள் என்பதையும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தில் பலரும் பார்த்திருக்கக் கூடும்.
கடவுள்மீது ஆணையாக…
ட்ரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்திய சங்கத்தின் தலைவரான அப்துல் கனி அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் மிகவும் முக்கியமானது நான்காவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான். புதிதாகக் கொண்வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டமானது இந்தியர்களின் எதிர்ப்பை மீறி நிரந்தரச் சட்டமாக மாறும் பட்சத்தில் அதற்கு இந்தியர்கள் யாரும் அடிபணியக் கூடாது; அப்படி அடிபணியாததால் கிடைக்கும் எல்லாத் தண்டனைகளையும் மனமுவந்து இந்தியர்கள் அனுபவிக்க வேண்டும். இதுதான் அந்தத் தீர்மானம். தீர்மானம் முன்மொழியப்பட்டதும் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ‘கடவுள்மீது ஆணையாக சட்டத்துக்க்கு அடிபணிய மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தை நடத்திய தலைவர்கள், கலந்துகொண்டவர்கள் என்று பெரும்பான்மையானோர் இதே போல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுபோன்று வரலாற்றில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வெவ்வேறு போராட்டங்களில் செய்துகொண்ட சத்தியங்களெல்லாம் எண்ணற்ற தடவை மீறப்பட்டதை நினைவுகூரும் காந்தி இந்தத் தடவை அப்படி ஆகக் கூடாது என்று வலியுறுத்தினார். “நாம் சத்தியம் செய்துகொள்வது அந்நியர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காக அல்ல; உள்ளூர் அரசின்மீதோ, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்மீதோ, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய அரசின்மீதோ நமது சத்தியம் செல்வாக்கு செலுத்தும் என்ற நோக்கத்தில் நாம் சத்தியம் செய்துகொள்ளக் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் இதயத்தின் குரலைக் கேட்க வேண்டும். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் வலிமை தனக்கு இருக்கிறது என்பதை உள்குரல் உறுதிப்படுத்தினால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்” என்றார் காந்தி.
இதயத்தின் குரல்
செய்துகொண்ட சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள பாதகமான விளைவுகளைப் பற்றி காந்தி பேசியது அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு சத்தியாகிரகிக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை. அந்தக் கூட்டத்தில் உள்ள 3,000 பேர் மட்டுமே சத்தியம் செய்துகொண்ட நிலையில் கூட்டத்துக்கு வராத பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடக்கத்தில் இந்த சத்தியத்தைக் கேலிசெய்யலாம். இதுபோன்ற முதல் சோதனையிலேயே, சத்தியத்தைக் கைவிட நேரிடும். அதையும் தாண்டித் தாக்குப்பிடித்தால் சிறைசெல்ல நேரிடும். அங்கு பலத்த அவமானங்களையும் சித்ரவதைகளையும் எதிர்கொள்ள நேரிடும்; சொத்துசுகம் இழக்க நேரிடும்; ஊருக்குக் கூடத் திருப்பியனுப்பப்படலாம்; பட்டினியில் வாட நேரிடும்; இன்னும் சொல்ல முடியாத எத்தனையோ கொடுமைகளை அனுபவிக்கலாம். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒரு சமூகம் முழுவதும் செய்துகொண்ட சத்தியத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி மிக அருகில். அப்படி இல்லாமல் பலரும் சத்தியத்திலிருந்து விலகிவிட ஒருசிலர் மட்டுமாவது உறுதியுடன் தொடர்ந்தாலும் வெற்றி நிச்சயம் உண்டு. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள சவால்களையெல்லாம் இப்படியாக அங்கு கூடியிருந்தோர் மனக்கண்ணில் சித்திரமாக காந்தி தீட்டினார். எவ்வளவு சித்ரவதைகள் அனுபவித்தாலும் அவற்றை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் எந்த விதத்திலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதை காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
கூட்டம் முடிவுக்கு வந்ததும் புதியதாய் ஒரு உணர்வு முளைவிடுவதைக் காந்தி உணர்ந்தார். தானே இன்னும் பரிசோதனை நிலையில் வைத்திருக்கும் போராட்ட முறைக்கு முதல் வாய்ப்பு கிடைத்திருப்பதன் அடையாளம்தான் அது. இந்தப் போராட்ட முறைக்கு காந்தி முதலில் ‘Passive Resistance’ (சாத்விக எதிர்ப்பு) என்ற ஆங்கிலப் பெயரையே வைத்திருந்தார். இந்தியர்களின் போராட்டத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் இருப்பதை காந்தி அசவுகரியமாகவே உணர்ந்தார். அதுமட்டுமல்லாமல், அதுவரையில் மேற்குலகில் நடைபெற்ற ‘சாத்விக எதிர்ப்பு’களுக்கும் இப்போதைய புதிய போராட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மனதில் கொண்டு தனது போராட்டத்துக்கு புதிய பெயர் ஒன்று வைக்க நினைத்தார். அப்படிக் கிடைத்த பெயர்தான் ‘சத்தியாகிரகம்’. இந்தப் பெயர் கிடைத்ததும் ஒரு போராட்டம்தான்.
ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை சந்திப்போம்)
முக்கிய செய்திகள்
மற்றவை
14 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago