பதினெட்டுக்குள்ளே 5: குழந்தைகளுக்கான தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்!

By க.நாகப்பன்

எந்தக் குழந்தைக்கும் அதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்கக் கூடிய தற்காப்பு மருந்தையும், தடுப்பூசியையும் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு வழங்காமல் இருப்பது, தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது உரிமை மீறல் செயல். இவற்றின் மீது பெற்றோருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதற்காக குழந்தைகள் விஷயத்தில் தடுப்பு மருந்தையும், தடுப்பூசியையும் தவிர்க்கக் கூடாது.

கோட்பாடுகள், கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்தோ, மாற்று முடிவோ இருந்தாலும் அதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

இதுகுறித்த விரிவான பார்வையைக் கொடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கான உணவுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என்.கங்காவிடம் பேசினோம்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்?

குழந்தை பிறந்து 180 நாட்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கையான குடும்ப சூழலுக்கு உகந்த நம் கலாச்சார உணவையே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். காலை உணவாக இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

காலை 11 மணி அல்லது மாலை 3 மணிக்கு ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, லெமன் ஆகியவற்றை ஆறிய வெந்நீர் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பழச்சாறாகக் கொடுக்கலாம். ஆனால், இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இளநீர், பானகம் போன்றவற்றையோ வடித்த கஞ்சியில் உப்பு அல்லது நெய் சேர்த்தோ கொடுக்கலாம்.

மதியம் சாதத்தை கரண்டி அல்லது மத்தில் மசியச் செய்து அதில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். ரசம், பருப்பு, சாம்பார், வேகவைத்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், எண்ணெய்ப் பொருட்கள், காரம் மிகுந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மாலை சுமார் 5 மணிக்கு வாழைப்பழம், தோல் சீவி இட்லி தட்டில் வேகவைத்த ஆப்பிள், சப்போட்டா பழத்தின் கதுப்புப் பகுதி (சதைப் பகுதி) ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட ஐந்து தானியங்கள் அல்லது ஏழு தானியங்கள் அல்லது ஒன்பது தானியங்களை வறுத்து, அரைத்து சத்துமாவாக, கஞ்சியாக, கூழாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொருநாளும் சுவை மாற்றத்துக்காக உப்பு, வெல்லம், பால் என சத்துமாவில் கலந்து கொடுக்கலாம்.

பழங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று சொல்லப்படுகிறதே?

பழங்கள் சாப்பிடுவதால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று பதற வேண்டாம். சளிக்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை.

இரவு உணவை எப்போது வழங்கலாம்?

9 மாதங்களுக்குப் பிறகு இரவு உணவு வழங்கலாம். சுமார் 8 மணிக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சாதம் என எதுவாக இருந்தாலும் ஃபிரஷ் உணவாக இருக்க வேண்டும். காலையில் செய்து மிச்சமானது, ஃப்ரிட்ஜில் இருந்தது என இருக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

அசைவ உணவை எப்போது கொடுக்கலாம்?

9-வது மாதம் முடிந்த பிறகு தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மைக்கான தடுப்பூசி குழந்தைக்கு போடப்படும். அதற்குப் பிறகு குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம்.( அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தைச் சார்ந்த குடும்பத்தினராக இருந்தால்)

முதல் 15 நாட்களுக்கு அவிச்ச முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலருக்கு செரிமானம் ஆவதில் தாமதம், உப்புசம், வயிற்றுப்போக்கு என வர நேரிடும். அதற்காக முட்டை கொடுப்பதை நிறுத்தக் கூடாது. வேண்டுமென்றால் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை கொடுக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.

அதற்குப் பிறகு மீன், ஈரல், கோழிக்கறி, எலும்பு சூப் ஆகியவற்றை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். 2 வயதுக்குப் பிறகே வேகவைத்த ஆட்டு இறைச்சியைத் தர வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைக்கு ஆட்டு இறைச்சி செரிமானம் ஆகும். 2 வயதுக்கு முன்பாக மட்டன் சூப் மட்டும் தரலாம்.

அசைவ உணவுக்கென்று ஒரு வாசனை உள்ளது. அந்த வாசனையை குழந்தை பழக வேண்டுமென்றால் ஒரு வயதுக்குள் அந்த ருசியை குழந்தைக்கு அறிய வைக்க வேண்டும். அப்போது பழக்காவிட்டால் குழந்தை அதற்குப் பிறகு அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒரு வயது குழந்தைக்கு எத்தனை வேளை உணவு ஊட்டலாம்?

1 வயது ஆனதும் காலை, 11 மணி, மதியம், 5 மணி, இரவு என 5 வேளைகளில் உணவு கொடுக்கலாம். ஒரு வயதுக்குள் கசப்பு தவிர எல்லா ருசிகளையும் குழந்தைக்குப் பழக்கலாம்.

வடை, சுண்டல், புட்டு என பண்டிகைகள் உள்ளிட்ட எந்த நாளிலும் வீட்டில் செய்யும் பலகாரங்களை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

1 வயது முடிந்ததும் 4 முறை சாப்பிடக் கொடுக்கலாம். அப்போது தனியாக பிரத்யேகமாக எந்த உணவையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் எல்லோரும் சாப்பிடும் உணவையே தாராளமாக தரலாம்.

சில பெற்றோர்கள் சாப்பிடு சாப்பிடு என்று குழந்தைகள் வாயில் திணிக்கிறார்களே. இது சரியா?

குழந்தை விரும்பி வாயில் உணவை வாங்கினால் மட்டுமே ஊட்ட வேண்டும். வாயில் திணிப்பதோ, கட்டாயப்படுத்துதோ கூடாது. அப்படி மீறிச் செய்தாலும் ஒரு பருக்கை சோற்றைக் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ குழந்தை சாப்பிடாது. குழந்தை போதும் போதாது என்பதை சமிக்ஞைகள், உடல்மொழி மூலம் வெளிப்படுத்திவிடும்.

குழந்தைகளுக்கு எப்படிச் சோறூட்ட வேண்டும்?

பொதுவாக குழந்தைக்கு சோறூட்டும்போது தாய் தன் கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு முகம் பார்த்து பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். குழந்தையின் கண்ணோடு கண் ஒட்டியபடி உணர்வுப்பூர்வமாக சோறூட்ட வேண்டுமே தவிர, டிவி பார்த்துக்கொண்டோ கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டோ சோறூட்டக் கூடாது.

குழந்தைகளுக்குத் தராமல் தவிர்க்க வேண்டியது என்ன?

பிஸ்கெட், பிரெட்டுக்கு தடா போடுவது சிறந்தது. இவற்றில் சோடா உப்பு கலந்திருப்பதால் குழந்தையின் உடலுக்கும், குடலுக்கும் ஒத்துவராது.

டீ,காபி பழக்கத்தை குழந்தைக்குக் கொண்டு வராமல் இருக்கலாம். டீயில் உள்ள டேனின், காபியில் உள்ள கஃபின் சின்னதாய் சுறுசுறுப்பை வரவழைக்கும் என்றாலும் அது நம்மை அடிமையாக்கிவிடும். அந்த பழக்கத்தால் குழந்தைகள் சாப்பாட்டை தள்ளிப்போடும் சூழல் உருவாகும்.

விளம்பரங்களில் வரும் பானங்களை அறவே தவிர்த்திடுங்கள்.

கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களையோ டின்களில் அடைக்கப்பட்ட பவுடர் உள்ளிட்ட பொருட்களையோ கொடுப்பது குழந்தையின் செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

குழந்தையை எப்போது தானாக சாப்பிட வைக்கலாம்?

2 வயது ஆனவுடன் தாய் குழந்தைக்கு ஊட்டக் கூடாது. குழந்தையை தன் கைகளினால் சாப்பிட வைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஸ்பூனில் சாப்பிட எந்தக் குழந்தையும் பழகாது. அதனால் கைகளால் சாப்பிடச் சொல்லலாம். நகங்களை வெட்டி, இரு கைகளை சுத்தப்படுத்தி, குழந்தையை தானாக சாப்பிட வையுங்கள். 2 கைகளில் சாப்பிட்டாலும் தடுக்காதீர்கள்.

ஒரே மாதிரி உணவு கொடுக்கக் கூடாது. ஏன்?

குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவைக் கொடுத்தால் போரடித்துவிடும். அதனால் தினம் தினம் புதிய உணவுகளை கொடுக்க வேண்டும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு என்ற இரு காய்கறிகளையே அதிகம் தரும் பெற்றோர்கள் உண்டு. அவரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் என 15-க்கும் மேற்பட்ட காய்கறிகளை குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி சமைத்துத் தரலாம். வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் ஒரு காய்கறி உள்ளது. அதை ஒவ்வொரு நாளைக்கும் தரலாம். சில பள்ளிகள் திங்கட்கிழமை என்றால் பச்சை நிற உணவு, செவ்வாய்க்கிழமை என்றால் மஞ்சள் நிற உணவு என அட்டவணைப்படுத்தி உள்ளன. அதே போல எல்லா பெற்றோர்களும் குழந்தைகளைப் பழக்கப்படுத்தலாம்.

இது குழந்தைகளுக்கு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதுடன், வண்ணங்களும், காய்கறிகளின் பெயர்களும் மனதில் பதிந்து நினைவாற்றலை வளர்க்க உதவும்.

குழந்தைக்கு தேவையான சொட்டு மருந்துகள்?

தாய்ப்பாலே மிகச் சிறந்த சத்து மருந்து என்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு எந்த சொட்டு மருந்தும், டானிக்கும் தேவையில்லை. காய்ச்சல் போன்ற நோய் வந்தால் அப்போதைக்கு மருத்துவர் உரிய மருந்து தருவார்.

குறை மாதத்திலோ அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தை என்றாலோ இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். அதனால் எலும்புகள் வலுவடைய வைட்டமின் டி மருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.

மல்டி வைட்டமின் மருந்து, செரிமான மருந்து ஆகியவை குழந்தைக்கு தேவையில்லை.

இரும்புச்சத்து குறைவால் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட்டால் வெல்லம், பனைவெல்லம், கீரை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதும்.

தடுப்பூசிகளை எந்தெந்த காலகட்டத்தில் போட வேண்டும்?

2 வயதுவரை குழந்தைகளுக்கு சுமார் 15 தடுப்பூசிகள் வரை போட வேண்டியது கட்டாயம். இதில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் ஆறு அல்லது ஏழு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்.

குழந்தையின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு எல்லா தடுப்பூசிகளையும் போட்டால் நோய்களைத் தடுக்கலாம். உடல்நலனை விட மிகப் பெரிய சொத்து குழந்தைக்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை கொடுக்க வேண்டியது கட்டாயம். தற்போது குழந்தை எங்கு பிறந்தாலும் அரசு/தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளைப் போட்ட பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வழக்கம்.

குழந்தை பிறந்த ஆறு, பத்து, பதினாறாம் வாரங்களில் டிபிடி முத்தடுப்பு ஊசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, மூளைக்காய்ச்சலைத் தடுக்கும் ஊசி என ஐந்து தடுப்பூசியாக பென்டாவேலன்ட் தடுப்பூசி போடுவது அவசியம். இதனுடன் போலியோ சொட்டு மருந்தும் போட வேண்டும். இதை அரசு / தனியார் மருத்துவமனைகளில் போடுவது வழக்கம்.

9-வது மாதத்தில் தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மையை தடுக்கும் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

14 மாதங்களில் சின்னம்மை தடுப்பூசியும், 15 மாதங்களில் எம்.எம்.ஆர் தடுப்பூசியும் போட வேண்டும்.

ஒன்றரை வயதில் டிபிடி பூஸ்டர், போலியோ பூஸ்டர் தரப்பட வேண்டும்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது.ரோட்டா வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தடுப்பு சொட்டு மருந்து, குழந்தைக்கு 6, 10, 14 வாரங்கள் முடிந்ததும் மொத்தம் மூன்று தவணைகள் அதை வாய் வழி திரவமாக எடுத்துக்கொள்ளலாம்.

2 வயது முடியும்போது டைபாய்டு தடுப்பூசி போடுவது அவசியம். இந்த தடுப்பூசியில் 2 வகை உள்ளது. முதலாம் வகை தடுப்பூசிக்கு 150 ரூபாய் மட்டும் செலவாகும். இதை அடுத்தடுத்த 3 வருடங்களுக்கு ஒருமுறை போட வேண்டும்.

இரண்டாம் வகை தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 25 வயது வரைக்கும் பாதுகாப்பை தேடிக் கொடுக்கும்.

பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் இருந்தால் அரசு நோய் கண்டறிந்த மாவட்டங்களைப் பட்டியலிடும். அப்போது மட்டும் போட்டுக்கொள்ளலாம். வைரஸ் கிருமியின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியும் மாறுபடுவதால் அந்த சூழலில் தடுப்பூசி போடுவதே சிறந்தது.

ஒரு வகை தீவிர மூளைக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு இருந்தால், அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

ஐந்தரை வயதிலிருந்து ஆறு வயதுக்குள் டிபிடி பூஸ்டர், டிடி பூஸ்டர், எம்.எம்.ஆர் தடுப்பூசி ( 2-வது முறை) சின்னம்மை தடுப்பூசி போட வேண்டும்.

10 வயதில் டிடி தடுப்பூசி, விடுபட்டிருந்தால் டைபாய்டு தடுப்பூசி, எம்.எம்.ஆர் மற்றும் சின்னம்மை தடுப்பூசி, மஞ்சள்காமாலை ஏ தடுப்பூசி விடுபட்டிருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.

10 வயதுக்கும் மேலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை 10 வயது, அதற்கடுத்த 2 மாதங்கள், அதற்கடுத்த ஆறு மாதங்கள் என மூன்று முறை போட்டுக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கான விலை ரூ.2300. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் பெண்களுக்கு பிறகாலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இதே தடுப்பூசியால் ஆண்களுக்கு பெனிஸ் கேன்சர் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தடுப்பூசி வெளிநாட்டில் வளரிளம் பருவ ஆண்களுக்கு போடப்படுகிறது.

16- 18 வயதில் டிடி தடுப்பூசியை போடுவது அவசியம். இதனால் சின்ன சின்ன ரத்த காயங்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது பிளேடால் கீறியதால் ஏற்படும் காயம், பென்சில் சீவியதால் ஏற்பட்ட காயம் போன்றவற்றுக்கு எந்த தடுப்பூசியும் தேவைப்படாது என்றார் டாக்டர் என்.கங்கா.

தற்போது, தமிழகத்தில் உள்ள 64% பெற்றோர்கள் மட்டுமே குழந்தைக்கான கூடுதல் உணவை சரியாக தருகிறார்கள். இது தேசிய அளவில் 51% தான். (RSOC 2013-14)

ஒரு குழந்தையின் தேவைகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். 6 முதல் எட்டு மாத குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 600 கலோரிகள் தேவைப்படும். 9 முதல் 11 வரையான மாதங்களில் ஒரு நாளுக்கு 700 கலோரிகளும் 12 முதல் 23 மாதங்கள் நிறைவு பெற்ற குழந்தைகளுக்கு 900 கலோரிகள் தினமும் தேவைப்படும்.

பொதுவாகத் தடுப்பூசிகளைச் சரியான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதால் 8 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும். தற்போது இன்னும் சில தடுப்பு மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் போலியோ, காசநோய், தட்டம்மை, டிப்தீரியா, கக்குவான், டெடனஸ், ஹெபாடிடிஸ்-பி, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா, மூளைக் காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு, நிமோனியா, மெனிஞிடிஸ், ஓடிடிஎஸ், காது தொற்று ஆகிய 14 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும்.

ஒரே தடுப்பூசியில் பலவிதமான நோய்களுக்கான மருந்துக் கூறுகளை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில் இருந்து குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நிவாரணம் ஏற்படும்.

இந்தியா முழுவதும் அதிக நோய்த் தொற்று ஆபத்து நிறைந்ததாக கருதப்படும் 297 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்திரா தனுஷ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிறப்புச் சான்றிதழுக்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து 'தோழமை'- குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறியதாவது:

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தை எந்த நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்துக்காகவும், குழந்தை ஆணா, பெண்ணா, பிறந்த தேதி என்ன என்பதைக் கண்டறிவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், பிறப்புச் சான்றிதழ் வைத்து மத்திய அரசின் பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதியை ஒதுக்க முடியும்.

தற்போது பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதி குறைந்த சதவீதமே ஒதுக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டில் 17% மட்டுமே குழந்தைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி கூட இவ்வளவு குழந்தைகள் இந்தியாவில் இருப்பார்கள் என பொதுவாகக் கணக்கிட்டே ஒதுக்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் முக்கிய ஆவணம். அரசுப் பதிவேட்டின் படி பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு குழந்தைகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம். இதனால் குழந்தையின் பிறந்த நாள் முதல் ஒரு மாதக் குழந்தை, ஒரு வருடக் குழந்தை என சரியான புள்ளிவிவரம் கிடைக்கும். இதை வைத்தே குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்புக்கு நிதி ஒதுக்கலாம்.

ஆனால், நம் நாட்டில் 48% மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வாங்குகிறார்கள். எனவே, பிறப்புச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வும் அவசர அவசியம் என்கிறார் தோழமை தேவநேயன்.



ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைக்கான செலவு பட்ஜெட்டில் 2014-15-ல் ரூ.16,415 கோடியாக இருந்தது, 2015-16ல் ரூ.13,636 கோடியாகக் குறைந்தது. 2016-17 பட்ஜெட்டில் இதற்கு ரூ.15,873 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2015 -16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 'கிரை' எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் என்ற பிரிவில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடு சதவீதம்:

* குழந்தைகள் கல்வி - 79 சதவீதம்* குழந்தைகள் மேம்பாடு - 15 சதவீதம்* குழந்தைகள் பாதுகாப்பு - 1.8 சதவீதம்* குழந்தைகள் ஆரோக்கியம் - 3.0 சதவீதம்

திறந்தவெளியில் மலம் கழித்தலுக்கும் குழந்தைகள் உயரம் குறைந்தவர்களாக வளர்வதற்கும் தொடர்புள்ளதா எப்படி? அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்.

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >பதினெட்டுக்குள்ளே 4: தாய்ப்பால் - உரிமையும் உணர்வும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்