'பொறியாளராக ஆசைப்பட்டு சந்தர்ப்ப வசத்தால் ஆசிரியர் ஆனேன்; பின்னர் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன்' என்கிறார் ஆசிரியர் புகழேந்தி. ஆசிரியர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், இயற்கை ஆர்வலர் என பன்முக பரிமாணங்கள் கொண்டவர். அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...
''அப்போது கடலூர் மாவட்டத்தின் கார்கூடல் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வசித்த குறிப்பிட்ட சமூகத்தினர், நாடோடிகளாக இருந்தனர். பாத்திரத்துக்கு ஈயம் பூசும் தொழிலை மேற்கொண்ட அவர்கள், ஆறு மாதங்கள் கார்கூடலிலும், அடுத்த ஆறு மாதங்கள் வேறு ஊர்களிலும் வசித்தனர். இதனால் அந்த சமூகத்தினர் யாரும் கல்வி கற்க முடியாமல் இருந்தது.
அறிவழகன் என்ற சிறுவன், கற்கும் வயதில் இருந்தாலும் பள்ளிக்கு வர முடியாமல் இருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினோம். 'பெற்றவர்கள் ஊரை விட்டுச் சென்றால் நாங்கள் அந்த சிறுவனை பார்த்துக் கொள்கிறோம்' என்று ஊர்க்காரர்கள் உறுதியளித்தனர். மிகுந்த யோசனைக்குப் பின் அவர்கள் சம்மதித்தனர். அவன் சாதிப்பிள்ளை சமூகத்தின் முதல் தலைமுறை மாணவன் ஆனான். எட்டாவது வரை அதே பள்ளியில் படித்தான். இதனால் அந்த சமூகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதல்முறையாக சாதிப்பிள்ளை சமூக மக்களின் வரலாற்றை ஆய்வு செய்து புத்தகம் எழுதினேன்.
குழந்தை விஞ்ஞானிகள்
ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. அந்த வருட போட்டிக்கு, 'அனைவருக்கும் சத்தான உணவு' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது நாங்கள் 'நெல் வயலில் மீன் வளர்க்க முடியுமா?' என்ற திட்டத்தை கையில் எடுத்தோம். நம்புங்கள், பழங்காலத்தில் மீன்கள் வயலில் இருந்தன. யூரியாக்கள், உரங்களைப் போட்டுப் போட்டு நாம்தான் மீன்களை அழித்துவிட்டோம்.
இந்த செயல்திட்டத்துக்காக சுமார் மூன்று மாதங்கள் வேலை பார்த்தோம். வட்ட, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக தேசிய அளவில் எங்கள் செயல்த்ட்டம் தேர்வானது. ஐந்து மாணவர் கொண்ட குழுவில், குழுத்தலைவி எட்டாம் வகுப்பு மாணவி. இதுவரைக்கும் விருத்தாச்சலத்தை தாண்டி வெளியே சென்றதில்லை. மாநாடு லக்னோவில் நடக்க இருந்தது. ஆசிரியர்களோ, பெற்றோர்களோ செல்ல முடியாத சூழலில், அறிவியல் இயக்க உறுப்பினர்களோடு மாணவி லக்னோ சென்றார். அப்துல் கலாமின் தலைமையில் அவர்கள் அனைவரும் 'குழந்தை விஞ்ஞானி' பட்டத்தை வென்று திரும்பினர்.
அந்த சிறுவர்களில் ஒருவரான குணசீலன் இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிக்கிறார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான அவருக்கு பெரிய பின்புலமில்லை. வேலைக்குப் போகவில்லையா என்று கேட்டதற்கு, 'கார்கூடல் செயல்திட்டம்தான் என்னை ஆராய்ச்சிக்கு வித்திட்டது' என்கிறார். இந்த மனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்கள்தான் நம் நாட்டுக்கு முக்கியத்தேவை.
கார்கூடல் நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்தபோது குழந்தைகளுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது வழக்கம். பொம்மைகளை வைத்து பாடம் படிப்பது, பொம்மைகள் செய்ய கற்றுக்கொள்வது ஆகிய செயல்பாடுகளில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டினர். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன்.
ராஜ்ய புரஸ்கார் விருது
சமூக சேவைகளில் ஈடுபாடு, விளையாட்டில் ஆர்வம், மின்சாரம் தொடர்பான அடிப்படை அறிவு, படிக்கத் தெரியாதவர்கள், முதியோர்களுக்கு கற்றுக்கொடுப்பது, சேமிக்கும் பழக்கம், அடிப்படை சமையல்களை கற்றுக் கொள்வது, சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குவது, அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறந்து விளங்கும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் என்னும் அரசு விருது, ஆளுநரின் கையால் வழங்கப்படும். 2001-ல் நடுநிலைப் பள்ளிகளிலேயே முதல்முறையாக எங்கள் பள்ளி மாணவர் வாங்கினார். ஊரே மகிழ்ந்து வியந்த தருணம் அது.
கணக்கும் இனிக்கும்
இப்போது கடலூர், மன்னம்பாடி அரசுப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிகிறேன். பொதுவாக பாடங்கள் எளிமையாக கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது அரசுப் பள்ளிகளிலும், டீச்சிங்கை விட கோச்சிங்தான் முக்கியமாக மாறியிருக்கிறது. மதிப்பெண்ணை மட்டுமே இலக்காகப் பார்க்காமல், அரசு ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்றார்.
அன்பாசிரியர் புகழேந்தி, >>'கணக்கும் இனிக்கும்' என்ற வலைத்தளத்தில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையான வகுப்புகளின் மாதிரி வினாத்தாள், கணக்குப் புதிர்கள், கணிதவியல் மேதைகளின் சுருக்க வரலாறு ஆகியவற்றைப் பதிவிடுகிறார். அத்தோடு மன்னம்பாடி பள்ளியின் பெயரில், வலைப்பக்கத்தை நிர்வகிக்கிறார். அதில் பள்ளி மாணவர்களை விவாதங்களில் பங்கெடுக்க வைத்து அவற்றை பதிவு செய்கிறார். மாணவர்களின் செயல்திட்டங்கள், கல்வி இணை செயல்பாடுகள் ஆகியவற்றையும் புகைப்படங்களோடு பதிவு செய்துவருகிறார். காண: >மன்னம்பாடி அரசுப்பள்ளி
இலக்கிய முகம்
இதுவரை இவர் எழுதி 8 நூல்கள் வெளி வந்துள்ளன. அன்பாசிரியர் புகழேந்திக்கு இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் என்பதால், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லியும், கவிதை படிக்கச் சொல்லியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களே மாணவர் மலரைத் தயாரிக்கின்றனர். கார்கூடல் பள்ளியில் தளிர் என்ற பெயரில் மாணவர் மலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது மன்னம்பாடி உயர்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் மாவட்ட கல்வி அலுவலரின் உரையோடு மாணவர் மலர் வெளியிடப்படுகிறது.
மாறி வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, இணையம் மூலம் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அன்பாசிரியர் புகழேந்தி. தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் கணினியைப் பெற்றவர், இப்போது பள்ளியை ஸ்மார்ட் வகுப்பறை ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ஆசிரியர் புகழேந்தியின் தொடர்பு எண்: 9488848519
*
'அன்பாசிரியர்' தொடரைப் பாராட்டி, சட்டீஸ்கரில் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் டாக்டர். சி.ஆர். பிரசன்னா ஐ.ஏ.எஸ். அனுப்பியுள்ள வாழ்த்து
வாழ்த்துகள், உங்களின் அன்பாசிரியர் கட்டுரைத் தொடரை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேவைகளை, எழுத்து ஊடகத்தின் வழியாக நீங்கள் வெளிக்கொணரும் விதத்துக்கு எனது பாராட்டுகள். இது ஆசிரியர்களை இன்னும் உற்சாகப்படுத்தி படித்த, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த தொடர், வெளியில் அதிகமாக அறியப்படாத நம் நாட்டின் உண்மையான நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!
நான் இந்த பெருமைக்குரிய சேவையில் இருப்பதற்கு எனது ஆசிரியர்கள் மட்டுமே காரணம்.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 18 - மகாலட்சுமி: மலைவாழ் மாணவர்களுக்காக மேன்மைப் பணி!
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
4 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago