தூத்துக்குடி: ஆய்வில் சிக்கியது புதிய சிங்கி இறால்

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய சிங்கி இறால் இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 51-வது சிங்கி இறால் இனம் இதுவாகும். இந்த புதிய சிங்கி இறாலை தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சியாளர் டி. வைத்தீஸ்வரன் கண்டறிந்துள்ளார்.

ஸ்குவாட் லாப்ஸ்டர் வகை சிங்கி இறால்கள், உலகம் முழுவதும் 930 இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் இந்திய கடல் பகுதியில் இதுவரை 50 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள முனிடாப்சிஸ் சிலிண்ட்ரோப்தால்மா 51வது வகையாகும்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கொட்டப்படும் கழிவுகளை ஆய்வு செய்த போது, அதிலிருந்து இந்த சிறிய சிங்கி இறால் மீன்கள் கிடைத்ததாக கூறுகிறார், ஆராய்ச்சியாளர் வைத்தீஸ்வரன்.

அவர் மேலும் கூறுகையில், ‘இந்த சிங்கி இறால்கள், தூத்துக்குடியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் 310 மீட்டர் ஆழத்தில் வசிக்கின்றன. இந்தியாவில் இந்த வகை சிங்கி இறால் இனம் தற்போது தான் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்குவாட் லாப்ஸ்டரை பொறுத்தவரை 6 குடும்பங்கள் உள்ளன. இதில் தூத்துக்குடி பகுதியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள முனிடாப்சிஸ் சிலிண்ட்ரோப்தால்மா, முனிடிடே குடும்பத்தை சேர்ந்தது.

இந்த சிங்கி இறால் மொத்தமே 2.3 செ.மீ. நீளம் தான் இருக்கும். எடை வெறும் 5 கிராம் தான். இது உண்ணக்கூடிய வகை சிங்கி இறால் அல்ல. இருப்பினும் பல்லுயிர் பெருக்கத்தில் இதன் பங்கு முக்கியமானது.

இந்த வகை சிங்கி இறால்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அரபிக் கடல் பகுதிகள், சாலமோன் தீவுகள், தைவான், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிஜி பகுதிகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது தான் முதல் முறையாக இந்தியாவில், குறிப்பாக மன்னார் வளைகுடா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே 48, 49-வது வகைகளான முனிடா ஹெட்ரகாந்தா, அகோனோனிடா எமினன்ஸ் ஆகிய இரண்டு இனங்களை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி கடல் பகுதியில் தான் கண்டறிந்தோம்.

மீதமுள்ள ஸ்குவாட் லாப்ஸ்டர் வகை சிங்கி இறால்களையும் கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்,’ என்றார்.

புதிய வரவு: தூத்துக்குடி கடல் பகுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள சிங்கி இறால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE