திரையரங்கம்… மனிதனின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த விஷயம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. நாகர்கோவில் நகரில் பாரம்பர்ய பெருமையோடு இருந்த திரையரங்குகள், வணிக வளாகங்களாக மாறியுள்ளன. அல்லது பூட்டப்பட்டு புதர் மண்டிப் போய் கிடக்கின்றன.
இதற்கெல்லாம் தொலைக்காட்சியின் விஸ்வரூப வளர்ச்சி, புதுப்படம் வெளியானதுமே `சிடி’யும் வெளியாவது… என, ஆயிரம், ஆயிரம் உப்புச்சப்பில்லாத காரணங்களை முன்வைத்தாலும், இதற்கு முழு முதற் காரணம் திரையரங்க உரிமையாளர்கள்தான்.
லட்சங்களைக் கொட்டி, படப் பெட்டியை வாங்கும் திரையரங்க முதலாளிகள், சில ஆயிரங்களை செலவு செய்து கூட, திரையரங்கத்தில் முறையான பராமரிப்பு பணிகளை செய்வது இல்லை.
கட்டணக் கொள்ளை
நாகர்கோவில் போன்ற நகராட்சிகளில் குளிர் சாதன வசதி கொண்ட திரையரங்குகளிலேயே, முதல் வகுப்பு கட்டணம் ரூ. 60-க்கும் கீழ்தான் வசூல் செய்ய வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், நாகர்கோவிலில் குறைந்தபட்ச கட்டணமே இந்த அளவுக்கு இல்லை என்பது தான் அதிரவைக்கும் உண்மை.
நாகர்கோவில் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கார்த்திகை, ராஜேஷ் திரையரங்குகள் மட்டுமே முழுக்க குளிர் சாதன வசதி கொண்டவை. ராஜாஸ் திரையரங்கம் பாக்ஸ் ஏ.சி வசதி கொண்டது. மற்ற திரையரங்குகளில் முறையான அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை.
கடிக்கும் கொசு
நாகர்கோவில் நகரில் மிகவும் பழைமை வாய்ந்த தங்கம் திரையரங்கில், இப்போது `வீரம்’ படம் ஓடுகிறது. ஆனால், தங்கம் தியேட்டரில் சென்று வீரம் பார்ப்பதற்கே வீரம் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு, அடிப்படை வசதிகளில் பின்னோக்கி இருக்கிறது. தியேட்டர் பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலும், மாஸ் ஹீரோக்களின் படத்தை மட்டும் வாங்கி ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.
தங்கம் திரையரங்கில் கொசுத் தொல்லையும் தலை விரித்தாடும் என்பதால், பெரும்பாலும் மாலை, இரவு காட்சிகளில் அனைத்து கதவுகளும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். கூடவே காற்றுக்காகவும் இந்த ஏற்பாடு. அப்படியெனில் டிஜிட்டல் சவுண்ட் என வசூலிக்கும் கட்டணத்தை என்னவென்று சொல்வது? என புலம்புகிறார்கள் நாகர்கோவில் ரசிகர்கள்.
ரூ. 200 வசூல்
வள்ளி தியேட்டர் தொடங்கி, குளிர் சாதன வசதி கொண்ட கார்த்திகை, ராஜேஷ் தியேட்டர் வரை, புது படங்களை திரையிடும் போது, அதிகபட்சமாக ஒரு டிக்கெட் ரூ. 200 வரை வசூல் செய்து விடுகிறார்கள். 15 நாள்கள் வரை கட்டணத்தை உயர்த்தி விட்டு மீண்டும் குறைத்துக் கொள்ள விதி இருக்கிறது. அதுவும் அபரிமிதமாக உயர்த்தக் கூடாது. ஆனால், நாகர்கோவில் திரையரங்குகளில் எப்போதுமே குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80-தான்.
கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் தாமஸ் கூறியதாவது:
நாகர்கோவில் திரையரங்குகளில் அரசு நிரணயித்ததை விட, அதிக அளவில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. சமீபத்தில் வள்ளி திரையரங்கில், நண்பர் ஒருவர் குடும்பத்துடன் `ஜில்லா’ திரைப்படம் பார்க்க சென்றிருந்தார். அங்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ. 200 வசூலித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த டிக்கெட்டில், `முதல் வகுப்பு’ என்று மட்டும்தான் போடப்பட்டிருந்தது. கட்டணம் பற்றி எதுவும் சொல்லப்பட வில்லை. அதே போல், திரையரங்கு கேன்டீன்களிலும் பொருள்களின் விலை அதிகம்.
திரையரங்குகளில் வசூல் செய்யும் பணத்துக்கு தக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்திருந்தாலும் பரவாயில்லை. பல திரையரங்குகளில் இருக்கை கள் கூட சரியாக இல்லை.
திரையரங்குகளில் முறையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், திரையரங்குகளில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய, கண்காணிப்பு குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றார் தாமஸ்.
பதிவிறக்கம் அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை திருட்டு சி.டி.க்கள் சரளமாக உலா வந்தன. மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருட்டு சி.டிக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் எதிர் விளைவு திரையரங்களுக்கு படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாகர்கோவிலில் தியேட்டர் கட்டணம் அதிகளவில் இருப்பதால், பெரும்பாலானோர் நாகர்கோவிலில் இருந்து ரயிலில் 15 ரூபாய் கட்டணத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள நல்ல திரையரங்குகளில், நவீன இசை நுட்பத்தில் படம் பார்த்து திரும்புகின்றனர்.
நாகர்கோவிலில் திரைப்படம் பார்ப்பதை விட, பாதிக்கும் குறைவாக திருவனந்தபுரத்தில் கட்டணம் இருப்பதாக சொல்கிறார் சுசீந்திரத்தை சேர்ந்த கணேசன். தியேட்டர் கட்டணம் அதிகளவில் இருப்பதால், பெரும்பாலானோர் இணையத்தில் புதிய திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த குமரி மாவட்ட திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
மற்றவை
18 hours ago
மற்றவை
14 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago