திருநெல்வேலி: ‘கிரீன் சிக்னலுக்கு’ ஏங்கும் கிழக்கு கடற்கரை ரயில் திட்டம்

By அ.அருள்தாசன்

கன்னியாகுமரியில் இருந்து காரைக்குடி வரை 462 கி.மீ. தொலைவுக்கு கிழக்குக் கடற்கரை வழியாக ரயில் பாதை அமைக்க ரூ.1,965 கோடியில் மதிப்பீடு தயாரித்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் வழித்தடம் மூலம் இணைக்கும் கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தென்தமிழக மக்களால் கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டால், இந்த வழித்தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக இணைக்கப்படும். இதனால், பொருளாரத்தில் பின்தங்கிய இப்பகுதி முன்னேற்றம் அடையும்.

முதன்மை பாதை

தற்போது, சென்னை– நாகர்கோவில் வழித்தடம் தமிழகத்தின் முதன்மை பாதையாக உள்ளது. இப்பாதை நாகர்கோவிலில் தொடங்கி திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

இப்பாதையில் இருந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி–திருச்செந்தூர், மணியாச்சி– தூத்துக்குடி, மதுரை– ராமேஸ்வரம் எனப் பாதைகள் பிரிந்து செல்கின்றன. பிரிந்து செல்லும் பாதைகள் கடற்கரை அருகே உள்ள நகரத்துடன் இணைந்து அத்துடன் நின்று விடுகிறது.

புதிய பாதை

கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க 2008-09-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி செய்ய அறிவிக்கப்பட்டது. இத் திட்டம் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை இணைக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கத் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி முடிவடைந்து ரயில்வே வாரியத்திடம் திட்ட மதிப்பீட்டை தெற்கு ரயில்வே சமர்பித்துள்ளது. ஆனால், ரயில்வே வாரியம் இத்திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வருவாய் ஆய்வு

பொதுவாக பல கோடி ரூபாய் செலவு செய்து புதிய வழித் தடத்தில் ரயில் பாதை அமைக்கும் முன்பு ரயில்வே வாரியம் மற்றும் திட்டக் குழுவானது அத்திட்டத்தால் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என ஆய்வு செய்யும். குறைந்த வருவாய் திட்டங்கள் ஆய்வுடன் கைவிடப்படும்.

கிழக்கு கடற்கரை ரயில் திட்டம் மூலம் முக்கிய துறைமுகம், புதிய மின்திட்டங்கள், சுற்றுலா தலங்கள், ஆன்மிகச் சுற்றுலா, தொழிற்சாலைகள், சரக்குப் போக்குவரத்து என பல்வேறு வழிகளில் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இத் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே துறை முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி கூறியதாவது: இந்த திட்டத்தை செயல்படுத்த தென்பகுதி மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ரயில்வே வாரியம் மற்றும் திட்டக் குழுவிடம் நேரில் விளக்கி அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கை கொடுக்கும்

இந்த திட்டத்துக்கான ஆய்வுப் பணி காரைக்குடி–ராமநாதபுரம், ராமநாதபுரம்-கன்னியாகுமரி என்று 2 பிரிவாக முடிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

462.47 கி.மீ. தொலைவிலான இத்திட்ட மதிப்பீடு ரூ.1,965.763 கோடியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மிகத் தலங்கள் உள்ளன. இப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிக வசதியாக அமையும்.

கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி ரூபாய் முதலீடுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடலோர மாவட்டங்கள் அதிகமாகப் பயன்பெறும். வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் இத்திட்டம் கை கொடுக்கும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

9 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்