தருமபுரி: இரண்டு அடி ஆழத்திலேயே பீறிட்டுக் கிளம்பிய தண்ணீர் - நகராட்சி காமெடியால் குலுங்கி சிரித்த மக்கள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி நகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் இரண்டு அடி ஆழத்திலேயே தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் போர்வேல் அமைத்த நகராட்சி நிர்வாகத்தின் காமெடியைக் கண்டு, தருமபுரி மக்கள் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 30-வது வார்டு, எஸ்.வி. சாலைக்கு நேற்று போர்வெல் அமைக்கும் வாகனமும், அதற்குத் தேவையான உபகரணங்களைச் சுமந்து வரும் வாகனமும் நேற்று காலை வந்தன. அங்குள்ள தாட்கோ அலுவலகம் எதிரில், நிபுணர் மூலம் போர்வெல் அமைக்க உறுதி செய்யப்பட்ட இடத்தில் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கற்பூர ஆராதனையுடன் சிறிய பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் போர்வெல் வாகனம் இயங்கத் தொடங்கியது. சுமார் இரண்டு அடி ஆழத்துக்கு தரையைத் துளைத்த உடனேயே, அணையைத் திறந்து விட்டதுபோல் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. பல இடங்களில் 500 அடி, 600 அடி தோண்டினாலும் வராத தண்ணீர், இரண்டு அடியிலேயே வந்து விட்டதால் போர்வேல் பணியாளர்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்தனர்.

‘எங்கள் அனுபவத்தில் இப்படியொரு அதிசயம் நடந்ததே இல்லை; நீரூற்று பார்த்த வல்லுநர் அபார திறமைசாலிதான்’ என்று சிலாகித்துப் பேசியபடியே, போர்வெல் அமைக்கும் பணியைத் தொடர்ந்தனர். சுமார் 20 அடி நீளம் கொண்ட இரண்டு ராடுகள் தரைக்குள் இறக்கப்பட்டன.

அப்போதுதான் தெரிந்தது…அவர்கள் துளையிட்டது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டக் குழாய் என்று. வயிறு குலுங்கச் சிரித்த போர்வெல் தொழிலாளர்கள், அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதற்குள் இந்த தகவல் தருமபுரி நகரில் பரவிவிட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நகராட்சியின் சாதனையைப் பார்த்து, நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

திமுக-வைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. தாமரைச்செல்வனின், நாடாளுமன்ற நிதி மூலம் நகராட்சிப் பகுதியில் போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, பணிக்கான ஒப்பந்த ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்த ஒப்பந்தாரர், நீரூற்று நிபுணர் மூலம் போர்வெல் அமைக்கத் தோதான இடம் பார்த்துள்ளார். நிலத்தடியில் ஏராளமான தண்ணீர் செல்லும் இடத்தைத்தான் அவர் தேர்வு செய்துள்ளார். அந்தோ பரிதாபம்…அது நிலத்தடி நீர் அல்ல…ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் செல்லும் தண்ணீர்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் சுமதி கூறுகையில், எம்.பி. நிதியில் போர்வெல் அமைக்கும் முன்பு, நகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசித்து, தரைக்கு அடியில் என்ன திட்டங்கள் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எம்.பி. தரப்பு அலட்சியத்தால், சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது. இதற்கெல்லாம் எம்.பி.-யிடம் தான் கட்டணம் வசூலிக்கப் போகிறோம் என்றார்.

தருமபுரி எம்.பி. தாமரைச்செல்வன் கூறுகையில், எம்.பி. நிதியை நகராட்சி வசம் தருவது மட்டும்தான் எங்கள் பணி. அதன்பிறகு, போர்வெல் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் ஆகியோர்தான் கண்காணிக்க வேண்டும். அவர்கள் குடிநீர்க் குழாயை உடைத்து விட்டு, எங்களைக் குறை கூறுகிறார்கள் என்றார்.

எது எப்படியோ…இன்னும் கொஞ்ச நாளைக்கு சிரித்து மகிழ தருமபுரி நகர மக்களுக்கு சுவையான காமெடிச் சம்பவம் கிடைத்து விட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE