பழனி தைப்பூசத் திருவிழாவில் நகரில் நுழையும் பக்தர்களிடம் நகர நுழைவுக் கட்டணமாக (டோல்கேட்) வாகனங்களுக்கு நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக போலி டிக்கெட் அச்சடித்து பகிரங்கமாக பணம் வசூல் செய்கின்றனர். டெண்டர் எடுத்தவர் ஆளும்கட்சி நபராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தயங்குவதால், தைப்பூசத் திருவிழாவில் பழனி வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். இந்த விழாக்களையொட்டி பழனி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். சாதாரண நாள்களில் தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அதனால், பழனி நகராட்சிக்குள் சீசன் நேரத்தில் தினசரி 40 ஆயிரம் வாகனங்களும், சாதாரண நாள்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
டெண்டர் முறைகள்
நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக் கும் வகையில், பழனி நகருக்குள் நுழையும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்பீட்டுக்கு நகராட்சி நகர நுழைவு வாயில் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு டெண்டர் விட்டது. டெண்டர் எடுத்தவர்கள், பழனி நகரில் நுழையும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் காருக்கு ரூ.30, வேனுக்கு ரூ.50, பஸ்ஸுக்கு ரூ.80 வசூலிக்க கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க நகராட்சி உரிமம் வழங்கியுள்ளது. ஆனால், டெண்டர் எடுத்த தனியார், நகராட்சி பெயரில் போலியாக டிக்கெட் அச்சடித்து காருக்கு ரூ. 50, வேனுக்கு ரூ.100, பஸ்ஸுக்கு ரூ.150 என அடாவடியாக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதனால், தற்போது தைப்பூசத் திருவிழாவுக்கு வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் கூறியது:
சாதாரண வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணத்துக்கு பிளக்ஸ் போர்டு வைக்கும் நகராட்சி, லட்சக்கணக்கான பக்தர்களிடம் வசூலிக்கக்கூடிய டோல்கேட் கட்டண விவரங்களை தகவல் பலகையாக நகர எல்கையில் நகராட்சி வைக்கலாம். தவறு செய்தால் தகவல் தெரிவிக்க தலைவர், ஆணையர் தொலைபேசி நம்பர் விவரங்களை வைத்திருந்தால் பக்தர்கள் அவர்கள் மீது நீதிமன்றத்தை ஆதாரங்களுடன் அணுகி சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், தகவல் பலகையே மாயமாகிவிட்டதால் பழனி வரும் வெளியூர் பக்தர்கள், நகராட்சியைத்தான் தவறாக நினைப்பார்கள் என்றார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளாக, டெண்டர் எடுத்தவர்கள் பழனி நகர நுழைவு வாயில் கட்டணத்தை நகராட்சி நிர்ணயித்ததைவிட கூடுதலாகத்தான் வசூலிக்கின்றனர்.
பெரும்பாலும் டெண்டர் எடுப்பவர்கள், ஆளும்கட்சி புள்ளியாக இருப்பதால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது டெண்டர் எடுத்ததாகக் கூறப்படும் மகுடீஸ்வரன், அ.தி.மு.க. தொகுதி செயலர். அவர் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் காட்டிக் கொள்வதால், அவரைப் பற்றி அமைச்சரிடம் நேரடியாக எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தைரியம் இல்லை. அதனால், அவர்கள் பகிரங்கமாக போலி டிக்கெட் அச்சடித்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்கின்றனர் என்றார்.
“எங்குமே நடக்காததை நாங்க செய்யவில்லையே'’
இதுகுறித்து அ.தி.மு.க. தொகுதி செயலர் மகுடீஸ்வரனிடம் கேட்டபோது, ரூ.30 லட்சம், 60 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் போனதை போட்டிப்போட்டு 3 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்தோம். தமிழகத்தில் எங்குமே நடக்காததை செய்யவில்லையே. நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்தால் நஷ்டம்தான் ஏற்பட்டது. அதனால், எங்களுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டோம். நகராட்சிதான் எப்படியாவது எடுத்து நடத்துங்கள் எனக் கேட்டனர். இது ஆட்சியர், எஸ்.பி. எல்லோருக்குமே தெரியுமே. நுழைவுக் கட்டணம் டெண்டர் பணத்தை வைத்துத்தான் பழனி நகராட்சி ஸ்பெஷல் கிரேடு அந்தஸ்தே பெற்றது என்றார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரவணக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது: நகராட்சி காருக்கு ரூ.30, வேனுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.80 மட்டுமே வசூலிக்கத்தான் கட்டணம் நிர்ணயித்துள்ளது. புகார் தொடர்பாக விசாரிக்கிறோம் என ஒற்றை வரியில் பட்டும்படாமல் பேசி முடித்தார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
9 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago