வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் முயற்சியாலேயே விஜயா விடுதலை ஆகியுள்ளார்.
உருக்கமான காதல்
விஜயா ஒரு நடனக் கலைஞர். ஆனால் மாபெரும் அரங்குகளின் மேடைகளில் நடனமாடும் கலைஞர் அல்ல. சாதாரண மக்களுக்காக வீதிகளில் நடனமாடும் நாடோடிக் குடும்பம் ஒன்றின் கழைக்கூத்தாடி கலைஞர் அவர். அவரின் நடனத்தால் மயங்கிய சுப்பிரமணியன் என்பவர் விஜயாவிடம் காதல் வயப்பட்டார். இதனால் சுப்பிரமணியனை அவரது சுற்றத்தார் ஒதுக்கினர். ஆனால் சுப்பிரமணியனோ தனது காதலில் உறுதியாக இருக்க விஜயாவும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார். இது தவிர, மாற்றுத் தொழில் ஏதேனும் கிடைக்கும் வரை தொடர்ந்து நடனமாடுவது என விஜயா முடிவு செய்தார். ஆனாலும் அவர்களின் கலைப்பயணம் தொடரவில்லை.
வாழ்க்கை மாறியது
கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் விஜயாவும், சுப்பிரமணியனும் சிறைக்குப் போனார்கள். வீதியோரம் உறங்கிய ஒரு நாள் இரவில் விஜயாவை பாலியல் வன்கொடுமைப்படுத்த ஒருவர் முயன்றதாகவும், அப்போது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள நடந்த போராட்டத்தில் இந்தக் கொலை நடந்ததாகவும் விஜயா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கொலையான நபர் வைத்திருந்த ரூ.500 பணத்தைப் பறிப்பதற்காக சுப்பிரமணியன் – விஜயா தம்பதியினர் அவர்களைக் கொன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆளுக்கொரு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேலூர் பெண்கள் சிறையில் விஜயா இருந்து வந்தார்.
சிறையில் இருந்த காலத்தில் அவர் பேசும் சக்தியை இழந்தார். நாளடைவில் அவர் மன நோயாளியாகவும் மாறிப் போனார். இப்படியே கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சிறையில் உருண்டோடிப் போனது.
நளினியின் முயற்சி
இதற்கிடையில் வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் கவனம் விஜயாவின் பக்கம் திரும்பியது. நளினி மட்டுமல்ல வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் அத்தனை பேரின் செல்லக் குழந்தையாக விஜயா மாறினார்.
இந்நிலையில் தன்னை சந்திக்க சிறைக்கு வந்த தனது வழக்கறிஞர் புகழேந்தியிடம் விஜயாவை பற்றி எடுத்துக் கூறிய நளினி, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டினார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புகழேந்தி ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முடிவை ஒட்டுமொத்த வேலூர் பெண்கள் சிறையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது. வழக்கு இழுத்துக் கொண்டு போகவே மிகவும் வருத்தமடைந்த நளினி, கடந்த அக்டோபர் 4-ம் தேதி புகழேந்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“பக்காவிற்கு மிகவும் முடியவில்லை. பக்காவிற்கு ஏதேனும் நடந்து விட்டால் இங்குள்ள எல்லோரும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து படுத்து விடுவார்கள். யாரையுமே தேற்ற முடியாது. அவளின் கடைசி காலத்திலாவது சிறை அடைப்பு, சீருடைப் பணியாளர்கள் என இல்லாமல் நிம்மதியாய், ஆசைப்பட்டதை சாப்பிட்டு, கோவில் குளங்களுக்கு போய் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, இந்த உலகை விட்டு போகட்டுமே. முடியாது என்றால் சொல்லி விடுங்கள்.
23 ஆண்டு கால சிறை வாசத்துக்குப் பிறகு அவளின் முடிவும் இங்கேயேதான் என நாங்கள் அனைவரும் மனதைத் தேற்றிக் கொள்ள ஆயத்தமாகி விடுகிறோம். ஆனால் அது எங்கள் அனைவருக்கும் தாங்கிக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத வலியாகவும், வேதனையாகவும்தான் இருக்கும்” என்று அந்தக் கடிதத்தில் நளினி குறிப்பிட்டுள்ளார்.
விஜயா விடுதலை
இந்நிலையில் புகழேந்தி நடத்திய இரண்டாண்டு கால சட்டப் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. இம்மாதம் 19-ம் தேதி விஜயா விடுதலையானார். வேலூர் அருகேயுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் புகழந்தி கூறியதாவது: விஜயாவின் விடுதலை வேலூர் பெண்கள் சிறையில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கைதிகள் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ச்சிக் கடலில் திளைத்துள்ளனர். விஜயாவின் விடுதலை அவரைப் போன்ற பல கைதிகளுக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்றார்.
22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். அவருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. எனினும் விஜயாவின் விடுதலையை தனக்கு கிடைத்த விடுதலையாகக் கருதி நளினி பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக புகழேந்தி தெரிவித்தார்.
இதற்கிடையே வேலூர் ஆண்கள் சிறையில் இருக்கும் சுப்பிரமணியனின் விடுதலைக்கான பணியை இப்போது தீவிரப்படுத்தியுள்ளதாகவும் புகழேந்தி கூறினார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
7 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago