உள்ளாட்சி: பட்டாம்பூச்சி விளைவும்... உள்ளாட்சி தேர்தல் களமும்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

நண்பர் சக்திவேல், “எனது கிராமத்தின் இயற்கை வளங்கள், அடிப்படை கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும். அதற்காக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதேசமயம் தயக்கமாகவும் இருக்கிறது. குடும்பத்தினர் ஒத்துழைப்பார்களா? பணிச்சூழல் இடம் கொடுக்குமா? அரசியல்வாதிகள் விடுவார்களா?” என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டார்.

இது சக்திவேலின் கேள்வி மட்டுமல்ல; அரசியலுக்கு வரத் துடிக்கும் இளைஞர்கள் அத்தனை பேரிடமும் தொக்கி நிற்கும் கேள்வியும் இதுதான்!

பொதுவெளியில் இப்படி ஒரு பேச்சு இருக்கிறது. “மெரினாவில் கூடியது புரட்சி எல்லாம் இல்லை. இந்தத் தலைமுறைக்கு புரட்சி என்றால் என்னவென்றே தெரியாது. இவர்களிடம் திட்டமிட்டுத் திரளும் ஒழுங்கமைப்பும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் சமீபத்தில் தமிழகத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் வகையிலான அரசியல் பிரச்சினையில் ஒன்று கூடியிருப்பார்கள். ஜல்லிக்கட்டுக்காக அவர்கள் கூடியது உல்லாச மனநிலையிலானது” என்பதுதான் அது.

ஏன் இப்படியும் யோசிக்கலாமே. அந்தக் கூட்டம் உல்லாச மனநிலையில் கூடியது என்றால் அந்தப் பிரம்மாண்டமான கூட்டத்தில் சிறு அசம்பாவிதமும் நடக்கவில்லையே, எப்படி? பொதுப் பிரச்சினைக்காக 50 பேர் திரண்டாலே நம் ஆட்கள் ஆளுக்கொரு பக்கம் முறுக்கிக்கொண்டு நிற்பார்கள். ஆனால், அங்கே மொத்தக் குரலும் ஒற்றைக் குரலாக மாறியது எப்படி? எந்த முன்திட்டமிடலும், வழிகாட்டுதலும் இல்லாமலேயே லட்சங்களிலான அந்தக் கூட்டம் ஐம்பதும் நூறும் கொண்ட குழுக்களாக தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டது எப்படி? எல்லாவற்றும் மேலாக கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார்? ஒருங்கிணைத்தது யார்? தலைமை ஏற்றது யார்? தலைமையைத் தேர்வு செய்தது யார்? குடிநீர் வந்தது எப்படி? உணவு வந்தது எப்படி? கழிப்பறை, குளியலறைக் கட்டமைப்புகள் வந்தது எப்படி? இவற்றுக்கு எல்லாம் பணம் வந்தது எப்படி? முதன்முதலில் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார்? முடிவாக கூட்டத்தை முடித்துவைத்தது யார்?

ஆழமாக யோசித்தால், இந்த அணித்திரள் ஓர் அறிவியல் அல்லது கணிதம். இந்த அறிவியலை இன்னும் நெருக்கமாக ஊடுருவினால் இதனை பட்டாம்பூச்சி விளைவுடனும் ஒப்பிடலாம். நமது சமூகத்தில் நுட்பமாக நிகழும் பல்வேறுப்பட்ட சலனங்களால் ஏற்படும் மிகப் பெரிய விளைவு அல்லது வெடிப்பாக இதைக் கருதலாம். காலம் காலமாக நீடிக்கும் சமூக, பொருளாதார, சாதிய ஏற்றத் தாழ்வுகள், இயற்கை வளங்கள், எளிய மக்கள் மீதான சுரண்டல்கள், கேள்வி கேட்கவியலாத, ஜனநாயகமற்ற அரசியல், அரசு நிர்வாகச் சூழல், அரசியல் பங்கேற்பில் சாமானியனின் சாத்தியமின்மை, அடிப்படை தேவைகளுக்குக் கூட அல்லாடுவது... இவை எல்லாம் ஒன்றுசேர்ந்தே ஜல்லிக்கட்டு என்னும் வடிவத்தில் பட்டாம்பூச்சி விளைவாக வெடித்தது. வரலாறு ஒரே மாதிரியான நிகழ்வுகளாலும் ஒரே மாதிரியான நபர்களாலும் உருவாவது இல்லை. வரலாறு தனது காலகட்டத்தின் தேவைக்கேற்ப மனிதர்களை உருவாக்கிக்கொள்ளும்.

அப்படிதான் சக்திவேல் போன்ற இளைஞனைக் கருத வேண்டும். இவரைப் போன்ற இளைஞர்களின் அரசியல் நுழைவுக்கானத் தயக்கங்கள் பட்டாம்பூச்சி விளைவைப் போன்றே விரைவில் ஒருநாள் தகர்க்கப்படும். அதற்கான சலனங்கள்தான் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் அரசியல் சூழல்கள். காயம்பட்ட உடலில் ஏற்படும் நெரிக் கட்டின் மூலம் உடல் தனது ஆரோக்கியத்தை தகவமைத்துக்கொள்வதைப் போன்று மோசமான அரசியல் சூழல்களின் மூலம் அரசியல் களம் தன்னைத் தானே ஆரோக்கியமானதாக தகவமைத்துக்கொள்வதைப் போன்றதுதான் இதுவும்.

உண்மையில், இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு இங்கே தடைகள் எதுவும் இல்லை. சுய தயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், ‘சட்டப் பஞ்சாயத்து இயக்கம்’ செந்தில் ஆறுமுகம், சிவஇளங்கோ, மதுரை நந்தினி, பூவுலகின் நண்பர்கள், எவிடென்ஸ் கதிர், ஹென்றி டிஃபேன், ‘பாடம்’ நாராயணன், ‘ஏக்தா பரிஷத்’ தன்ராஜ், ‘கடவுளின் சேவகர்கள்’ இனாமுல் ஹசன், ஆனந்தி அம்மாள், ப்யூஸ் மானுஷ், அருள்தாஸ், நந்தகுமார்... உட்பட பலர் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு சமூகத்துக்காகப் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்காகப் போராடும் இவர்களின் போராட்டங்களில் நம்மில் பலர் எத்தனை பேர் கலந்துக்கொண்டோம் என்பதுதான் கேள்வி.

யக்கங்களை உடைக்க ஒரு கதை சொல் கிறேன். நீங்கள் இதனைப் படித்துக்கொண்டி ருக்கும் நிமிடங்களில் நடந்துகொண்டிருக்கும் உண்மை சம்பவம் இது. வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ‘குடிமராமத்து’ திட்டத்தை அறிவித்திருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் கவனிக்க வேண்டிய ஒன்று. கோவை வ.உ.சி. பூங்காவில் ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய கூட்டத்தின் குழுக்களில் மணிகண்டனின் குழுவும் ஒன்று. போராட்டம் முடிந்ததும் அந்தக் குழுவைக் கலைத்துவிட விரும்பவில்லை அவர். ஆக்கபூர்வமாக பயன்படுத்த விரும்பினார். இதோ அவர்கள் இப்போது கோவை பேரூர் குளத்தில் குழுவாக இருக்கிறார்கள்.

“கோவை பேரூர் ஏரி நீண்டகாலமாக சீமைக் கருவேலம் மரங்களாலும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளாலும் புதர் மண்டிக் கிடந்தது. கடந்த ஆண்டு நீர்வரத்தும் நின்று விட்டது. எனவே, குளத்தையும், வாய்க்காலையும் சுத்தப்படுத்த நினைத்தோம். ஜல்லிக்கட்டுக்காக வந்த நண்பர்களை ஒருங்கிணைத்தோம். முதல்நாள் நான்கு பேர் மட்டும் வந்தார்கள். கடப்பாரை, அரிவாள் கொண்டு நான்கு பேர் சீமைக் கருவேல மரங்களை அகற்றத் தொடங்கினோம். மறுநாள் பத்து பேர் வந்தார்கள். கைக்காசு செலவழித்து ஒரு ஜே.சி.பி. இயந்திரத்தை வரவழைத்தோம். அந்த வழியில் செல்பவர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். ஆட்கள் வருவது அதிகரித்தது. விஷயம் கேள்விப்பட்ட சில தொழிலதிபர்கள் மேலும் சில ஜே.சி.பி. இயந்திரத்தை அனுப்பினார்கள். தகவல் பரவியதில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். அவர்கள் தரப்பில் இருந்தும் ஆட்களை அனுப்பினார்கள். இதோ இன்று 13-வது நாளாக வேலை நடக்கிறது. இதுவரை 94 ஜே.சி.பி இயந்திரங்கள் வந்திருக்கின்றன. சுமார் 300 பேர் கூடியிருக்கிறோம். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் 90 சதவீதம் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோம். இதே வேகத்தில் இந்தக் குளத்தின் நீரை கொண்டுவரும் 11 கி.மீ நீளம் கொண்ட குனியமுத்தூர் கால்வாயின் ஆக்கிரமிப்புகளையும் இன்னும் சில நாட்களில் அப்புறப்படுத்திவிடுவோம்.” என்கிறார்கள்.

மேற்கண்ட சம்பவம் சொல்லும் உண்மை என்ன? ஆள் பலம் இல்லை, ஆதரிப்போர் இல்லை என்று உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இறங்க தயங்க வேண்டாம். களத்தில் இறங்குங்கள். கைகோக்க ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்!

- தொடரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்