ஆம்பூர்: 40 அடி தூரம் நகர்த்தப்படும் 300 ஆண்டு பழமையான கோயில்

ஆம்பூர் அருகே 300 ஆண்டு பழமையான ஆதி பெத்தபல்லி கெங்கையம்மன் கோயில் நவீன தொழில்நுட்பத்தில் 40 அடிதூரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்யும் பணி நடந்துவருகிறது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக, ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணி தொடங்க உள்ள நிலையில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆதி பெத்தபல்லி கெங்கையம்மன் கோயில் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு விசாய நிலத்தில் ஏர் உழும் பணியின்போது நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலம் உடைய அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் ஓலை கொட்டகையில் வைத்து அம்மன் வழிபாடு நடத்தப்பட்டுவந்தது.

கடந்த 1960-ம் ஆண்டு சிறிய அளவிலான சிமென்ட் தளத்தால் ஆன கருவறையில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பொதுமக்கள் உதவியுடன் 3 நிலைகள் கொண்ட 36 அடி உயரக் கோபுரத்துடன் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கண்ணடிகுப்பம், விண்ணமங்கலம், காட்டுகொல்லை, ஆத்துகொல்லை, ஆலங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானவர்கள் இந்த கோயில் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை, தீபாவளி மற்றும் மார்கழி 30 நாட்களும் பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு நடக்கும். வைகாசி முதல் புதன்கிழமை கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும்.

இப்படிப்பட்ட கோயிலை இடிக்கவேண்டிய நிலை ஏற்பட்ட போது, பக்தர்களுக்கு அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட ஆலோசனையின் முடிவில் கோயிலை இடிக்காமல் இடமாற்றம் செய்யும் நவீன தொழில்நுட்ப உதவியை நாட முடிவு செய்யப்பட்டது. இணையதளத்தில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி என்ற தனியார் நிறுவனத்தின் உதவி கோரப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்ததில், ஆதி பெத்தப்பல்லி கெங்கையம்மன் கோயிலை சேதாரங்கள் இல்லாமல் இடமாற்றம் செய்ய உறுதி அளித்துள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தில் கோயில் இடிக்கப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள் தாராளமாக அளித்த நிதி உதவியால் 36 அடி உயரம் கொண்ட கோயில், சுமார் 40 அடி தூரத்திற்கு இடமாற்றம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, ஆதி பெத்தபல்லி கெங்கையம்மன் திருக்கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் மூர்த்தி கூறுகையில், “சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எங்கள் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதற்கான இழப்பீட்டு தொகை எங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை. இப்போது, இரண்டாவது முறையாக எங்கள் கோயில் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் வருத்தம் அடைந்தனர். வேறு வழியில்லாமல் 36 அடி உயர கோபுரத்துடன் கூடிய கோயிலை மொத்தமாக இடித்துவிட்டு புதிய இடத்தில் கோயில் நிர்மாணிக்க தீர்மானித்தோம்.

அதற்குள் கோயிலை இடிக்காமல் நகர்த்தும் திட்டத்தை கையில் எடுத்தோம். எங்கள் கோயிலை பார்வையிட்ட தனியார் நிறுவனம் ரூ.3 லட்சம் செலவில் இடமாற்றம் செய்ய உள்ளனர். 20 நாட்களில் கோயில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தற்போது இடமாற்றம் செய்யப்படும் கோயில் கோபுரத்தை, ராஜகோபுரமாக மாற்றி புதிய கோயில் எழுப்பும் பணியில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்களும், கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE