வாசகர் தரத்தை உயர்த்தும் பத்திரிகை

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல்லை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் பேசியதாவது:

'தமிழகத்தில் உள்ள அத்தனை அறிவு ஜீவிகளின் பங்கும் 'தி இந்து'வில் இருக்கிறது. இதற்கு வாசகர்களே ஆசிரியர்கள். வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது வேறு. வாசகர் தரத்தை உயர்த்துவது என்பது வேறு. இவற்றில் வாசகர் தரத்தை உயர்த்தும்போதுதான் ஒரு பத்திரிகை உயரும். அவ்வாறு தேர்ந்த வாசகர்களை உருவாக்கும் பணியை 'தி இந்து' செய்து வருகிறது.

வாசகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பும் படைப்புகளை கொடுத்து வருகிறது. நான் படித்தது 10-ம் வகுப்பு தான். ஆனால் பன்மொழியில் எனது படைப்புகள் வருகின்றன. இதற்கு காரணம் எனக்கு தெரியாததை அறிவுபூர்வமான நண்பர்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன். இதுபோல் அனைத்து வித தகவல்களையும் தெரிந்துகொள்ள 'தி இந்து' பத்திரிகையை படியுங்கள்.

வாசகர்களிடம் இருந்து வரும் கடிதமே பத்திரிகையின் அங்கீகாரம். ஏராளமான படைப்பாளிகளை உருவாக்கும் தளத்தை 'தி இந்து' ஏற்படுத்தியுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE