சத்தியாகிரகம் என்ற புதிய உணர்வும் கோட்பாடும் காந்தியிடம் துளிர்விட்டு அது மற்றவர்களிடமும் தொற்றிக்கொண்டதையும் சத்தியாகிரகம் என்பது என்னவென்று காந்தி விளக்கியதையும் கடந்த இரு அத்தியாயங்களிலும் பார்த்தோம். கருத்தளவில் சரி, நடைமுறையில் சத்தியாகிரகம் எப்படி சாத்தியமானது, அது எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன என்பதையெல்லாம் பற்றி இந்த அத்தியாயத்திலும் அடுத்த அத்தியாயத்திலும் பார்க்கலாம். காந்தியின் முக்கியமான போராட்டங்களைப் பற்றி விரிவாகப் பிறகு பார்க்கவிருக்கிறோம் என்றாலும் சத்தியாகிரகம் பிரயோகிக்கப்பட்ட முதல் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்பது சத்தியாகிரகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
கருப்புச் சட்டம்…
ஆசியர்களை அடிமையாக ஆக்கும் முயற்சியில் ட்ரான்ஸ்வாலின் ஆங்கிலேய அரசு கொண்டுவந்திருந்த அவசரச் சட்டம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இந்தச் சட்டம் ‘ஆசியப் பதிவுச் சட்டம்’ என்று அழைக்கப்பட்டாலும் ஆசியர்கள் இந்தச் சட்டத்தை ‘கருப்பர்கள் சட்டம்’ என்றே அழைத்தார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற முதல் கூட்டத்தில் சத்தியாகிரகக் கோட்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டு (அப்போது ‘சாத்விக எதிர்ப்பு’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கட்டும்) அந்த வழியில்தான் தங்கள் போராட்டம் நடக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அனைவரும் உறுதிபூண்டார்கள் அல்லவா! அதன்பின் காந்தி உடனடியாகப் போராட்டத்தில் இறங்கிவிடவில்லை.
தென்னாப்பிரிக்கக் காலம் தொடங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை காந்தி மேற்கொண்ட போராட்டங்கள், செயல்பாடுகள் போன்றவை எல்லாவற்றிலும் இந்த நிதானத்தைக் காணலாம். முதலில் தன் தரப்பில் உள்ளோருக்குத் தன் வழிமுறைகளையும் செயல்திட்டங்களையும் எடுத்துச் சொல்லி நன்றாகப் புரியவைப்பார். அவர் தரப்பிலேயே சிலருக்கு இது ரொம்பவும் மென்மையான போக்கு, இன்னும் கொஞ்சம் தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்கலாம் என்ற கருத்து இருக்கும், அந்தக் கருத்து காரணமாக காந்தியிடம் விரோதம் காட்டவும் ஆரம்பிப்பார்கள். அவர்களுடன் விடாமல் உரையாடல் நிகழ்த்துவார், அடித்தால் கூட வாங்கிக்கொள்வார். கடைசியில் அவர்கள் மனமாற்றம் அடைவார்கள், அல்லது மிக அரிதாக காந்தித் தரப்பிலிருந்து விலகிவிடுவார்கள். அப்படி அவர்கள் விலகினாலும் அவர்களை காந்தி எதிரிகளாகப் பார்ப்பதே இல்லை, தன்னுடன் மாறுபட்ட நண்பர்களாகத்தான் கருதுவார். தன் தரப்பினருக்குப் புரிய வைத்தபின், போராட்டம் தொடங்குவதற்கு முன் எதிர்த் தரப்புக்கு மனுபோடுதல், பேச்சுவார்த்தைக்கு முயன்றுபார்த்தல், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஆதரவு திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு அவற்றால் பலனேதும் இல்லாதபோதுதான் போராட்டத்தை காந்தி தொடங்குவார்.
இம்பீரியல் கூட்டத்துக்குப் பிறகு…
இந்தியர்களை அடிமைகள் போல ஆக்கும் அவசரச் சட்டத்தை எதிர்த்து இம்பீரியல் அரங்கில் கூட்டம் நடத்திய ஒரு வாரத்தில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டது. கட்டாயமாகப் பதிவுசெய்வதிலிருந்து இந்தியப் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தாங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் போராட்ட இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகப் பலரும் கருதினார்கள். இந்தச் சிறு வெற்றி கிடைத்ததும் காந்திக்கு வேறு சில யோசனைகள் தோன்றின. சத்தியாகிரகத்தைத் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்று அங்கே ஆதரவு திரட்டி, அரசரிடம் செல்வாக்கு செலுத்தி ட்ரான்ஸ்வால் அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய முடியுமா என்று முயன்று பார்க்க காந்தி முடிவெடுத்தார்.
இங்கிலாந்தில் காந்தி…
எச்.ஓ. அலி என்ற இஸ்லாமிய நண்பருடன் இங்கிலாந்து சென்ற காந்தி அங்கே பிரிட்டனின் காலனியாதிக்க நாடுகளின் செயலர் எல்ஜின் பிரபு உள்ளிட்டோரைச் சந்தித்தார். இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்களின் பிரதிநிதியாக இருந்த தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்தது காந்திக்கு ஆத்மார்த்தமான திருப்தியை ஏற்படுத்தியது. தாதாபாய், காந்தியின் முயற்சிகளில் உறுதுணையாக இருந்தார்.
இங்கிலாந்தில் அப்போது காந்தி இருந்த ஆறு வாரங்களில் ஆங்கிலேயர்கள் பலரும் அவருக்கு நண்பர்களானார்கள். காந்தியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் இந்தியர்களின் போராட்டத்துக்கு தார்மிக ரீதியிலான ஆதரவு கொடுத்ததுடன் காந்திக்கும் பல விஷயங்களில் உதவினார்கள். ‘இரக்க குணம் என்பது மாநிறத் தோல் உடையவர்களுக்கு (இந்தியர்களுக்கு) மட்டுமே சொந்தமானது அல்ல’ என்று காந்தி அதற்குப் பிறகு குறிப்பிட்டார்.
சத்தியாகிரகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று எதிர்த் தரப்பிலிருந்து இதயங்களை வெல்வது. எதிர்த் தரப்பில் நம் நோக்கத்தை ஒருவர் புரிந்துகொண்டால் கூட வெற்றிதான். அந்த ஒருவர் இருவராவார், இருவர் பலராவார்கள். இப்படியே விரிந்துகொண்டு போனால் நம் நோக்கம், போராட்டம் வெற்றியடைவதில் அவர்களும் முக்கியக் காரணமாக இருப்பார்கள். தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்திலிருந்து இந்தியாவில் நடந்த உப்பு சத்தியாகிரகம், ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் ஆகிய அனைத்துக்குமே உலகம் முழுவதிலும் உள்ள ‘வெள்ளைத் தோலினர்’ குறிப்பாகக் கணிசமான ஆங்கிலேயரின் ஆதரவு கிடைத்தது. இப்படி, எல்லாத் திசையிலிருந்தும் இந்தியர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் கிடைத்தது தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசுக்கும் சரி இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கும் சரி கடுமையான தார்மிக அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ஏமாற்றிய எல்ஜின் பிரபு
வெற்றிகரமான சந்திப்புகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா திரும்பும் வழியில் போர்த்துகீசியத் தீவு ஒன்றில் காந்தியும் அவரது நண்பரும் வந்த கப்பல் சற்றே இடைநின்றது. இந்தியர்களுக்கு எதிரான சட்டத்துக்கு எல்ஜின் பிரபு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தந்தி அங்கே அவர்களுக்குக் கிடைக்கவே காந்திக்கும் அவரது நண்பருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
காந்தி தென்னாப்பிரிக்கா திரும்பிய பிறகுதான் எல்ஜின் பிரபு இந்தியர்கள் அனைவரையும் ஏமாற்றியது தெரிய வந்தது. அதுவரை ஆங்கிலேய அரசரின் பிரதிநிதியின் கீழ் ஆட்சியில் இருந்த ட்ரான்ஸ்வால் பகுதி ஜனவரி, 1, 1907-லிருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கிலேயர்களின் சுயாதீன ஆட்சிக்குள் வந்தது. ரத்து செய்யப்பட்ட சட்டத்தைப் புதிய அரசின் கீழ் மறுபடியும் அமல்படுத்தினார்கள்.
வஞ்சிக்கப்பட்ட உணர்வுடன் இருந்த காந்தியும் பிற இந்தியர்களும் இந்தச் சட்டத்தைத் துளியும் மதிக்கப் போவதில்லை என்றும் சத்தியாகிரகத்தை அதன் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். அச்சத்தின் காரணமாகச் சிலர் புதிய சட்டத்தின்படி தங்களைப் பதிவுசெய்துகொண்டு பர்மிட்டுகளைப் பெற்றாலும் பலரும் பதிவுசெய்ய மறுத்துவிட்டார்கள். அப்படிச் செய்யத் தவறியவர்கள் ட்ரான்ஸ்வாலை விட்டு வெளியேறும்படி எச்சரித்தும், வெளியேறாவிட்டால் கைதுசெய்யப்படுவார்கள் என்று எச்சரித்தும் மக்கள் அதற்கு அடிபணியவில்லை. இதனால் கைதுப் படலம் ஆரம்பித்தது.
சிறை என்றொரு உத்தி…
காந்தி உட்பட பலரும் தாமாக முன்வந்து கைதானார்கள். காந்தி தனக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கும்படி நீதிபதியை வேண்டிக்கொண்டார். நீதிபதியோ இரண்டு மாதச் சிறைத் தண்டனையை மட்டும் வழங்கினார்.
அதுதான் காந்தி முதன்முறையாகச் சிறை சென்ற தருணம். அப்போதிலிருந்து 1942 வரை மொத்தம் 13 முறை சிறைசென்றார். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் 6 ஆண்டுகள் பதினோரு மாதங்கள் காந்தி சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். சிலதடவை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் குறைக்கப்படாமல் தண்டனையை அனுபவித்திருந்தால் 11 ஆண்டுகள் 19 நாட்கள் சிறைவாசம் அனுபவித்திருப்பார் என்று ஒரு கணக்கு சொல்கிறது. தனது சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாகவே சிறைக்குச் செல்வதை காந்தி மாற்றிக்கொண்டார். சிறை மட்டுமல்ல, எதுவும் ஒரு சத்தியாகிரகியை அச்சுறுத்தாது என்று காட்டவே இதை ஒரு போராட்ட உத்தியாக வகுத்தார். அதை மற்றவர்களும் உற்சாகமாகப் பின்பற்றினார்கள்.
காந்தி உள்ளிட்டோரின் கைதுகளைப் பார்த்தபின் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படும் என்று முதலில் ஆங்கிலேயர் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். போகப் போக, திருவிழாவுக்குச் செல்ல ஆர்வத்துடன் புறப்படும் குழந்தைகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து கைதானார்கள். சிறைகள் நிரம்பி வழிந்தன. சிறைக்குள் காந்தி சமையல்காரர், தோட்டக்காரர், ஆசிரியர், மாணவர், சிறைக்குள் இருந்தபடியே போராட்டத்தை வழிநடத்தும் தலைவர் என்று பல பாத்திரங்களை வகித்தார். சிறையில் கிடைத்த நேரத்தில் புத்தகங்களை வாசித்தார். குறிப்பாக, அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொரோவின் எழுத்துக்களை இந்தச் சிறைவாசத்தின்போதுதான் காந்தி வாசித்தார்.
குழப்பமான சமரசம்
ஒரு கட்டத்தில் ஜெனரல் ஸ்மட்ஸுடனான சமரசப் பேச்சு வார்த்தைக்கு காந்தி அழைக்கப்பட்டார். அவர் அழைக்கப்படுவதற்கு முன்பு சமரசத் தீர்மானம் காந்தியின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. ‘இந்தியர்கள் கட்டாயச் சட்டத்தின் பேரில் இல்லாமல் தாமாக முன்வந்து பதிவுசெய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ‘ஆசியப் பதிவுச் சட்டம்’ சட்டம் விலக்கிக்கொள்ளப்படும்’ என்பதுதான் அந்தச் சமரசத்தின் சாராம்சம்.
இந்த சமரசத்தின் வாசகங்கள் குழப்பமாக இருந்ததால் காந்தியும் அவரது நண்பர்களும் முதலில் தயங்கினாலும் இந்த சமரசமே ஒரு நல்ல தொடக்கம் என்று கருதியதால் ஒப்புக்கொண்டார்கள். அதன்படி காந்தியும் ஏனையோரும் விடுவிக்கப்பட்டனர். வெளியில் சென்றதும் சமரசத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு எல்லோரும் தங்கள் விவரங்களைத் தாமாகப் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இருபத்தியோராவது முறையும்…
கணிசமானோர் ஜெனரல் ஸ்மட்ஸின் வாக்குறுதியை நம்பத் தயாரில்லை. ‘ஒரு சத்தியாகிரகி தனது எதிர்த் தரப்பை (‘எதிரி’ என்ற சொல்லை காந்தி பயன்படுத்தவில்லை) நம்புவதற்கு அச்சப்படவே கூடாது. ஒரு சத்தியாகிரகியை அவரது எதிர்த் தரப்பு இருபது முறை ஏமாற்றினாலும் இருபத்தியோராவது தடவையும் தனது எதிர்த் தரப்பை நம்புவதற்கு சத்தியாகிரகி தயாராக இருக்க வேண்டும்’ என்றார் காந்தி.
காந்தி கூறியதைப் பலர் ஏற்றுக்கொண்டார்கள். கணிசமானோர் மனமில்லாமல், ஆனால் காந்தியின் வாக்கை மீற முடியாமல் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய ஒப்புக்கொண்டனர். ஆனால், சில பதானியர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். காந்தி, தான் முதல் ஆளாகப் பதிவுசெய்யப் போவதாகச் சொன்னதற்கு, அப்படிச் செய்தால் அவரைக் கொன்றுவிடுவோம் என்று பதானியர்கள் அச்சுறுத்தினார்கள். பதிவு செய்வதற்காகக் குறிக்கப்பட்ட தினத்தன்று காந்தி முதல் ஆளாகச் சென்றார். அவரை பதானியர்கள் கடுமையாகத் தாக்கியதில் உதடு கிழிந்து போய் முகமெல்லாம் காயத்தோடு காந்தி மயக்கமடைந்தார். எனினும் மயக்கம் தெளிந்ததும் பதிவேட்டில் தன் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று காந்தி வேண்டுகோள் விடுத்தார். பதிவு அதிகாரியான சாம்னீ, ‘இப்படி அடிபட்டுக் கிடக்கும்போது பதிவுசெய்வதற்கு ஏன் இந்த அவசரம்?’ என்று கேட்டும் காந்தி விடாப்பிடியாக இருந்தார். பதிவேடுகளை எடுத்துக்கொண்டு திரும்பும் சாம்னீயின் கண்களின் கண்ணீரைக் கண்ட காந்தி இப்படி எழுதுகிறார்: “நான் அவரைக் கடுமையாகத் தாக்கிப் பலமுறை எழுதியிருக்கிறேன்; ஆனால் சில நிகழ்வுகளின் தாக்கம் மனிதனின் இதயத்தை எப்படி மென்மையாக ஆக்குகிறது என்பதை இதன் மூலம் உணர்ந்தேன்.”
சத்தியாகிரகத்தின் பெருவலிமை இது. நம்முடன் உடன்பாடாமலும் நம்மை ஒடுக்கியும் வந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவருக்கும் உண்மையில் மெல்லிய இதயம் இருக்கும்; அந்த மென்மை எங்கேயோ ஒளிந்திருக்கும். அந்த மென்மையை வெளிக்கொண்டுவருவதற்காக எந்த வித வன்மையையும் ஒரு சத்தியாகிரகி சந்திப்பது சத்தியாகிரகத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்று.
காந்தியைத் தொடர்ந்து பலரும் பதிவுசெய்தார்கள். எனினும், ஜெனரல் ஸ்மட்ஸ் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. ‘கருப்புச் சட்ட’த்தைத் திரும்பப் பெறாததுடன் அதை மேலும் கடுமையாக்கினார். ஏற்கெனவே, காந்தி விலைபோய்விட்டதாக பதான்கள் உள்ளிட்ட இந்தியத் தரப்புகள் பல அவர் மீது குற்றம்சாட்டிவந்த நிலையில் ஜெனரல் ஸ்மட்ஸின் முடிவால் காந்தி மீது இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கையில் அடி விழுந்தது.
எனினும் காந்தி தளரவில்லை. தனது சத்தியாகிரகத்துக்கு விடுக்கப்பட்ட சோதனையாகவே இதையெல்லாம் எடுத்துக்கொண்டார். சத்தியாகிரகத்தின் நற்பண்புகளில் ஒன்று, அது எதிராளியின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்தி உண்மையை உலகறியச் செய்வதுதான் என்கிறார் காந்தி. இப்படி அம்பலப்படுத்துவதனால் எதிராளி தனது கெட்ட நோக்கங்களை உதறித் தள்ளுவதற்கு சத்தியாகிரகம் மேலும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. அப்போதும் எதிராளி தன்னைத் திருத்திக்கொள்ளவில்லையென்றால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெளிவு பெறுவதுடன் தங்கள் உணர்வுகளில் வலுவும் பெறுகிறார்கள். அப்போது, இதையெல்லாம் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு யார் நல்லவர், யார் தீயவர் என்பது தெளிவாகப் புரிந்துவிடும். இதன் பிறகும் எதிராளி தனது தீய நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தால் உலகினரின் கண்களில் பெருந்தீமையாக அவர் உருவெடுப்பதைத் தவிர்க்கவே முடியாது. இதெல்லாம் சேர்ந்து எதிராளியின் குற்றவுணர்ச்சியைத் தூண்டுவதுடன், குறைந்தபட்சம் உலகினரின் கண்களுக்குத் தன்னை நல்லவராகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். சத்தியாகிரகத்தின் வெற்றி அதிலிருந்து துலக்கமாகும்.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்தியாவில் நடத்திய சத்தியாகிரகங்கள் எல்லாவற்றிலும் காந்தி இந்த உத்தியைப் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம். எதிராளியை முழு மனதுடன் நம்புதல், அவருக்கு அவகாசம் கொடுத்தல், அவர் தவறினால் மேலும் மேலும் வாய்ப்புகள் கொடுத்தல் இவையெல்லாவற்றையும் மேலோட்டமாக ஒருவர் நோக்கும்போது எதிராளிக்கு காந்தி துணைபோவதைப் போன்ற தோற்றமே ஏற்படும். ‘காந்தி ஒரு துரோகி’ என்ற கோஷம் காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எழுப்பப்படுவதற்கு காந்தியின் இந்த உத்தியைப் பிறர் தவறாகப் புரிந்துக்கொண்டதும் ஒரு காரணம். ஆனால், வரலாற்றைத் திறந்த மனதுடன், ஆழமாகப் படித்துப் பார்த்தால் காந்தியுடன் மாறுபட்டவர்களின் உத்திகள் சாதித்ததைவிட காந்தியின் உத்தி அதிகம் சாதித்திருப்பது தெரியவரும்.
அடுத்த கட்ட நடவடிக்கை
ஜெனரல் ஸ்மட்ஸ் தங்களை ஏமாற்றியதை அடுத்து இந்தியர்கள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார்கள். பதிவுச் சான்றிதழ்களை (பெர்மிட்) எரிக்கும் போராட்டம் காந்தி தலைமையில் ஆகஸ்ட், 16, 1908-ல் நடைபெற்றது. அந்தத் தீயில் வளரும் ஜோதியாய் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் பிரகாசிக்கத் தொடங்கியது. இங்கிலாந்தும் இந்தியாவும் உற்றுநோக்க ஆரம்பித்தன.
-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை...)
முக்கிய செய்திகள்
மற்றவை
14 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago