உள்ளாட்சி: கடல் கொண்ட கொள்ளிடம்... கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

புறநகரான நாவலூரில் ஒரு அமெரிக்க மென்பொருள் நிறுவனம், நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தங்களுக்குத் தேவைப்படுவதாகத் தெரிவிக்கிறது. இது அந்த நிறுவனம் உள்ளாட்சி அமைப்பிடம் எழுதிக் கொடுத்துள்ள ஆவணத்தில் இருப்பது மட்டுமே. உண்மையில் அந்த நிறுவனத்துக்கு இதைவிட இருமடங்கு தண்ணீர் தேவைப்படும்.

மேற்கண்ட நிறுவனம் ஓர் உதாரணம் மட்டுமே. சென்னை புறநகர் கிராமங்களில் மென் பொருள் தகவல் தொழில்நுட்பம், கார் உள்ளிட்ட கனரகத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த குடியிருப்புகள் மட்டும் சுமார் 20 ஆயிரம் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் நவீன சிறு நகரங்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இவை எல்லாம் தேவை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவை எங்கு அமைய வேண் டும்? எப்படி அமைய வேண்டும்? விதிமுறைகள் பின்பற்றப்படுகின்ற னவா என்பதுதான் கேள்வி.

நகரமயம் என்பதே நாசகரமானது என்பதைத் தாண்டி, அந்த நாசகரமான நகரமயம்கூட இங்கே திட்டமிட்டு நடக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஓர் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தொழில் நிறுவனம் தொடங்கும்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அந்தக் கட்டமைப்புக்கான தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டுமானங்களின் மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு அதிகமானாலோ, பணியாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு அதிகமானாலோ, தினமும் வெளியேற்றும் கழிவு நீரின் அளவு 50 ஆயிரம் லிட்டருக்கு அதிக மானாலோ, அந்தக் கட்டிடத்துக்கு உள்ளாட்சி மற்றும் உள்ளூர் திட்டம் முகமை அனுமதி அளிக்க முடியாது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும். 2,500 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் வணிகப் பகுதி அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டினால் கட்டாயமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை இல்லாத சென்னையின் புறநகர் பகுதிகளில் இது மிகவும் அவசியம். ஆனால், இவை குறித்து எந்த உள்ளாட்சி அமைப்பும் கேள்விகள் எழுப்புவதில்லை. அப்படி கேட்பவர் களையும் சகல பலத்தையும் கொண்டு அடக்கிவிடுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

சென்னை மாம்பாக்கம் அருகே சோனாலூர் பஞ்சாயத்துத் தலை வராக இருந்தவர் சங்கர். இவர் தனது கிராமத்தின் விவசாயக் கிணறு களில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றத் தில் இடைக்கால தடை உத்தரவு வாங்கினார். சில நாட்களிலேயே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். திருப்போருர் ஒன்றியத்தில் இருக்கும் இள்ளளூர் கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் சரஸ்வதி தனது கிராமத்தின் நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீரை விற்பனை செய்யக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மீறி விற்பனை செய்த 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் தண்ணீர் விற்பனை நடக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கொலைகளின் பின்னணியும் இதுதான். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் வரை தண்ணீரை சுரண்டிவிட்டு மீண்டும் பறந்துவிடும் என்கிற கவலை யாருக்கும் இல்லை. அந்த நிறுவனங்கள் தூக்கி எறியும் பணத்தை வாங்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடு கிறார்கள் அதிகாரிகள். நமது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரி களுக்கும் லஞ்சம் கொடுப்பதற்கு என்றே பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குகின்றன.

நகரமயமாதல் உருவாக்கிய இன்னொரு சீரழிவு, கூட்டுக் குடிநீர் திட்டங்கள். என்றைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நம் வீட்டுக் குழாய்க்கு குடிநீர் வந்ததோ அன்றைக்கே நமது பாரம்பரிய நீர் நிலைகளை மறந்துப்போனோம். குடி மராமத்து கைவிடப்பட்டது. ஏரிகளும் குளங்களும் அநாதைகளாகின. மத்திய நிலத்தடி நீர் பாதுகாப்பு துறையின் புள்ளிவிவரங்களின்படி நிலத்தடி நீர் வற்றிய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 15 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது. ஆனால், நிலத்தடியில் தண்ணீர் உறிஞ்சியது போதாது என்று கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் ஆற்றுப் படுகைகளிலும் தண்ணீரை உறிஞ்சுகிறது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

ஆறுகள் காலம் காலமாக மரபு வழியாக பயணிப்பவை. சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிகளில் மட்டுமே அவை தடம் மாறுபவை. சரிவான நில அமைப்பையும் நிலத்தடி நீர் வளத்தையும் பொறுத்தே ஆறுகள் தங்கள் பாதையை நிர்ண யித்துக்கொள்கின்றன. அதனால், ஆற்றுப் படுகை என்பது வற்றாத நிலத்தடி நீர் வளத்தை கொண்டது. ஆனால், அந்த ஆற்றுப் படுகைகளின் நிலத்தடி நீரையே வற்ற செய்துவிட்டன நமது கூட்டுக் குடிநீர் திட்டங்கள். பல ஆண்டுகளாக அசுரத்தனமாக ஆற்றுப் படுகைகளில் தண்ணீரை உறிஞ்சியதில் இன்று பெரும்பாலான ஆற்றுப் படுகைகளின் நிலத்தடியிலும் தண்ணீர் இல்லை. அப்படியும் விடுகிறார்களா? ஆற்றுப் படுகைகளை ஈரப்படுத்ததுதல் என்கிற பெயரில் அணைகளில் இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் ஆற்றுப் படுகைகளில் திறந்துவிட்டு நிலத்தடிக்குச் செல்லும் அந்தத் தண்ணீரையும் உறிஞ்சுகிறார்கள்.

இதோ இப்போது ரூ.260 கோடி மதிப்பில் கடலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நான்கு நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், 3,593 குக்கிராமங்களுக்கு குடிநீர் கொண்டுச் செல்லும் திட்டம் அது. அந்த வகை யில் மேற்கண்ட அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் அந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கும். ஆனால், திட்டத்தின் ஆபத்து பற்றி எந்த உள்ளாட்சி அமைப்பும் யோசிக்க வில்லை.

ஒரு மாதத்துக்கு முன்பு கொள்ளிடம் சென்றிருந்தேன். இரு கரைகளும் நிரம்பி ஆறு தளும்பிக் கொண்டி ருந்தது. கரையோரம் நின்று ஆச்சர்ய மாக பார்த்துக்கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தில் முகத்தில் தெறித்தது தண்ணீர். காவிரி தண்ணீர் ஆயிற்றே என்று ஆசையாக நாவினால் சுவைத்தேன். கடும் உவர்ப்பு. அதிர்ச்சி தாங்க முடியவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. அத்தனையும் கடல் தண்ணீர். பல ஆண்டுகளாக தண்ணீர் வராததால் கொள்ளிடம் ஆற்றில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் தண்ணீர் புகுந்துவிட்டது. இப்போது கடலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக இந்தப் பகுதியில்தான் 10 இடங்களில் நீரூற்று கிணறுகளை அமைத்து தண்ணீர் உறிஞ்ச இருக்கிறார்கள். இதனால், நிலத்தடியிலும் கடுமையாக கடல் நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

- தொடரும்...

எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்