வருமானம் வெறும் ரூ.3500; இழப்போ பல லட்சம் ரூபாய்

By கே.கே.மகேஷ்

சாலையோர மரங்களை வெட்டியதால் அரசுக்குக் கிடைத்த வருமானம் வெறும் 3500 ரூபாய் மட்டுமே. ஆனால் இழப்போ பல லட்சம் ரூபாயாகும்.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. உயிருள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால், வருவாய்க் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் கடந்த 11.9.2013-ம் தேதி அனுமதி கேட்டு சாலை ஆய்வாளர் தங்கம் கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட கோட்டாட்சித் தலைவர் 5.2.2014-ம் தேதி 8 மரங்களை மட்டும் அகற்றிக்கொள்ள எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளார்.

அந்த (ந.க. எண்: 808/2014.சி நாள்: 5.2.14) அனுமதிக் கடிதத்தில், மதுரை-நத்தம் சாலையில் நீதிமன்ற காம்பவுண்ட் எதிரில் புலம் எண் 164-ல் உள்ள வாகை மரம் 1, புல எண் 816/5 நீதிமன்றம் எதிரில் உள்ள வாகைமரம் 6, புளியமரம் 1 (மொத்தம் 8 மரங்கள்) சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ளதாகவும், விபத்து ஏற்படுத்தும்விதமாக தார்ச்சாலையின் விளிம்பில் உள்ளதாகவும், அந்த மரங்களை பொது ஏலம் மூலம் அகற்ற வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத் துறை கேட்டுள்ளது.

இந்த மரங்களை அகற்றுவது தொடர்பாக வரப்பெற்ற வட்டாட்சியரின் அறிக்கையில் மரங்கள் அமைந்துள்ள புல எண்கள் கிராம மற்றும் நகரளவைக் கணக்குகளில் நெடுஞ்சாலை என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளதால் அவற்றின் மதிப்பு, புளியமரத்துக்கு ரூ.800 எனவும், வாகை மரங்களுக்குத் தலா ரூ.180 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரே ஏலமிட்டு அகற்றி அதற்குரிய ஏலத்தொகையை அரசுக் கணக்கில் இருசால் செய்து அசல் சலானை இவ்வலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, 8 மரங்களுக்கு அரசு நிர்ணயித்த ஏலத் தொகை மொத்தமே ரூ.2060 மட்டுமே. ஞாயிற்றுக்கிழமை 2 வாகை மரங்கள் மற்றும் ஒரு புளியமரத்தை மட்டும் வெட்டிய ஒப்பந்ததாரர், அந்தக் கட்டைகளை மட்டும் சுமார் 4 லாரிகளில் அள்ளிச் சென்றார். வெட்டப்பட்ட மரங்களில் ஒன்று சுமார் 4 அடி விட்டம் கொண்டது என்பதால், அந்த மரத்தடிகளை வேலையாள்களால் தூக்க முடியவில்லை. உடனே, ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு மரக்கட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டன.

யாரும் வெட்ட முன்வரவில்லை

இந்த மரங்களை விற்றதால் அரசுக்குக் கிடைத்த லாபம் எவ்வளவு என்று சாலை ஆய்வாளர் தங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியது: வெட்டப்பட வேண்டிய மரங்கள் எல்லாம் வாகை என்பதால், யாருமே அதை வெட்ட முன்வரவில்லை. காரணம், வெறும் விறகுக்குத்தான் அது ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். நான் கஷ்டப்பட்டு பேசி, அவரை வெட்டச் சம்மதிக்க வைத்தேன். இந்த மரங்கள் மூலம் அரசுக்கு வருமானம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், ரூ.3500-க்கு உள்ளாகத்தான் வந்திருக்கும் என்று உறுதியாகத் தெரியும் என்றார்.

25 ஆண்டுகள் ஆகும்

மரங்கள் வெட்டப்பட்டது குறித்து சுற்றுச்சூழல் இயக்கமான ‘ஓசை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் கூறியது: மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 150 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டுவது எளிது.

ஆனால், திரும்ப அதேபோல ஒரு மரத்தை உருவாக்க 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மரத்தை வெறும் பணமாகப் பார்க்கக் கூடாது. அது, 50 வயதுள்ள ஒரு மரம் ரூ.5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. தன் வாழ்நாளில் 1000 கிலோ எடையுள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, ரூ.10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது. இதேபோன்ற காற்றும், குளிர்ச்சியும் வேண்டும் என்றால் நமக்கு எத்தனை மின்விசிறியும், ஏ.சி.யும் தேவை என்று கணக்குப் போட்டுப் பாருங்கள் என்றார்.

நீதிமன்றம் அருகிலேயே நடந்த இந்தப் பிரச்சினையை வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளாதது ஏன் என்று விசாரித்த போது, இதற்கு மறைமுக காரணமே சில வழக்கறிஞர்கள்தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுபற்றி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி முத்துக்குமாரிடம் கேட்டபோது, தற்போதைய பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவியாக இருப்பதால், அதனை எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள காலியிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இருந்தாலும் இத்தனை மரங்கள் வெட்டப்பட்டது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 4 மரக்கன்றுகளை நட்டு வளர்க்காவிட்டால், நானே பொதுநலன் வழக்கு தொடருவேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்