நரிக்குறவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வி மற்றும் மாற்றுத் தொழில் புரிவதற்காக பல்வேறு நல உதவிகளை நரிக்குறவர்கள் நல வாரியத்தின் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட நலத்திட்ட உதவியை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவான செயல்பாடு காரணமாக உடனடியாக பெற முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர் திருச்சியில் வசிக்கும் 239 நரிக்குறவர்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.ஜி.எஸ்.ஒய். கூட்ட அரங்கில் நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் தனிநபர் தொழில் தொடங்க முழு மானிய கடன் உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் ஜெய முரளிதரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் 239 உறுப்பினர்களுக்கு தனியாக தொழில் தொடங்க தலா ரூ.7,500 வீதம் முழு மானியத்துடன் ரூ.17.92 லட்சமும், இயற்கை மரண நிதியாக 7 நபர்களுக்கு மொத்தம் ரூ.1.19 லட்சமும் என ரூ.19.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட நிதி வங்கி காசோலை மூலம் அனைவருக்கும் அந்த விழாவில் விநியோகிக்கப்பட்டது. பயனாளிகள் அனைவரும் பலகட்ட ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்து டோக்கன் வழங்கி அவர்களுக்கு உரிய காசோலைகள் அன்று அமைச்சரின் கரங்களால் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், அந்த காசோலைகளை எடுத்துக்கொண்டு வங்கிகளுக்குச் சென்ற அப்பாவி நரிக்குறவர்கள் வங்கியில் பணம் தர மறுத்ததால் பெருத்த அவமானமடைந்தனர்.
“பேங்க் ஆபீசருங்க எங்ககிட்டே, “உங்களுக்கு பணம் தர வேண்டாம்னு கலெக்டர் ஆபீஸ்லருந்து எங்களுக்கு உத்தரவு வந்திருக்கு. உங்களுக்கு செக் கொடுத்த ஆபீசரை போய் பாருங்கன்னு சொன்னாங்க. கலெக்டர் ஆபீசுக்கு வந்தா நலவாரிய அட்டையைக் கொண்டு வந்தாதான் இந்த செக்குல கையெழுத்து போட்டு சீல் (அலுவலக முத்திரை) வெச்சு தருவோம். அப்புறம்தான் இந்த செக்குக்கு பேங்க்ல பணம் தருவாங்கன்னு சொல்றாங்க.
இதை எங்களுக்கு செக்க கொடுத்தப்பவே செஞ்சிருக்க வேண்டியதுதானே? ஏன் தேவையில்லாம அலையவிடனும். எங்கள இப்படி அலையடிக்கிறதுல இந்த ஆபீசருங்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியல?” என மனம் நொந்து குமுறினர் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற நரிக்குறவர்களில் சிலர்.
இந்த பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விசாரித்தபோது, “அமைச்சர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது இறுதியில் உண்மையான பயனாளிகள் இருவருக்கு காசோலை இல்லை. இதுபற்றி ஆய்வு செய்தபோது 2 பேருக்குரிய காசோலையை யாரோ வாங்கிச் சென்றிருக்கலாம் அல்லது திருடப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.
உடனே காசோலைகளை பணமாக பரிவர்த்தனை செய்யும் வங்கிக்கு தகவல் கொடுத்து யாருக்கும் பணம் வழங்க வேண்டாம். வங்கிக்கு வருபவர்களை எங்கள் அலுவலகத்திற்கு வரச் சொல்லுங்கள். அந்த காசோலையின் பின்புறம் அலுவலக முத்திரை, அலுவலர் கையெழுத்து வாங்கி வரும் காசோலைகளுக்கு மட்டும் பணம் வழங்குங்கள் என சொல்லியிருந்தோம். இங்கே வரும் உண்மையான பயனாளிகளின் நலவாரிய அட்டைகளைப் பார்த்து மறு ஆய்வு செய்து கையெழுத்திட்டு முத்திரை பதித்து கொடுத்து வருகிறோம்” என்றனர்.
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் தவறுக்கு அப்பாவிகளான நரிக்குறவர்களை அலைக்கழிக்கப்பது நியாயம்தானா?. உரியவர்கள் சிந்தித்து இனியும் இதுபோல் நேராதிருக்க ஆவண செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago