கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை அளிக்காத கல்விநிலையங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு

By செய்திப்பிரிவு

கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை கல்வி நிலையங்கள் அளிக்கவில்லை என்றும் தகவல்களை மட்டும் மனப்பாடம் செய்ய கற்றுத்தருகின்றன என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.

“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் ஜெயமோகன் பேசியதாவது:

இளம் வாசகர்கள் பலரும் தற்போது தமிழ் வாசிப்பதில்லை. குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களை படிப்பதில்லை. இது தொடர்பாக ஒரு சர்வே எடுத்தபோது 400 வார்த்தைகளுக்கு மேலுள்ள கட்டுரைகளை தமிழ் வாசகர்கள் படிப்பதில்லை என்று தெரியவந்தது. இது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மொழி வளருகிறது என்றால் அது புழக்க மொழியாக இருக்க வேண்டும். அரசியல், கலை இலக்கியம், பொருளியியல், சூழியல், சட்டம், அறிவியல் என்று அனைத்தையும் சேர்த்துதான் ஒரு மொழி வளரமுடியும். அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், புழக்கத்தில் இல்லாவிட்டாலும் ஒரு மொழி அழிந்துவிடும். இதற்கு உதாரணமாக பாலி மொழி, கொங்கணி, துளு என்று பல்வேறு மொழிகளை குறிப்பிடலாம். தமிழ்மொழி எந்த திசைநோக்கி செல்கிறது என்றால் அதில் அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லை. ஆனாலும் இந்த மொழி வாழ்கிறது என்றால் தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதுதான். ஆனால் இப்போது அங்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தொடங்கியிருப்பதால் நிலைமை மாறியிருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளும் இப்படித்தான் இருக்கின்றன. மலையாளமும் அவ்வாறே உள்ளது.

தமிழகத்தில் தமிழ் உணர்வுக்கு ஈடு இணையில்லை. அதே நேரத்தில் தமிழை அன்னையாக்கிவிட்டபோதே வீடுகளில் அம்மாக்களுக்கு அளிக்கும் மரியாதைதான் தமிழுக்கு அளிக்கப்படுகிறது. எளிமையாக சொல்லுங்கள், சுருக்கமாக சொல்லுங்கள், பொதுமொழியில் சொல்லுங்கள், தகவலை மட்டும் சொல்லுங்கள் என்ற 4 விஷயங்கள்தான் ஒரு மொழியை அழிக்கவல்லவை. நதிப்படுகைகளில் நாகரிகம் தோன்றியது குறித்த வரலாற்றை 400 வார்த்தைகளுக்குள் சொல்ல முடியாது. அவ்வாறு 400 வார்த்தைகளுக்குள் சொன்னால் சிந்திக்க முடியாத மொழியாக தமிழை மாற்றுவதாகவே அர்த்தம்.

சொல்வதை பொதுமொழியில் சொல்லுங்கள் என்கிறார்கள். சூழியல் என்ற தமிழ் கலைச்சொல்லை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அழகியல் என்பது ஓவியம், இசை, இலக்கியம், சிற்பம், நடனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இதுபோன்ற தமிழ் கலைச் சொற்கள் தேவையில்லை என்று சொல்லக்கூடாது. கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. கேள்விகள், சிந்தனைகள் வரவேண்டும். தகவல்களுக்கு மரியாதை இனி கிடையாது. சிந்திக்க வேண்டியவற்றை சொல்ல வேண்டும். அந்த வகையில் “தி இந்து” நாளிதழில் கட்டுரைகள் வெளியாகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தகவல்களை திருப்பி திருப்பி சொல்லும் பத்திரிகைகள் அதிகமிருக்கின்றன. இந்த தரைதட்டிய சூழ்நிலையில், சவாலான காலத்தில் வாராது வந்த மாமணிபோல் “தி இந்து” தமிழ் வந்தது.

கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை கல்வி நிலையங்கள் அளிக்கவில்லை. தகவல்களை மனப்பாடம் செய்யவே கற்றுத்தருகிறார்கள். இச்சூழ்நிலையில்தான் “தி இந்து” விரிவான அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டது. இந்த நியூஸ் பேப்பரில் நியூஸை காணவில்லை என்று முதலில் கூறியவர்கள் பின்னர் அதில் வெளியாகும் கட்டுரைகள் குறித்து பேசுகிறார்கள். இது எனக்கு இன்ப அதிர்ச்சியையே அளிக்கிறது. தரமான விஷயத்தை சொன்னால் அதை ஏற்க மக்கள் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. மிகப்பெரும் இலக்கிய பாரம்பரியமிக்க நெல்லையில் இத் திருவிழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்றார் ஜெயமோகன்.

முதல் வாசகர்களுக்கு கவுரவம்

விழாவுக்கு முதலில் வந்த திருப்பூர் காந்திநகர் மருதமலை ச. செந்தில்நாதன், திருநெல்வேலி வி.எம். சத்திரம் கே. வெள்ளைச்சாமி, முக்கூடல் நா. பூபாலன், கோவில்பட்டி கா. மாரியப்பன் ஆகியோர் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டனர். விழாவை “தி இந்து” குழுமத்தின் மூத்த பொதுமேலாளர் (நிர்வாகம்) வி. பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். நிறைவாக திருநெல்வேலி இந்து விற்பனை பிரிவு முதுநிலை அலுவலர் ஜி. சதீஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக “தி இந்து” தலையங்கப் பக்க ஆசிரியர் அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.

லலிதா ஜூவல்லரி, ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஷ்ரிகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் விழாவை இணைந்து நடத்தின. விழா அரங்கில் “தி இந்து” குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான திருப்பதி பிரம்மோற்சவம் மலர் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலியில் கொட்டும் மழையிலும் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் விழாவுக்கு வந்திருந்து சிறப்பு சேர்த்தனர். வாசகர்கள் பிரவீன்குமார், முனைவர் சௌந்தரமகாதேவன், முருகேசன், ஆசிரியர் சூசை அமல்ராஜ், ஏவிஎம் சாமி, எழுத்தாளர் நாறும்பூநாதன், வைகுண்டம், பொருநை பாலு, சேதுராமலிங்க பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு வாசகர்களும் தங்கள் கருத்துகளை விழா மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

அசத்திய ஓவியங்கள்:

திருநெல்வேலியை சேர்ந்த ஓவியர் வள்ளிநாயகம் மேடையில் சிறப்பு பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் பேசும்போதும் அதை உடனுக்குடன் ஓவியமாக வரைந்து மேடையில் இருந்தவர்களிடம் அளித்து அசத்தினார். தத்ரூபமாக வரையப்பட்ட அந்த ஓவியங்களை வரைந்த வள்ளிநாயகம் மேடைக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

தேரோட்டிகளாக வழிகாட்டும் வாசகர்கள்

முன்னதாக வரவேற்புரையாற்றிய “தி இந்து” தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே. அசோகன் பேசும்போது, வாசகர்களின் தேவையை வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்தில் “தி இந்து” நாளிதழ் தொடங்கப்பட்டது. வாசகர்களின் ரசனையை மேம்படுத்தி, மேம்படுத்தப்பட்ட ரசனைக்கு தீனி போடும் வாசர்களின் துணையோடு செய்திகளை, கட்டுரைகளை வழங்கி வருகிறோம்.

136 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்து குழுமத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் வெற்றி பெறுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இருந்தது. ஆனால் அதை உடைத்து இன்று வெற்றி நடை போட்டு வருகிறது. ஆசிரியர் குழுவின் முடிவை நிர்வாகம் எந்த தலையீடும் செய்யாமல் முழு அதிகாரத்தை எங்களுக்கு தந்துள்ளது. அதனால்தான் சிறப்பாக செயல்பட முடிகிறது.

“தி இந்து” நாளிதழ் வாசகர்களின் நாளிதழாகவே வெளிவருகிறது. தேரை நாங்கள் இழுக்கிறோம். தேரோட்டியாக, வழிகாட்டியாக வாசகர்கள்தான் இருக்கிறார்கள்.

வாசகர்கள் தங்கள் எண்ணங்களை கருத்துகளை கடிதம் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர். வாசகர்கள் செய்தியை படித்தவுடன், ஒரு நிகழ்வை பார்த்தவுடன் தனது கருத்தை, தகவலை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் குரல் பகுதியை அறிமுகம் செய்தோம். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தொடர்ந்து வாசகர்களின் எண்ண ஓட்டங்களுக்கு மதிப்பளித்து நாளிதழை செழுமைப்படுத்தவே, இதுபோன்ற வாசகர் திருவிழாக்களை நடத்தி வருகிறோம். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு கூடியுள்ள வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

12 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்