இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காட்டு யானைகள் தாக்கியதில் டாப்சிலிப் கும்கி யானை இறந்து கிடந்தது.
ஒசூர், தென்பெண்ணை, போடூர் பள்ளத்தில் ஊடுருவியிருந்த காட்டுயானைகள், ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்தன. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டு யானைகளை துரத்த, கும்கி யானைகளைக் கொண்டு வரவேண்டும் என்று கோரினர். வனத்துறையோ, ‘ஒன்றிரண்டு, யானைகளை துரத்தவேண்டுமானால் கும்கிகள் பயன்படலாம். கூட்டம் கூட்டமாக வரும் காட்டுயானைகளை துரத்த, கும்கிகள் பயன்படாது’ என்று, பதிலளித்திருந்தது.
இதில், முதலாவது செய்தி, கும்கியின் மீது பரிதாபத்தையும், இரண்டாவது செய்தி கும்கியை, அதிசூரபத்மனை போல் சித்தரிப்பதை தவிடு பொடியாக்கி, வனத்துறையினர் காமெடி செய்வதுபோல் இருக்கிறது அல்லவா?
உண்மையில் கும்கிகள் வீரமிக்கதா? பரிதாபத்திற்குரியதா? என்று கேட்டால், எல்லாமே நகைப்புக்குரியதாக்குகிறது அதன் வாழ்நிலை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நெருக்கம் இருந்து வருகிறது. ஆதிகாலத்திலேயே, யானைகளை அடக்குவது மனிதனுக்குரிய வீரமாக போற்றப்பட்டு வந்திருக்கிறது.
கடின வேலைக்காக…
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் யானைப்படையே முக்கிய படையாகவும், பட்டத்து யானை இறப்பது அந்த நாட்டிற்கே கேடு என்றும் அறியப்பட்டு வந்தது.
மலையைக்குடைவது, பாலங்கள் கட்டும்போது, மிகப்பெரிய மரங்களை தூக்கி வருவது போன்ற கடின வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. சுவாமி சிலைகள் சுமந்து வரவும், திருவிழாக்களில் வரிசை கட்டி, நிறுத்தி அணி வகுத்து, அழகு பார்ப்பதும், அம்பாரியில் வைத்து மணமக்களை ஏற்றி வருவதும், யானைகளை பிச்சையெடுக்கப் பழக்கப்படுத்துவதும் இப்போதைய ஸ்டைல்.
சுங்கம் வசூல்
இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கும்கி யானைகள். வன எல்லையைத் தாண்டி யானைகள் வராமல் இருக்க, 15 அடி பள்ளம் தோண்டி விவசாயிகள் வைப்பார்கள். அதற்குள் தவறி விழும் யானைகள் பிடிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்படும். அது அவர்களுக்கே சொந்தமாகிவிடும். ஆங்கிலேயர் காலத்தில், இப்படி பிடிக்கப்பட்ட யானைகளுக்கு சுங்கம் (வரி) வசூலிக்கப்பட்டன, ஏலத்திலும் விடப்பட்டன. முகாம்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. அவை காட்டு வேலைகளுக்கும், கோயில்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
முள்ளை, முள்ளால் எடுப்பது போல், காட்டில் கிடைக்கும் யானைகளை, மனிதனுக்கு ஏற்ப பயன்படுத்த பழக்கப்பட்ட யானைகளைக் கொண்டே பழக்கினர். காட்டுயானைகளை அடக்கவும், விரட்டவும் பின்னாளில், இதே யானைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். அப்படி வந்ததுதான் கும்கி.
சங்கேத பாஷை
பழக்கப்படுத்தப்பட்ட யானைகளில் பலசாலிகளை தேர்ந்தெடுத்து, சங்கேத பாஷைகளுக்கு பழக்கப்படுத்துவர் மாவூத் எனப்படும் பாகன். அவை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கலந்த மொழியாக இருக்கிறது.
உதாரணமாக பைட் என்றால் படுக்கும்; ஆல் என்றால் பதுங்கும்.
குறையும் எண்ணிக்கை
கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் 1922 ஆம் ஆண்டு, யானைகள் முகாம் துவக்கப்பட்டது. இந்த யானைகள், பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் (கும்கிகள்) என அழைக்கப்பட்டன. அப்போது அங்கே, 170 கும்கிகள் இருந்துள்ளன. இப்போது, இதுவே 27 ஆக குறைந்துள்ளது.
நீலகிரி முதுமலை தெப்பக்காட்டில் அபயாரண்யம் என்ற யானைகள் முகாம் 1925ல் துவங்கியது. அப்போது அங்கிருந்த கும்கிகள் எண்ணிக்கை 312. தற்போது, இவை 24 ஆக குறைந்துள்ளன.
முன்னர் வலுவான பணிகளை செய்த கும்கிகள், தற்போது கிரேன்கள், பொக்லின் என்று நவீன இயந்திரங்கள் அப்பணிகளுக்கு வந்த பின்பு, அதன் தேவை குறைந்து விட்டது.
கும்கி யானைகளளை பரமாரிப்பதற்கும், பழக்கப்படுத்துவதற்கும், அதிக செலவு பிடிக்கும் என்பதால் இதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதிக பளுவான வேலை இல்லாதது, காட்டு யானைகளை துரத்தவும், சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்த யானை சவாரிக்கு மட்டுமே இவை பயன்படுவதால், இதன் சக்தியும், ஆற்றலும் பழைய கும்கி யானைகளுக்கு இணையானதாக இல்லை.
எனவே, பல நேரங்களில் சொங்கிப் போய்விடுகிறது. அடிக்கடி மஸ்து (மதம் எனப்படும் இனச்சேர்க்கை காலம்) பிடித்து விடுகிறது. அதனால், ஒன்றிரண்டு காட்டு யானைகள் வந்தால் மட்டும், இவற்றால் விரட்ட முடிகிறது. அதை வளைத்துப் பிடித்து, கூப்பிட்டு வரவும் முடிகிறது. இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடிவதில்லை என்கிறார்கள் இதை பராமரிக்கும் பாகன்கள்.
தறிகெட்டு பெரும் பசியோடு, ஆவேசத்தோடு நுழையும் காட்டு யானைகள், பல சமயம் இதை துரத்தியடிக்கின்றன. அதில், காட்டுயானைகள் தாக்கி கும்கிகள் காயமடைந்தும் விடுகின்றன. பாகன்களின் சமிக்ஞைக்கு காத்திருக்கும் கும்கிகள், அது வராத போது தன்னைத்தானே தற்காத்துக்கொள்வதும் முடியாத காரியமாகி விடுகிறதாம்.
‘இரவு நேரத்தில் காட்டுயானைகளின் பிளிறல் சத்தம் கேட்டாலே, சில கும்கிகள் அஞ்சி நடுங்குகின்றன. கால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, அவை மரத்தில் கட்டப்பட்டு நிற்கும் நிலையில், அதுதான் என்ன செய்ய முடியும். இப்படி காட்டுப்பகுதிகளில் பின்வாங்கும் கும்கிகளை, காட்டுயானைகளிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறது’ என்கிறார்கள் கும்கிகளின் பாகன்கள் சிலர்.
நடுங்கும் நஞ்சன், பாரி
தற்போது, கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தில் காட்டு யானைகளை விரட்ட கொண்டு வந்த நஞ்சன், பாரி என்ற இரண்டு கும்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை, காட்டுயானைகளின் பிளிறல் சத்தம் கேட்டதுமே கால்களை பின்னுக்கு வைக்கிறது. காதுகளை விடைத்து, கூர் தட்டி மிறட்சிப் பார்வை பார்க்கிறது. இந்த சூழ்நிலையில், இரண்டுமே ‘மூட் அவுட்’ ஆகி மதம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.
எனவே, இரண்டுமே இங்குள்ள கெம்பனூர் வனப்பகுதிக்குள் அட்டுக்கல் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஓய்வில் விடப்பட்டுள்ளன என்கின்றனர் இதனை பராமரிக்கும் வனத்துறையினர்.
அது ஆசுவாசப்பட்டால், அடுத்ததாக தாழியூர் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்ட முயற்சிக்கும், இல்லாவிட்டால் போளுவாம்பட்டி வனச்சரகத்தில், கும்கி முகாமிற்கே திரும்பும் என்கின்றனர் அவர்கள்.
கும்கிகளும் பாவம்தான்! என்கின்றனர் பொதுமக்கள்.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
2 days ago
மற்றவை
13 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago