தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தாமிரவருணியில் இருந்து தண்ணீர் எடுக்கும், 20 எம்.ஜி.டி. திட்டத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாமிரவருணி பாசனம்
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தாமிரவருணி விளங்குகிறது. தாமிரவருணி பாசனத்தில் மருதூர் அணை, திருவைகுண்டம் அணை ஆகியவற்றை சேர்ந்த 4 கால்வாய்கள் மூலம், 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் சாகுபடியில் உள்ளன.
இந்த நன்செய் நிலங்களை நம்பிதான் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது. இந்த சாகுபடி நிலங்களுக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. தண்ணீரை தேக்கி வைத்து விநியோகம் செய்ய 53 பாசன குளங்கள் உள்ளன.
20 எம்.ஜி.டி. திட்டம்
இந்நிலையில், தாமிரவருணி தண்ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, திருவைகுண்டம் அணை வடகால் மூலம் வழங்க கடந்த 1970-ம் ஆண்டு 20 எம்.ஜி.டி. திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ரூ.4.70 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டம், 1975-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இத் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கனஅடி தண்ணீரை திருவைகுண்டம் அணை வடகாலில் இருந்து எடுத்து, தூத்துக்குடி பகுதியில் உள்ள ஸ்பிக், டாக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையம், தாரங்கதாரா ரசாயன ஆலை, தூத்துக்குடி சிப்காட், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, பழையகாயல் ஜிர்கோனியம் தொழிற்சாலை ஆகிய 8 தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
20 எம்.ஜி.டி. திட்டம் காரணமாக, கடந்த 1975-ம் ஆண்டுக்கு பின் தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி பாசனத்தில், கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்க வில்லை. முன்கார் சாகுபடியும் முறையாக கிடைக்கவில்லை. பிசான சாகுபடிக்கும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது என, விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 20 எம்.ஜி.டி. திட்டத்தை 23 எம்.ஜி.டி. திட்டமாக மாற்றி, ரூ.28 கோடி செலவில் திருவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் இருந்து 24 கி.மீ. தொலைவு வரை ராட்சத குழாய்கள் பதித்து, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக ராட்சத குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
விவசாயம் கேள்விக்குறி
இவ்வாறு, திருவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதால், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி பாசன விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இப்பாசனத்தில் உள்ள 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கும் ஒரு போகத்துக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன் கூறுகையில், “இந்த திட்டத்தால் திருவைகுண்டம் அணைக்கு கீழ் தாமிரவருணி ஆற்றிலும், பிரதான கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து குறைந்து நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கிராம பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் குடிநீர் கஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நிலத்தடி நீர் பெரிய அளவில் பாதிக்கப்படும். விவசாயப் பகுதிகள் வறண்டு நெல், வாழை, வெற்றிலை ஆகிய முக்கிய வேளாண்மை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும். இதனால், கிராமப்புற பொருளாதாரம் அடியோடு சீர்குலையும். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த 20 எம்.ஜி.டி. திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார்.
உடன்படிக்கை இல்லை
பாரதி கலாமன்ற அமைப்பாளர் ஆர் .பாரதி முருகன் கூறுகையில், “தாமிரவருணி நதி நீர் உரிமை, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதர அமைப்புக்கே சொந்தம். இங்கிருந்து தண்ணீர் எடுக்க பொதுப்பணித்துறையுடன் உடன்படிக்கை செய்ய வேண்டும். ஆனால், 20 எம்.ஜி.டி. திட்டத்துக்கு எந்தவித உடன்படிக்கையும் செய்யாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து வருகிறது.
மேலும், பொதுப்பணித் துறைக்கு ரூ.83 கோடி வரை தமிழ்நாடு குடிநீர் வாரியம் பாக்கியும் செலுத்த வேண்டியிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் தெரிந்துள்ளோம்.
ரூ.100 கோடி இழப்பீடு
தாமிரவருணி தண்ணீரை 1000 லிட்டருக்கு 50 பைசா வீதம் விலைக்கு வாங்கும் குடிநீர் வடிகால் வாரியம், அதனை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டருக்கு ரூ.15 வீதம் விற்பனை செய்கிறது. ஒரு நாளைக்கு 9 கோடி லிட்டர் வீதம், ஆண்டுக்கு 3,31,85,800 கனமீட்டர் (ஒரு கனமீட்டர் என்பது 1000 லிட்டர்) எனவும், கட்டணமாக ரூ.1,65,92,300-ம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கி 1000 லிட்டர் ரூ.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், 20 எம்.ஜி.டி. திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு, ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இதற்கு தேவையான ஆதாரங்கள், ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, “ பொதுப்பணித்துறைக்கு கட்டணம் பாக்கி இருப்பது உண்மை தான். அரசு ஆணைப்படி தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் விதிமுறை மீறல் இல்லை.
தொழிற்சாலைகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற நிலம் தேர்வு உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்ததும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என்றனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago