மதுரையில் உள்ள பல பேருந்து நிழற்குடைகளை முறையாகப் பராமரிக்காததால் வெயில், மழையில் இருந்து தப்பிக்க பயணிகளுக்கு உதவாத வகையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்து வசதிக்காக நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக சுமார் 321 இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவற்றை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு முறையாக அமைக்காததாலும், பராமரிக்க ஆர்வம் காட்டாததாலும் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
கிழிந்து தொங்கும் தகரங்கள்
பல பேருந்து நிழற்குடைகளின் உயரம் அதிகமாகவும், மேற்கூரை அகலம் குறைவாகவும் உள்ளன. இதனால் அவற்றின் கீழே நிற்கும் பயணிகள் வெயிலின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் மழைச்சாரல்களில் இருந்தும் தப்ப முடிவதில்லை.
இதுதவிர சில நிழற்குடைகளின் மேற்கூரை தகரங்கள் கிழிந்து, வளைந்து தொங்குகின்றன. இதனால் அவற்றின் கீழே நிற்கப் பயணிகள் அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் பல இடங்களில் இருக்கைகள் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் அங்கு நிற்கும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.
தடுமாறும் பயணிகள்
பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு நிழற்குடையிலும் அது அமைந்துள்ள இடம், அவ்வழியாகச் செல்லும் பேருந்துகளின் வழித்தட எண், பகுதி ஆகிய விவரங்களை குறிப்பிடுவது வழக்கம். ஆனால், மதுரையில் உள்ள பெரும்பாலான நிழற்குடைகளில் இது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தைக் கண்டறிய முடியாமல் தடுமாறுகின்றனர். ஒவ்வொரு முறையும் பிறரின் உதவியை நாட வேண்டிய சூழல் நிலவுகிறது.
இரவில் பளிச்சிடும் விளம்பரங்கள்
பயணிகளுக்குத் தேவையான எந்த விவரங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த நிழற்குடைகளில், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டும் இரவிலும் கூட மின் விளக்குகளால் பளிச்சிடுகின்றன. அதேசமயம் நிழற்குடையின் கீழே நிற்கும் பயணிகளுக்கு வெளிச்சம் அளிக்க மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை.
விளம்பரங்கள் மூலம் ‘வருமானம்’ கிடைக்கிறது என்பதால் ஒவ்வொரு முறையும் ஒப்பந்த காலம் முடிந்த உடன், அதிகாரிகள் அவற்றைப் புதுப்பிக்கத் தவறுவதில்லை. ஆனால், பொதுமக்கள் பயன் படுத்து வதாலோ, என்னவோ.. பயணிகள் நிழற்குடைகளை புதுப்பிப்பது பற்றி யோசிப்பது கூட இல்லை.
இதனால் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் விளம்பர போர்டுகள் வைப்பதற்காக இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago