நாளிதழுடன் உறவு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் `தி இந்து' தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

பத்திரிகை தொடங்கி ஓராண் டுக்குள் பிரமிப்பூட்டும் வளர்ச்சியை அடைந்துள்ளோம். இது வாசகர்களாகிய உங்களால் தான் நடந்துள்ளது.

நமது பத்திரிகை என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். அப்போது அனைவருமே சொன்ன கருத்து, 'நமது நாளிதழில் என்ன வர வேண்டும் என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறது, என்ன பிடிக்கவில்லை என்பதைத் தொடர்ந்து காது கொடுத்து கேட்போம்; கண்களைத் திறந்து கொண்டு பார்ப்போம். அவர்கள் சொல்வதை நமது நாளிதழில் பிரசுரிப்போம். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து சிறிது சிறிதாக மாற்றங்கள் செய்யலாம்' என்பதுதான்.

காலையில் ஒரு வீட்டுக்குள் நாளிதழ் வந்து விழும்போது, அதை ஓடிவந்து எடுப்பவர்கள் பெரும்பாலும் குழந்தை கள்தான். எனவே பத்திரிகை மீது விழும் முதல்பார்வை குழந்தைகளுடையது என்ப தால் அவர்கள் மனம் கெட்டுப்போய் விடும்படியான படங்களோ, கொட்டை எழுத்துச் செய்திகளோ வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். அதுபோலவே இன்றுவரை எங்களது கவனம் தொடர்கிறது.

காலையில் எழுந்ததும் பற்பசை மூலம் பல் துலக்குகிறோம். காபி குடிக்கிறோம். இதெல்லாம் அன்றாட விஷயங்கள். ஒரு பற்பசைக்கும், காபிக்குமான ஒரு சம்பிரதாய உறவாக நாளிதழுடனான உறவு முடிந்துவிடக் கூடாது. இது உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். நாளிதழில் உள்ள விஷயத்தை நாள் முழுவதும் சிந்திக்க வேண்டும். செய்தி களை மட்டும் உள்வாங்கிக் கொள் ளாமல் நாட்டு நடப்புகளுக்கு தகுந் தாற்போல தங்களுடைய வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான வழிகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். அதை செயல்படுத்தியதற்கு வாசகர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

'உங்கள் குரல்' எங்களுக்கு உதவியாகவும், வழிநடத்தும் சக்தியாகவும் இருந்து வருகிறது. வாசகர் திருவிழா என்பது உங்களால் உங்களுக்காக நடத்தப்படும் விழா. இதை தொடர்ந்து செய்ய தயாராக உள்ளோம். நல்லதை பாராட்டுவதைவிட தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். தொடர்ந்து வழிநடத்துங்கள் என்றார்.

போட்டித் தேர்வாளர்களுக்காக விரைவில் பொது அறிவு பகுதி

வாசகர்கள் பேசும்போது, டிஎன்பிஎஸ்சி உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலான கேள்வி-பதில்கள், பொது அறிவுப் பகுதிகள், வழிகாட்டும் செய்திகளையும் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையேற்று விரைவில் `தி இந்து'வில் போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி பதில்கள் வெளியாகும் என ஆசிரியர் கே.அசோகன் தெரிவித்தார். ஆன்ட்ராய்டு செல்போன் உள்ளவர்கள் மட்டுமே 'வாக்களிக்கலாம் வாங்க' பகுதியில் பங்கேற்க முடிகிறது. மற்றவர்களும் இதில் பங்கேற்க வசதி செய்து தர வேண்டும்' என்று வாசகர் ஒருவர் கேட்டார். இனி எஸ்.எம்.எஸ் மூலமும் வாக்களிக்க வசதி செய்து தர உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE