அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு போதிய மருந்து இல்லை

தாய், தந்தையை இழந்த 11 வயது சிறுவன் சக்திவேல், அவனது வீட்டுக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்து இருந்திருந்தாலோ, விஷமுறிவு சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மற்றவர்களுக்கு இருந்திருந்தாலோ இன்று உயிரோடு இருந்திருப்பான்.

பாம்புக்கடியால் விஷம் ஏறி துடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவன், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பான். தாய், தந்தையரை இழந்து மடிப்பாக்கத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்த சக்திவேல், பெற்றோர் போன இடத்துக்கு இந்த இளம் வயதில் சென்றிருக்க மாட்டான்.

வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது சக்திவேலை அதிகாலை 1 மணிக்கு பாம்பு தீண்டியது. உடனடியாக அவனை அருகில் உள்ள மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கதவைத் திறக்காமலேயே, “போதிய மருந்துகள் இல்லை. டாக்டரும் இல்லை. எனவே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று உள்ளிருந்து பதில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிழக்குத் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போனபோது அவர்களும் கையை விரித்துவிட்டனர்.

அதன்பிறகு, பெரும்பாக்கத்தில் உள்ள பெரிய தனியார் மருத்துவ மனைக்குப் போனபோது, ரூ.75 ஆயிரம் கட்டினால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டனர். (இதனை அந்த மருத்துவ நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்) ஆனால், ஆம்புலன்ஸை இலவசமாகக் கொடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு டாக்டர்கள் கனிவுடன் சிகிச்சை அளித்தனர். கண் விழித்துப் பார்த்த சக்திவேல், சாப்பாடும், தண்ணீரும் கேட்டபோது உறவினர்களுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், காலையில் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் கொண்டான் சக்திவேல்.

இது குறித்து மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் கே.குழந்தைசாமி,

‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

மடிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அந்த குறிப்பிட்ட பணி நேரத்தில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. போதிய மருந்து இல்லாததால் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அங்கு பணியில் இருந்தவர்கள், மருத்துவமனையில் குறைவான அளவில் இருந்த மருந்தையாவது பயன்படுத்தி அந்த சிறுவனுக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.

மேலும், பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் கடித்தால் அருகில் உள்ள தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு உடனடியாக அழைத்து செல்ல வேண்டும். அதாவது குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்று கூறினார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையின் நச்சுயியல் பிரிவு தலைவர் எஸ். ரகுநந்தன் கூறுகை யில், “இந்தியாவில் உள்ள பாம்பு வகைகளில் 30 சதவீதம் நச்சுத்தன்மை உடையவை, குறிப்பாக நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை பாம்பு போன்றவை விஷத் தன்மையுடையவை.

பாம்பு கடிபட்ட இடத்தில் வாய் வைத்து ஊறிஞ்சுவது, துணியை வைத்து இருக்கமாகக் கட்டுவது, கத்தியால் கடிப்பட்ட இடத்தைக் கீறுவது பேன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மாதத்துக்கு 100 பேர்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரக் கூடிய பாம்புக் கடி நோயாளிகள் பலர் திருவள்ளூர், தாம்பரம், செங்கல்பட்டு பேன்ற புறநகர் பகுதிகளில் இருந்து தான் அதிகளவில் வருகின்றனர். ஒரு மாதத்தில், பாம்புக்கடிபட்ட 100 பேர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE