கிராமங்களில் எப்படி நாம் பொங்கலைக் கொண்டாடுகிறோமோ அதே போல் ஒரு அட்டகாசமான பொங்கலைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள் ‘சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்லூரியின் மாணவர்கள். சாதாரணமாக மாடர்ன் உடைகளில் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் அன்றைய தினம் பொங்கலுக்காக அக்மார்க் கிராமத்து உடையான வேட்டி சட்டை மற்றும் சேலையில் வந்து அசத்தியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரிப் பொங்கலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு, ‘தி இந்து’வுக்கும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் சில ஹைலைட்ஸ்களைப் பார்ப்போம்.
இ.சி.இ மாணவியான ஸ்ரீமதிக்கு புடவை கட்டுவது என்றால் ரொம்பவே இஷ்டமாம். “இதுவரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவேயில்லை, இப்போதுதான் முதன்முதலாக, அதுவும் கல்லூரியில் தான் புடவை கட்டும் கனவு
சாத்தியமானது” என்றார். ஆனால் இவரைத் தவிர மற்ற மாணவிகளுக்கு இந்த சேலை கட்டும் பழக்கம் ஒன்றும் புதிது அல்ல. உதாரணமாக, அதே கல்லூரியைச் சேர்ந்த கஸ்தூரி, “கல்லூரியில் நடக்கிற சிம்போசியம், வொர்க்ஷாப்னு எல்லாத்துக்கும் ஹாஸ்டபிலிட்டி என்னோட பொறுப்பு, அதனால அன்னைக்கு நான் புடவையில வருவேன், இருந்தாலும் பொங்கலுக்காக புடவை கட்டி காலேஜ் வர்றது வேறதான் என்கிறார். அவர் சேலைப் புராணம் வாசித்துக்கொண்டிருந்தபோது மாணவர் கும்பல் இடைமறித்தது.
"ஏம்மா…. ஏதோ எலிசபத்ராணி சேலைக் கட்டின மாதிரி இவ்ளோ பில்ட் அப் கொடுக்குறீங்களே, போங்கம்மா போய் அடுப்புக்கு முன்னாடி கோலத்தை போடுங்க ” என்று கலாய்த்தனர். அதற்கு மாணவிகளும், “எங்களுக்கு கோடிங் எழுத மட்டுமில்ல கோலம் போடவும் தெரியும்" என்று பஞ்ச் வைத்தார்கள்.
“பார்ரா…. பஞ்ச் டயலாக்கு எங்களுக்கும் ஆர்கேட் மட்டுமில்லை வெறகுக்கட்டு, கரும்புக்கட்டும் தெரியும்’ எப்பூடி" என்று வேட்டி கோஷ்டிகள் வெளுத்து வாங்கியது மாணவர் கும்பல்.
“இவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சது இந்த கொடூர மொக்கைக்குதானா? போய் விறகு கட்டை தூக்கிட்டு வாங்க” என்று மாணவர்களை துரத்தினார் மூன்றாமாண்டு டிம்பிள். “சீனியராமாம்… ” (இது கூட்டத்தில் யாரோ ஒரு மாணவர் முனங்கியது).
கோலம், அடுப்பு, விறகு எல்லாம் ரெடியாகவே மாணவிகள் பொங்கல் வைப்பதற்காக இடுப்பில் குடம் சுமந்து தண்ணீர் கொண்டு வர அங்கே ஒரே குலவை சத்தம். பச்சை அரிசி, அச்சு வெல்லம், வாழைப்பழம் எல்லாம் தாம்பூலத்தில் சிரிக்க, ஹரி என்ற மாணவர் மூன்று கரும்புகளை முனையில் ஜாய்ண்ட் அடித்து நேராக நிற்கவைக்க எல்லோருக்கும் பொங்கல் மூடு வந்துவிட்டது.
அந்த ஹரி சாதாராண ஆள் இல்லை ‘போக்கிரி’ படத்தில் அசினின் தம்பியாக உப்புமா சாப்பிடுவாரே அவர்தான். முதலாமாண்டு பொறியியல் மாணவராம். இப்போது உப்புமாவை கைவிட்டுவிட்டு பொங்கல் சாப்பிட வந்திருக்கிறார்.
திடீரென, "எல்லோரும் வந்தாச்சுலபா?? அப்புறம் இ.சி.இ.யிலேர்ந்து தினேஷ் வரல, மெக்கானிக்கல்லேர்ந்து சதீஷ் வரல்லனு சொல்லக்கூடாது" என்று நாட்டாமை ரேஞ்சிற்கு குரல்விட்டது ஒரு குரல். அந்த குரலின் ஓனர் ரமேஷ்குமாராம், “நான்தான் இந்தப் பொங்கல் வைக்குற டீமுக்கே ஹெட்” என்று தன்னை அவரே அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதைக்கேட்ட மற்றவர்கள், “இவரு பொங்கல் வைக்கிற டீமுக்கு இல்ல, பொங்கல்திங்கிற டீமுக்கு தான் ஹெட்” என்று ரமேஷின் வாயை வம்படியாய் பொத்தி, பொங்கல் வைக்க தயாராயினர். இரண்டாமாண்டு மாணவி நிவேதா நல்ல நேரம் பார்த்து கற்பூரத்தை கொளுத்தி அடுப்பை பற்ற வைக்க, மீண்டும் குலவை சத்தம் காதை பிளந்தது. அடுப்பில் நெருப்பு மெல்ல கொழுந்துவிட அடுத்த கொஞ்ச நேரத்தில் தண்ணீர் தத்தளித்தது. பொங்கல் பானையை உற்று பார்த்த முதலாமாண்டு மாணவி அஷ்வினி, “ஹை.. தண்ணி பொங்குது வெல்லத்தை போடுங்க” என்று உற்சாகமானார். “உங்க வீட்ல காபி பொடிய போட்டுட்டுதான் பாலை ஊத்துவீங்களா? முதல்ல அரிசியைதான் போடணும்” என்று சமத்தாக பச்சை அரிசியை பானைக்குள் தள்ளினார் ஸ்ரீமதி.
அனல் அதிகரிக்க அதிகரிக்க ஒரு பானை யில் வெண்மையிலும், இன்னொரு பானையில் தங்க நிறத்திலும் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் சுடச்சுட கொதித்தது. உலை கொதித்ததைக்கண்டு உற்சாகமாக துள்ளினார்கள் மாணவர்கள். இந்த துள்ளலில் ஒரு மாணவரின் வேட்டி, இடுப்பில் பார்க் ஆக மறுக்க அதை இழுத்து பிடித்து இறுக்கி முடிந்தார்.
பொங்கலை முதலில் சாப்பிடுவது யாரென்று பெரிய பட்டிமன்றமே நடந்தது. இந்த கலவரத்திற்கு மத்தியில் பானையில் பொங்கல் பொங்கிவிட "பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்… என்று ஒரே உற்சாக சத்தம்.
மஞ்சள் கொத்தை பிடித்து பானைகளை பக்குவமாக இறக்கினார் இறுதியாண்டு மாணவி ஸ்வர்னலக்ஷ்மி. இறக்கிய கொஞ்ச நேரத்தில் சூட்டோடு சூடாக பொங்கல் பறிமாறப்பட ஊதி ஊதி பொங்கல் சாப்பிட்ட மாணவர்கள் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம் தாண்டவமாடியது.
இந்தப் பொங்கலைப் பற்றி கூறிய இரண்டாமாண்டு மாணவர் தினேஷ், “நெரிசல் மிகுந்த சென்னையில், தைப்பொங்கல் என்பது வீட்டிற்குள் கேஸ் ஸ்டவ்விலேயே முடிந்துவிடும்.ஆனால் இந்த முறை கல்லூரி வாசலிலே பொங்கல் வைத்து மகிழ்ந்துள்ளோம், ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசியபடியே உறியடியில் பங்கேற்க புறப்பட்டார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
9 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago