ஒரு காலத்தில் பவுண்டரிகளும், நூல் மில்களும், பஞ்சு குடோன்களும், லேத்பட்டறைகளுமாக இருந்த பகுதிகள் தற்போது குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளாக மாறிவிட்டன. லேத் பட்டறைகள் எழுப்பும் இரைச்சல் சத்தத்தை பொறுக்க முடியாத மக்கள் அடிக்கடி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தொடுக்கின்றனர். பட்டறைக்காரர்களோ நாங்கள்தானே இங்கே முதலில் வந்தோம் என்று பதில் தெரிவிக்க, இரு தரப்புக்குமான மோதல் தற்போது வலுத்து வருகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லேத், வெல்டிங், மில்லிங், சேப்பிங், வைலர், சிஎன்சி என பல்வேறு இயந்திரங்களை வைத்து குறுந்தொழில் புரிகின்றனர். இவற்றில், உள்ளூர் தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்கள், வட மாநிலங்களிலிருந்தும் சுமார் 3.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளும் ஆங்காங்கே அருகிலேயே அமைந்துள்ளன.
கோவையின் முக்கியப் பகுதிகளாக விளங்கும் கணபதி, சங்கனூர், ரத்தினபுரி, சேரன்மாநகர், கவுண்டம் பாளையம், பீளமேடு, விளாங் குறிச்சி, சிங்காநல்லூர், ஒண்டிப் புதூர், பா.நா.பாளையம், பழையூர், ஹோப்காலேஜ், ராமநாதபுரம், சுங்கம், புலியகுளம், கோல்டுவின்ஸ், நீலம்பூர், அரசூர் உள்ளிட்ட ஊர்கள் 40 வருடங்களுக்கு முன்பு லேத் பட்டறைகளும், சிறுநூற்பாலைகள், பஞ்சு குடோன்கள், வெட்கிரைண்டர், மோனோ பிளாக், சப்மிர்சிபிள் பம்ப் செட்டுகள் செய்யும் ஒர்க் ஷாப்புகள் மிகுதியாக உள்ள பகுதிகளாக இருந்தன.
சிறு, குறு தொழிற்சாலைகள், கூலித் தொழிலாளர்கள் பெருக, அவர்கள் தங்குவதற்கு குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் குறுந்தொழில் கூடத்திலிருந்து அதிக சத்தம் வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு குடியிருப்பு வாசிகள் புகார்களை அளிப்பது சகஜமாகி வருகிறது.
கோவை ராமநாதபுரத்தில் ஒரு கம்பெனி இப்படி சத்தம் எழுப்புவதாக புகார் செய்யப்பட்டு அதன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிங்காநல்லூரில் உள்ள வெல்டிங் கிரில் ஒர்க் ஷாப் ஒன்று இரைச்சல் எழுப்புவதாக புகார் செய்யப்பட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு நோட்டீஸ் கொடுத்தது. இதேபோல் நீலம்பூரில் 3 லேத் உள்ள பட்டறை, பீளமேட்டில் 5 லேத் உள்ள பட்டறை, சின்னமேட்டுப்பாளையத்தில் 1 லேத் உள்ள பட்டறை என கடந்த 10 மாதத்தில் மட்டும் 130 புகார்கள் குறுந்தொழில் கூடங்கள் மீது வந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காட்மா (கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம்) தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறியது:
இத்தகைய புகார்கள் பெரும்பாலும் தனிப்பட்டவரின் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. ஒரு ஒர்க் ஷாப் வைத்திருப்பவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் குழாயடி சண்டை போன்ற பிரச்சினை ஏற்பட்டால்கூட இதுபோன்ற புகாரை கொடுக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட புகார்களால் விளக்கம் சொல்லி அலையவிட்டுள்ளோம். இதனால் காலை 7 மணி துவங்கி இரவு 9 மணி வரை மட்டுமே 60 சதவீத பட்டறைகளை இயக்குகிறோம். ஏற்கெனவே மின்வெட்டு, உதிரிப்பாகங்கள், டீசல் விலை உயர்வு போன்ற பாதிப்புகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினையும் சேர்ந்துள்ளதால் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
இதற்கு ஒரு தீர்வாக எங்களுக்கென்று நகருக்கு ஒதுக்குப்புறமாக குறுந்தொழிற் பேட்டை உருவாக்குவதுதான் சரி. அரசு உருவாக்கித்தரும் சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளில் 10 முதல் 15 சென்ட் வரை நிலம் ஒதுக்கப்படுகிறது. அந்த விலைக்கு சிறுதொழில் அதிபர்கள்தான் வாங்கமுடியும். எங்களைப்போன்ற குறுந்தொழில் செய்பவர்களுக்கு 2 சென்ட், 3 சென்ட் அளவில் இடம் கிடைத்தால் போதும். அதை சிட்கோ போன்ற இடங்களிலும் ஒதுக்க அரசால் முடியும்.
கடந்த 22.01.2014 தேதியன்று ஈரோட்டில் நடந்த சிட்கோ (தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம்) கோவை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் சிட்கோ சேர்மன் ஜே.சி.டி பிரபாகரனிடம் வலியுறுத்தி மனுவும் கொடுத்துள்ளோம். தொடர்ந்து முதல்வருக்கும் கோரிக்கை அனுப்பி வருகிறோம், விடிவுதான் பிறக்கவில்லை.
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
7 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago