தலைமைப் பொறுப்பில் பெண்- மாற்றாக அல்ல மாற்றமாக!- மதுசரண் சிறப்புப் பேட்டி

தினசரி 10 - 6 மணி நிம்மதியான, அதிகம் தொந்தரவில்லாத பணி போதும். நமக்கு எதற்கு தொழில் என்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள். அதிலும் பெண்கள் தொழில்துறையில் நுழைவது அரிதான ஒன்றாகவே ஆகிவிட்டது.

இதுபோன்ற சூழலில் தொழில் தொடங்கி, வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆகி, ஏராளமான பெண்களைத் தொழில் முனைவோராகவும் ஆக்கியுள்ளார் மதுசரண். இதனால் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் அதிகமான பெண் தொழில்முனைவோரை உருவாக்கியதற்காக ஐநா சபையின் சர்வதேசப் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பிலும் கவுரவிக்கப்பட்டிருக்கிறார் மது சரண்.

யார் இவர்?

மத்திய அரசின் தொழில்முனைவோர் மையத்தில், பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியில் சேர்ந்த மது சரண், அரசின் நிதி உதவியுடன் ஒரு அழகு நிலையத்தை ஆரம்பித்தார். அடுத்தடுத்து ஐடி நிறுவனங்கள், தொண்டு நிறுவனம், அழகு சாதன விற்பனை மையங்கள் ஆகியவற்றைத் தொடங்கி, ஏராளமான பெண்களுக்கு வேலையளித்து வருகிறார். இவரின் நிறுவனங்களில் ஏராளமான ஆண்களும் வேலை செய்கின்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவருடன் ஒரு சந்திப்பு.

தொழில்முனைவோராக உங்கள் வேலை எப்படிப்பட்டது?

திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு 2007-ல் ஐடி நிறுவனமொன்றை ஆரம்பித்தேன். தொடர் உழைப்பு மற்றும் முயற்சியால் இன்று ஒற்றை நிறுவனம் 40 ஆக வளர்ந்திருக்கிறது. அழகு நிலையம், தொண்டு நிறுவனம் என தொழில்கள் விரிவடைந்துள்ளன. தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான பெண் தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர்.

குடும்பத்துக்காகவே வாழும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பெண்களில் திறமையை வெளிப்படுத்தாதவர்கள் மட்டுமே இருக்கின்றனர். தங்களுக்குள் இருக்கும் திறன்களை அறியாமலும், வெளிக்கொணராமலும், குடும்பத்துக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர்.

ஆண்களின் துணை இருந்தால் நிச்சயம் இந்நிலை மாறும். தந்தை, கணவன், மகன் என ஆண்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருந்து உற்சாகப்படுத்தினால் எல்லாப் பெண்களாலும் சாதிக்க முடியும்.

வழக்கமான கேள்விதான், எப்படி குடும்பத்தையும் அலுவலையும் உங்களால் ஒருசேரக் கவனிக்க முடிகிறது?

முன்னுரிமையை எந்த நேரத்தில், யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொழிலிலேயே ஈடுபடுகிறோம். அதேநேரத்தில் தொழிலின் முக்கிய நேரங்களில் அதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதை குடும்ப உறுப்பினர்களிடமும் தெளிவு படுத்திவிட வேண்டும்.

பணிக்காக வெளிநாடு செல்லும்போது மட்டும் சிரமமாக இருக்கும். அதையும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஓரளவுக்கு சரிசெய்து விடுகிறேன்.

நிறுவனங்களில் உயர் நிலைகளுக்கு ஏன் அதிகப் பெண்கள் வருவதில்லை?

திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு வேலை என்பது இரண்டாவதாக மாறிவிடுகிறது. குடும்பத்துக்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். நீண்ட தூரப் பயணங்கள் என்பதும் பெண்களுக்கு சவாலாக மாறிவிடுகிறது. அலுவலில் உடனடியாக முடிவுகளை எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டுவதும் ஒரு பிரச்சினை.

அத்தோடு, இரவு நேரப் பணி, வாடிக்கையாளர்களுடன் பேசுவது, பணிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு ஆண்களே அதிகப் பொருத்தமாக இருப்பார்கள் என்று நிறுவனங்களும் நினைக்கின்றன. இவை எல்லாமே பெண்கள் தங்களின் திறமையை நிரூபிக்கும் வரைதான். அதைச் செவ்வனே செய்துவிட்டால், நீங்கள்தான் என்று கொண்டாடுவார்கள்.

ஆண்கள், பெண்கள் இடையே ஊழிய வேறுபாடு இருக்கிறதா?

எனக்குத் தெரிந்த அளவில் வேறுபாடு இல்லை. ஐடி நிறுவனங்களில் பால் வேறுபாடு பார்ப்பதில்லை.

சக தலைமை பெண் அதிகாரிகளைச் சந்திக்கும்போது எப்படி உணர்வீர்கள்?

வருங்காலத் திட்டங்கள் குறித்துப் பேசுவோம். அதே நேரத்தில் ஆரோக்கியமான போட்டி நிச்சயம் இருக்கும்.

உங்கள் தலைமையில் பணிபுரியும் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

அவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். பெண் தலைமையிடம் திட்டு வாங்கிவிடக்கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி, தப்பித்துக்கொள்வார்கள். ஆனாலும் அவர்களில் சிறப்பாகப் பணிபுரிபவர்கள் பலர் உள்ளனர்.

மகளிர் தினத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆண்கள் செய்யும் பணிகளை பெண்களும் செய்ய முடியும். தலைமைப் பொறுப்புகள், உயர் பதவிகளை அடையும் பெண்களை ஆணுக்கான மாற்றாக பார்க்க வேண்டாம். பெண்கள் பெண்களாகவே இருந்து சாதிக்க விரும்புகின்றனர். இதுதான் இன்றைய தினத்தில் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE