சிறுவர்களை பிச்சை எடுக்கவைக்கும் மர்மக் கும்பலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்

By எல்.ரேணுகா தேவி

வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வரும் குடும்பங்களை மிரட்டி, அவர்களின் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து காசு பார்க்கும் மர்மக் கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அழுக்கு படிந்த உடை, காய்ந்துபோன தலை, சோர்வடைந்த முகம் இவைதான் இந்தச் சிறுவர்களின் அடையாளம். ‘அம்மா, அப்பா விபத்தில் இறந்துவிட்டனர்.. அக்காவுக்கு கால் இல்லை.. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது…’ என நெஞ்சை உருக்கும் வாசகங்கள் அச்சடித்த அட்டையைக் கொடுத்து பிச்சை எடுக்கின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுவர்களிடம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அச்சடித்த அட்டை மற்றும் நோட்டீஸைக் கொடுத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. அந்த கும்பலைத் தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

கடந்த 19 -ம் தேதி பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் 12 வயது சிறுவனும் நோட்டீஸைக் காட்டி பிச்சை எடுத்தபோது போலீஸாரால் மீட்கப்பட்டனர். வடசென்னை பகுதியில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில் சிறுமியும், ராயபுரத்தில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் சிறுவனும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மீட்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நலக்குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தச் சிறுவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் இதுபோன்று பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஹரியாணாவில் இருந்து வந்த இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்தனர். அவர்களை சிலர் தங்கள் பிடியில் சிக்க வைத்து, பிச்சை எடுக்கும் தொழிலில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சிறுவர்களின் பெற்றோர் முறையான ஆவணங்களைக் காட்டினர். இனிமேல் குழந்தைகளை பிச்சை எடுக்க விடமாட்டோம் என்று எழுத்து மூலமாக உறுதி அளித்ததின் பேரில் அவர்களுடன் சிறுவர்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.

மீண்டும் சிறுவர்களைப் பிச்சை எடுக்க வைக்காமல் தடுக்க, அந்தக் குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊர் சென்று சேரும் வரை போலீஸார் கண்காணிப்பர். அந்த மாநில போலீஸ் அதிகாரிகளிடம் இவர்களுடைய நடவடிக்கை குறித்துக் கேட்டு தெரிந்துகொண்டு தொடர்பில் இருப்போம்.

ரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள் மற்றும் சாலை ஓரங்களில் சிறுவர்கள் யாராவது பிச்சை எடுக்க வந்தால் அவர்களுக்கு காசு கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. அந்தச் சிறுவர்களைப் பற்றி 1098 என்ற ‘சைல்டு ஹெல்ப் லைன்’ எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயம் பொய்த்து போனது, வறுமை போன்ற பல காரணங்களால் சிலர் பிழைப்பு தேடி நகரங்களுக்கு வருகின்றனர். அவர்களை சில சமூக விரோத கும்பல்கள், மிரட்டி பிச்சை எடுக்க வைப்பது போன்ற மோசமான வழிக்கு கொண்டு செல்கின்றனர். அப்படிப்பட்ட கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

16 hours ago

மற்றவை

8 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்