மிகச் சிறந்த நாளேடாக மலரும்; வளரும்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பேசும்போது, "இது எனக்கு முதல் வாசகர் திருவிழா. மக்கள் பிரதிநிதிக்கும் மக்களுக்குமான உறவை வளர்த்துக்கொள்ள இதுமாதிரியான நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும். இந்த முயற்சி வெகுவாகப் பாராட்டத்தக்கது.

ஒரு எம்எல்ஏவை கட்சி ரீதியாகப் பார்க்கிற பார்வைதான் இங்கு உள்ளது. அரசு பொது நிகழ்ச்சிகளில் எங்களை புறக்கணிப்பதும் தொடர்கிறது. எங்களுக்குள்ள தனிப்பட்ட திறமையை பார்ப்பதில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசும் நான், சட்டமன்ற உறுப்பினராக அல்லாமல், இந்து பத்திரிகையின் வாசகி என்ற முறையில் என்னை அழைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளேட்டின் மூலமாக, இந்த சமூகத்தை வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எண்ணிக்கையைப் பொறுத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது. எண்ணிக்கை ஒன்றாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் அதன் பலம்தான் முக்கியமானது. எல்லா நாளேடுகளையும் நான் வாசிக்கிறேன்.

ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும். திரித்துக் கூறக் கூடாது. முதலாளித்துவம் எனும் சமூக அமைப்பில், மிகப்பெரிய ஜனநாயகம் பத்திரிகை சுதந்திரம். எதைப் பார்த்தாலும் விரக்தி மேலோங்கி இருக்கும் சூழலில், வாசகர்களை மீட்டெடுக்கும் நம்பிக்கையை பத்திரிகைகள் வழங்க வேண்டும். அதை `தி இந்து' தமிழ் நாளிதழ் வழங்குகிறது.

அரசின் நிர்வாகக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சீர்கேடுகளை வெளிப்படுத்துகிறது. உற்ற தோழனாக, சகோதரனாக, போராளியாக நமது குடும்பத்தில் ஒருவராக `தி இந்து' நம்பிக்கை அளிக்கிறது. திண்டுக்கல்லில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை துணிச்சலாக வெளிக் கொணர்ந்து அதற்கான தீர்வையும் நடுநிலையோடு சொன்ன நாளிதழ் `தி இந்து'தான். தமிழகத்தின் மிகச்சிறந்த நாளேடாக தி இந்து மலரும், வளரும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE