மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,638 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கையே ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக உள்ளது.
மனிதனின் உயிரானது உலகில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட, தன்னுயிரை இன்னொரு நாள் நீட்டிக்க மருத்துவத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். அதேசமயம் பொறுமையின்மை, சகிப்புத் தன்மையின்மை, விரக்தி போன்றவற்றால் வாழ்க்கையை முற்றிலுமாக முடித்துக்கொள்ள தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.
இவர்கள் தங்களுடைய பிரச்சினையை முடித்துக்கொள்வதாக நினைத்து தற்கொலை செய்கின்றனர். ஆனால் அதன்பின் அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் படும் துயரம், வேதனை சொல்லிலடங்காது. அதிலும் திருமணமான ஆண்கள் என்றால் அவர்களின் மறைவுக்குப் பிறகு குடும்பமே சீரழியும் நிலைக்கு வந்து விடுகிறது.
எனவே இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும். ‘எமன்’ வேலையை எளிதாக்கும் வகையில் நாமே அதனை தேடிப் போகக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இதற்கான கவுன்சலிங் மையங்களும் இயங்குகின்றன. ஆனால் இதனால் பெரிய அளவில் மாற்றமோ, முன்னேற்றமே ஏற்படுவதாகத் தெரியவில்லை.
மதுரை புள்ளிவிவரம்
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டில் 302 ஆண்கள், 202 பெண்கள் என 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012-ம் ஆண்டில் 335 ஆண்கள், 244 பெண்கள் என 579 பேரும், 2013-ம் ஆண்டில் 328 ஆண்கள், 227 பெண்கள் என 555 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு ஆண்டும் பெண்களைவிட, ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்துள்ளது.
பருவமும் காரணமும்
இதுபற்றி போலீஸார் கூறுகையில், தற்கொலை செய்துகொள்ள ஒவ்வொரு பருவத்திலும் சில காரணங்கள் முக்கியமானதாக விளங்குகின்றன. படிக்கப் பிடிக்காமலும், ஆசிரியர் திட்டுவதாலும் பள்ளிப் பருவத்தில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் காதல் விவகாரத்தாலும், விருப்பமில்லாத கல்வியை பெற்றோர் திணிப்பதாலும் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
வீட்டில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் தகராறால் தற்கொலை செய்து கொள்கின்றனர். வயது முதிர்ந்த நபர்கள் ஆதரவின்மை, நோயை குணப்படுத்த முடியாமை போன்ற காரணங்களால் தங்களது முடிவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தவறான அணுகுமுறை, கடன், தொழில் நஷ்டம் போன்றவற்றால் சுய கௌரவத்தை இழக்க வேண்டிய சமயங்களில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இதை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்’ என்றனர்.
தற்கொலையைத் தடுக்க ஜன. 26-ல் ஆலோசனை
மதுரை மாவட்ட எஸ்.பி. வீ.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘தற்கொலையும், தற்கொலை முயற்சியும் நம் நாட்டில் சட்டப்படி குற்றச் செயல். ஆனால் இது தனிநபர் சார்ந்த முடிவு என்பதால், முன்கூட்டியே அறிந்து தடுப்பது என்பது அரிதான செயல். அதேசமயம் தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே, அதுபோன்ற நபர்கள் குழப்பமான நிலையிலேயே நடமாடுவதை முந்தைய வழக்குகளில் இருந்து அறிந்துள்ளோம்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற நபர்களை அவர்களின் நண்பர்களால் எளிதில் அடையாளம் காண இயலும். எனவே குழப்பமான நிலையில் உள்ளவர்கள் குறித்து அவர்களின் நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான நெட்வொர்க்கினை விரிவுபடுத்துவது மற்றும் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது தொடர்பாக ஜன. 26-ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்’ என்றார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago