இன்றைய காலகட்டத்துக்கு அம்பேத்கர் ஏன் தேவை?- சில பெண்களின் பார்வையில்.

வழக்கறிஞர் அருள்மொழி

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஜாதி என்னும் குறுகிய எண்ணம். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லாமல் அந்தத் தீமை எல்லோரையும் சுட்டுப் பொசுக்குகிறது.

ஜாதி என்னும் நச்சைப் புரிந்துகொள்ள, விடுபட அம்பேத்கரைப் படிக்க வேண்டும். புகை அதைப் பிடிக்காதவரையும் பாதிப்பது போல ஜாதியின் வீச்சு எல்லோரையும் பாதிக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாகச் சொன்னவர் அம்பேத்கர்.

தலைவர்கள் மீதான மரியாதை ஆட்களைப் பொருத்து மாறுகிறது, மாற்றப்படுகிறது என்பதற்கு அம்பேத்கர் ஓர் உதாரணம். பாட நூல்களில் வரலாற்றில் தொடர்ந்து மறைக்கப்பட்டு வரும் ஆளுமை அவர். தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர், அரசியல் சாசனத் தந்தை என அவரின் வரலாற்றைச் சுருக்கிவிட்டோம்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை விடப் பெரிய படிப்பாளி கிடையாது. அதிக பட்டங்களை ஆய்வு செய்து பெற்றவர். ஆராய்ச்சி அறிவும், ஆங்கிலப் புலமையும் பெற்றவர். எளிமையால் உயர்ந்தவர். வாழ்க்கையின் அத்தனை செயல்பாடுகளையும் நெறிப்படுத்தத் தலைப்பட்டவர்.

இந்திய அரசியலமைப்பு, ரேஷன் முறை, தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் சட்டங்கள், பேறுகால நன்மை சட்டம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள், பணியாளர் தேர்வு முறை உள்ளிட்டவைகளின் முன்னோடி. சமுதாய, சமூக வேறுபாடுகள் மறந்து, நம்மை நாமே உற்றுப்பார்க்கவும், திருத்திக்கொள்ளவும் மனிதர்களுக்குத் தேவையான உயர் பண்புகளை அன்றே சொல்லிச் சென்றவர் அம்பேத்கர்.

அஜிதா

அம்பேத்கரின் தேவைக்கு என்னால் இரு முக்கியக் காரணிகளைச் சொல்ல முடியும். முதலாவது உணவு, உடை என தாழ்த்தப்பட்டவர்களின் கலாச்சாரம் மறுக்கப்படுவது. காலங்காலமாக அவர்கள் சாப்பிடும் மாட்டிறைச்சியை மறுப்பதும் அடிப்படை உரிமையை மறுப்பதுதான்.

இரண்டாவது உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை மறுப்பது. பள்ளிக் கல்வி அவர்களை உயர்நிலையை அடையச் செய்வதில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் பாரபட்சம் நிலவுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் மதிக்கப்படுவதில்லை. அதனாலேயே அத்தகைய இடங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில்18-19% மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

90% பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தர் பதவிகளில் உயர் சாதியினரே உள்ளனர். இந்நிலை மாறினால் மட்டுமே சமூக மாற்றத்துக்கு வித்திட முடியும்.

சாதியை அழித்தொழித்தல், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட அம்பேத்கரின் பல நூல்களின் தொகுதிகள் இதுவரை எங்குமே முழுதாக வெளியிடப்படவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கரைப் பயன்படுத்துபவர்கள், அவரின் கருத்துகள், விழுமியங்களை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்பது கசப்பான உண்மை.

பாலபாரதி

அம்பேத்கர் சமூகத்துக்கு எவ்வளவோ பங்காற்றி இருந்தாலும், அதில் முதலாவதாகவும், முக்கியமானதாகவும் இந்திய அரசியலமைப்பைப் பார்க்கிறேன். பல்வேறு மதங்கள், பல ஜாதி அடுக்குகளுக்கு இடையே சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். இந்தியாவை ஒரே மதம், ஒரே இனம் என்று மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்தவர்.

காந்திக்கு இணையான ஒரு தலைவரை, தலித் தலைவர் என்று சித்தரித்துவிட்டோம். 1951-ல் சட்ட அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கான இந்து சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தவர் அம்பேத்கர். அதன்மூலம் பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து உரிமை, மறுமணம் ஆகியவற்றை நிலைநாட்ட முயன்றார். அது நடக்காததால் பதவியைத் துச்சமெனக் கருதி ராஜினாமாவும் செய்தார்.

இன்றைய பெண்கள் அமைப்புகள் அவரின் போர்க்குணம், முயற்சியைப் பின்பற்ற வேண்டும். குடும்ப, மத, சமூக ரீதியான அடக்குமுறைகளை கையாள, பெண்ணுரிமைப் போராட்டத்தைத் தொடர, சட்ட உரிமைகளை முன்னெடுக்க இன்றைய காலகட்டத்துக்கு அம்பேத்கர் தேவை.

சல்மா

இன்றைய இந்திய சூழல் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை மேலெழ விடாமல் அடக்கிக்கொண்டே இருக்கிறோம்.

ஒரு காலத்தில் அவர்கள் அனைவருக்கும் ஆபத்பாந்தவனாய் அம்பேத்கர் இருந்தார். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமின்றி, பெண்களுக்காகவும் போராடினார். அவர்களின் விடுதலையை ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலையாகக் கருதினார். தனி மனித உரிமைகளுக்கான சுதந்திரமான, அச்சமில்லாத, தைரியமான சமூகமே அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது.

அவர் கண்ணைக் கட்டியது போல வாழ்ந்துகொண்டிருந்த பெண்களின் விழிப்புணர்வற்ற தன்மையைச் சாடினார். பெண்கள் விழித்தெழ வேண்டும் என்றார். சக மனிதர்களை மரியாதையுடன் நடத்தச் சொன்னார். தற்போது தேசபக்தி என்ற பெயரில் ஒற்றைத் தன்மை நிலவுகிறது. பன்முகத்தன்மை மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது. அதனால் இப்போதுதான் அம்பேத்கரின் தேவை அதிகமாக இருக்கிறது.

கல்வி அமைப்புகளில், சிந்தனை முறைகளில், அறிவார்ந்த சூழலில் அம்பேத்கர் மறு வாசிப்புக்கும், மறு பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். இதுவே இன்றைய சமூகத்தின் இன்றியமையாத தேவை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE