என்றும் காந்தி!- 27: மக்களுக்காக முதல் உண்ணாவிரதம்

By ஆசை

சம்பாரண் சத்தியாகிரகம் வெற்றிகரமாக நிறைவுபெற்றவுடன் காந்தியால் சற்றும் ஓய்வெடுக்க முடியாதவாறு 1918 பிப்ரவரியில் மற்றொரு போராட்டத்துக்கு அழைப்பு வந்தது. காந்தியின் மீது மிகுந்த அன்புகொண்டவரும், ஆலையதிபர் அம்பாலால் சாராபாயின் தங்கையுமான அனசூயாபென் சாராபாயிடமிருந்து வந்த அழைப்பு அது.

1917-ல் பிற்பகுதியில் அகமதாபாத் பகுதியில் கொள்ளைநோய் பரவியது. அந்தத் தருணத்தில் நெசவாளர்கள் யாரும் சுணங்கிவிடக் கூடாது என்பதற்காக தினசரி ஊதியத்துக்கும் மேலாக 12 அணாவிலிருந்து ஒரு ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆனால், ஒருசில மாதங்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. அப்போது நெசவாளர்கள், விலைவாசியையும் தங்கள் வாழ்க்கைச் சூழலையும் காரணம் காட்டி தங்களுக்கு 50% ஊதிய உயர்வு வேண்டும் என்றார்கள். தினசரி ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த அவர் சராசரியாக மாதத்துக்கு 23 ரூபாய் என்ற அளவில் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தார்கள். அது போதாது என்று அவர்கள் முன்வைத்த கோரிக்கை முதலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் தொழிலாளர்களுக்கு உதவும்படி அனசூயாபென் காந்திக்கு அழைப்பு விடுத்தார்.

அனசூயாபென்னின் அண்ணன் அம்பாலால் சாராபாய்தான் ஆலை அதிபர்களின் தலைவர். அவரும் காந்தி மீது மிகுந்த பற்று கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் மிகவும் இக்கட்டான தருணத்தில் காந்தியின் ஆசிரமத்துக்கு உதவியவர் அவர். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கிய பிறகு, தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணைத் தனது ஆசிரமத்தில் சேர்க்கிறார். இதற்கு ஆசிரமத்தில், கஸ்தூர்பா, மகாதேவ் தேசாய் உள்ளிட்டோரிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆசிரமத்துக்கு நன்கொடை அளித்தவர்களும் நிறுத்திக்கொண்டார்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் காந்தி ஆசிரமத்தைப் புறக்கணித்தனர். அந்த சமயத்தில் ஆசிரமம் இருந்த பாதை வழியே வந்த அம்பாலால், புதிதாக ஒரு ஆசிரமம் இருப்பதைப் பார்த்துவிட்டு, காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்து பார்த்தார். அடுத்த நாள் ரூ. 13 ஆயிரத்துக்கான காசோலையைத் தனது உதவியாளரிடம் கொடுத்தனுப்பினார். இப்படியாக, தள்ளாடிக்கொண்டிருந்த ஆசிரமத்தைத் தாங்கிப்பிடித்தவர் அம்பாலால். அவரது மனைவி சரளாதேவியும் தீவிர காந்தி அன்பர். (அவர்களின் புதல்வி மிருதுளா சாராபாய் பின்னாட்களில் காந்தியின் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்துகொண்டார். புதல்வர் விக்ரம் சாராபாய் இந்திய வானியலில் தந்தையாக உருவெடுத்தவர்). ஆக, அம்பாலாலையே எதிர்த்து காந்தியும் அம்பாலாலின் சகோதரியும் போராட வேண்டிய சூழல். எனினும், நண்பர், புரவலர் என்பதையெல்லாம் தாண்டித் தனது முதன்மையான விசுவாசம் தொழிலாளர்களுக்கே என்ற முடிவு காந்தியிடம் இயல்பாகவே இருந்தது.

அகமதாபாதுக்குத் திரும்பிவந்த காந்தி, தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்துபார்க்கிறார். அவர்களின் வறிய சூழல் அவர்களது கோரிக்கையை நியாயப்படுத்துகிறது என்று காந்தி கருதினார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆலை அதிபர்களுக்கு காந்தி அழைப்பு விடுத்தார். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு காந்தி வருகிறார்.

சபர்மதி நதிக்கரையில் உள்ள, பரந்துவிரிந்த ஒரு ஆலமரத்தின் கீழ் காந்தியும் அவரது தொழிலாள நண்பர்களும் கூடினார்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்வரை அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வரும்வரை யாரும் வேலைக்குச் செல்வதில்லை என்ற உறுதிமொழியை காந்தி அனைத்துத் தொழிலாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, வன்முறை சிறிதும் இருக்கக் கூடாது என்றும் காந்தி வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்.

வேலைநிறுத்தம் ஆரம்பித்தும்கூட ஆலை அதிபர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரவில்லை. எனவே, போராட்டம் இழுத்துக்கொண்டே போனது. தினசரி போராட்டக் களத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. இதற்கிடையில் ஆலை அதிபர்கள் ஆசைவார்த்தை காட்டித் தொழிலாளர்கள் பலரையும் வேலைக்கு இழுத்தனர். நிறைய பேர் ஆலை அதிபர்களின் கைக்கூலிகளாக மாறினார்கள்.

ஆலை அதிபர்களின் மனங்களை வெல்வதற்கு முன்பு தொழிலாளர்களின் மனங்களை வெல்வது முக்கியம் என்று காந்தி கருதினார். இதுகுறித்து உரையாற்றிக்கொண்டிருந்தபோது, தான் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக காந்தி அறிவித்தார். அனசூயாவும் தொழிலாளர்களும் தாங்களும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள். அது தேவையில்லை என்றும் மனவுறுதியோடு தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலே போதும் என்றும் காந்தி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கு முன்பு காந்தி மதரீதியான காரணங்களுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஆசிரமத்துக்குள்ளும்தான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். மக்கள் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது இதுதான் முதல்முறை. அந்த வகையில் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டம் காந்தியின் வாழ்க்கையில் மிக முக்கியமானது.

உண்ணாவிரதம் ஆரம்பித்த முதல் நாள் காந்தியுடன் அனசூயாவும் தொழிலாளர்கள் சிலரும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அடுத்த நாளிலிருந்து, மற்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை என்று காந்தி சொல்லிவிட்டார். ஆலை அதிபர்களின் பேச்சுக்கு மயங்கி அவர்கள் பக்கம் சென்றவர்களும் திரும்பிவந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

அந்தத் தொழிலாளர்கள் யாவரும் தினக்கூலிகள் என்பதாலும், அன்றைய ஊதியம் அன்றைய வாழ்க்கைப்பாட்டுக்கே போதவில்லை என்ற நிலை இருந்ததாலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களின் வாழ்க்கை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, வல்லபாய் படேல் உள்ளிட்ட காந்தியின் நண்பர்கள் அந்தத் தொழிலாளர்கள் சிலருக்குத் தற்காலிக வேலைவாய்ப்பைத் தேடிக்கொடுத்தார்கள்.

இதற்கிடையில் அம்பாலால் உள்ளிட்ட ஆலை அதிபர்களைச் சந்தித்த காந்தி, தனது உண்ணாவிரதத்தால் அவர்கள் எந்தவித அழுத்தத்துக்கும் உள்ளாக வேண்டாம் என்றும், தன்னை அவர்கள் வழக்கமாகக் கருதுவதுபோல் ‘மகாத்மா காந்தி’யாகக் கருத வேண்டாம் என்றும், போராட்டக்காரர்களில் ஒருவராக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், காந்தியின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய தார்மிக அழுத்தம் அவர்களின் மனதை மாற்றியது. பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள். 21 நாட்கள் நீடித்த போராட்டமும் மூன்று நாட்கள் நீடித்த உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தன.

தொழிலாளர்கள் போராட்டத்தின் ஆரம்பத்தில் 50% ஊதிய உயர்வு வேண்டும் என்றிருந்தனர். அதாவது மாதத்துக்கு சுமார் ரூ. 35 என்ற அளவில் ஊதியம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆலை அதிபர்களோ, பம்பாயில் கூட அதிகபட்சமாக ரூ. 28-தான் ஊதியமாக வழங்கப்படுகிறது என்று வாதிட்டனர். இரண்டுக்கும் நடுவில் 35% ஊதிய உயர்வை காந்தி பரிந்துரைத்தார் (சுமார் ரூ. 32). இறுதியில் காந்தியின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘காந்தி முதலாளிகளின் கைக்கூலி’ என்றெல்லாம் இடதுசாரிகளில் பலரும் அவ்வப்போது கோஷம் எழுப்புவதுண்டு. திறந்த மனதுடன் வரலாற்றைப் பார்க்காததன் விளைவு அது. தன் ஆசிரமம் தொடர்ந்து நடத்த உதவிய முதலாளி மட்டுமல்லாமல், தனது சீடரைப் போன்றவர் அம்பாலால். அவரை எதிர்த்துக் களத்தில் நின்றார் காந்தி. அதுமட்டுமல்லாமல் அம்பாலாலுக்கு எதிராக அவரது சகோதரியும் காந்தியுடன் களத்தில் நின்றார். அம்பாலாலின் மனைவி சரளாதேவியின் ஆதரவும் அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்தது. காந்தி உண்ணாவிரதம் இருந்ததுகூட முதலாளிகளை எதிர்த்து அல்ல, என்று ஒருவர் வாதிடக்கூடும். உண்மையில் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை மனஉறுதியுடன் தொழிலாளர்கள் தொடர வேண்டும் என்பதற்கான உண்ணாவிரதம்தானே அது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அந்த உண்ணாவிரதத்தால் தொழிலாளர்களின் மனத்தடுமாற்றம் நின்று அவர்கள் மனவுறுதி பெற்றதுடன், முதலாளிகளும் மனம்மாறி பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தார்கள். ஒருவேளை, ‘முதலாளி ஒழிக’ என்பது போன்ற கோஷங்களுடன் போராட்டத்தை நடத்தி, வன்முறையில் ஈடுபட்டிருந்தால் தொழிலாளர்களுக்குச் சாதகமான முடிவு வந்திருக்குமா என்று யோசித்துப்பாருங்கள்!

தொழிலாளர்களுக்கு மனஉறுதி ஊட்டி, அவர்களை ஒன்றுதிரட்டுவது, தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகிய இரண்டு தரப்பையும் சமரசத்தை நோக்கி நகரவைப்பது, தொழிலாளர்களின் நிலையை முதலாளிகளுக்கு நியாயமான முறையில் புரியவைப்பது, பெருமளவு தொழிலாளர்களுக்கு சாதகமாகவும் சிறிதளவு முதலாளிகளுக்கு சாதகமாகவும் ஒரு முடிவை எட்டுவது (ஏனெனில் தாம் தோல்வியடைந்துவிட்டோம் என்ற உணர்வு பின்னாட்களில் தொழிலாளிகளை மேலும் ஒடுக்குவதற்கு வித்திடக்கூடும்) போன்ற வழிமுறைகள் காந்தியின் இந்தப் போராட்டத்திலும் பிந்தைய போராட்டங்களிலும் கவனிக்க வேண்டியவை.

இந்தப் போராட்டம் மட்டுமல்ல, தொழிலாளர்கள், விவசாயிகளின் மற்ற போராட்டங்களிலும் அவர் தொழிலாளர்கள், விவசாயிகளின் பக்கமே நின்றார். அவரைத்தான் நாம் ’முதலாளிகளின் கைக்கூலி’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

(நாளை…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

14 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்