உலக வரைபடத்தை அதிபர் பராக் ஒபாமா ஒரு நிமிடம் உற்றுநோக்கினால் பக்கத்து நாடுகளுடன் இருதரப்பு உறவு களைச் சீர்படுத்துவதில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்ற வருத்தம் நிச்சயம் அவருக்கு ஏற்படும். கியூபாவைப் பொறுத்த வரை கொள்கையில் சிறிது மாற்றம் செய்தாலே போதும், உறவு சுமுகமாவதுடன் பொருளாதாரப் பலன்களும் கிட்டும். அர்த்தமற்ற வகையில், அந்த நாட்டுக்கு எதிராக இப்போதும் கடைப்பிடிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முதலில் விலக்கிக்கொள்ள வேண்டும்.
ஃபிடல் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, 1961 முதல் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் தூதரக உறவுகளுக்குத் தடை விதித்தது. அதே சமயம், கியூபாவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைதான் காரணம் என்று கூறிய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, அந்த நாட்டு மக்களை வெளியுலகத் தொடர்பில்லாமலேயே நெடுங்காலம் வைத்திருந்தார்.
தனக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த வெனிசுலாவே இப்போது நெருக்கடியில் ஆழ்ந்துவிட்டதால், வேறு வழியின்றி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது கியூபா. தனியார் துறையில் மக்கள் வேலை செய்யவும், சொந்தமாகச் சொத்துகள் வாங்கவும் கியூபா அரசு அனுமதித்திருக்கிறது. வெளிநாட்டவர் கியூபாவில் முதலீடு செய்யவும் நாடாளுமன்றம் அனுமதி தந்திருக்கிறது. பிரேசில் நாட்டு முதலீட்டுடன் மிகப் பெரிய துறைமுகத்தை கியூபா கட்டிவருகிறது. ஆனால், அது லாபகரமாகச் செயல்பட, அமெரிக்கா தடைகளை விலக்குவது அவசியம்.
பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் நாடுகள் என்று ஈரான், சூடான், சிரியா, கியூபா போன்ற நாடுகளின் பட்டியல் ஒன்றை அமெரிக்கா வைத் திருக்கிறது. உறவைச் சுமுகமாக்கிக்கொள்ள முதல் நடவடிக்கையாக அந்தப் பட்டியலிலிருந்து கியூபாவை நீக்க வேண்டும். தென்அமெரிக்கக் கண்டத்திலிருந்த சில அமைப்புகளை கியூபா ஆதரித்ததால் இந்தப் பட்டியலில் 1982-ல் கியூபா சேர்க்கப்பட்டது. இப்போது அந்த அமைப்புகளே இல்லை. கொலம்பியாவில் அரசுக்கும் ஆயுதம் ஏந்திய கலகக்காரர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு, கியூபா பொறுப்புள்ள நாடாகச் சமீபத்தில் நடந்திருப்பதை அமெரிக்க அதிகாரிகளே சுட்டிக்காட்டுகின்றனர். தவிர, பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்குத் தோல்விதான் மிஞ்சியது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளே பலமுறை கூறியுள்ளனர்.
தடையை முழுவதுமாக நீக்க வேண்டும் என்றால், அமெரிக்க நாடாளு மன்றத்தின் ஒப்புதல் அவசியம். ஆனால், வெள்ளை மாளிகையே சில நட வடிக்கைகளைத் தன்னிச்சையாக எடுக்க முடியும். அமெரிக்காவிலுள்ள கியூபர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்ப விரும்பும் தொகைக்கான உச்ச வரம்பை நீக்கலாம். கியூபாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களில் எல்லா அமெரிக்கரும் முதலீடு செய்யவும், பயணம் செய்யவும் அனுமதி வழங்கலாம்.
கியூபாவின் தொலைத்தகவல் தொடர்பு வசதியை விரிவுபடுத்த பல அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எழக்கூடிய எதிர்ப்புகளுக்காக அஞ்சி ஒதுங்கி நிற்கின்றன.
வட அமெரிக்க, தென்அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு விரைவில் நடைபெறவிருக்கிறது. படித்தவர்கள் அதிகமுள்ள கியூபாவையும் அதில் பங்கேற்கும்படி அழைப்பதற்கு உறவு சுமுகமாவது அவசியம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கல்கள் காணப்படுகின்றன. கியூபாவுடனான மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவருவதன்மூலம் அமெரிக்கா மிகப் பெரிய நிம்மதியை அடையும். அத்துடன் இதர தென்அமெரிக்க நாடுகளுடனான உறவுகளும் சீர்படும். புதிய வரலாறு படைப்பதற்கான இந்த வாய்ப்பை ஒபாமா ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தி நியூயார்க் டைம்ஸ் - தலையங்கம்
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago