பன்றிதான் மேய்க்கணுமா... படிக்கக் கூடாதா?

By ராமேஸ்வரம் ராஃபி

தமிழகத்தில் மொத்தம் 36 பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். இவர்களில் தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தாரும் 'தொன்மைப் பழங்குடி குழுக்கள்' (Primative Tribal Groups-PTG) என வரையறை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் குடிமதிப்பீட்டின்படி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுநாயக்கர்கள், மன்னர் கிழவன் சேதுபதி ராஜா காலத்தில், மதுரையில் மலைப் பகுதியிலிருந்து பறவைகளைப் பிடிப்பதற்காக கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக 15,000-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள்.

விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் பன்றிகள் மேய்த்தும், குறி சொல்லியும், ஊசி, பாசி மணிகள் விற்றும் தங்களின் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். கூலி வேலைக்கு செல்ல முனைந்தால் கூட சாதி காரணம் காட்டி, இதர சமுதாய மக்கள் வேலை கொடுப்பது குதிரை கொம்பான சங்கதிதான்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும், கல்வியறிவில் கடைநிலையிலும் வாழும் காட்டு நாயக்கர் சமுதாயத்தில், 10-ம் வகுப்பை தாண்டியவர்களை தமிழக அளவில் விரல் விட்டு எண்ணிவிட முடியும்.

அரசு ஆணைப்படி பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாயத்தினர், தற்போது சமூகத்தில் தாங்களும் உயர, தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவும், வேலை வாய்ப்பினைப் பெறவும் சாதிச் சான்று ஒரு தடைக்கல்லாக இருக்கிறது.

காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள 'இந்து காட்டுநாயக்கர்' என்ற சாதிப் பெயருடன் எஸ்.டி சான்று வழங்கினால் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகளைப் பெற முடியும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்து காட்டுநாயக்கர் (எஸ்.டி) என்று சான்று வழங்கி பழங்குடியினருக்கான பட்டியலில் உறுதி செய்து சான்றளித்துள்ளனர். ஆனால் ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்கள், வட்டாச்சியாளர்கள், தொடர்ந்து காட்டுநாயக்கர் என்று சாதிச் சான்று தர மறுத்து, வேறு சாதிகளில் சான்றும் வழங்கியுள்ளார்கள்.

இதற்கு ஆட்சியாளர்கள் புரிதல் இன்றி சொல்லும் ஒரே காரணம் மலையும், மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தால் மட்டுமே பழங்குடியினர் மற்றும் காட்டுநாயக்கர் என்று எஸ்.டி பட்டியலில் வழங்க முடியும் என்று காரணம் கூறுகிறார்கள். இதனால் பழங்குடி சமுதாயமான காட்டுநாயக்கர் சமுதாயம் தனக்கான எந்தச் சலுகையையும் கிடைக்கப் பெறாமல், சாதிச் சான்றிதழ்களைப் பெற அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற உதயக்குமார் கூறும்போது, "எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலேயே 'காட்டுநாயக்கர்களையும், நரிக்குறவர்களையும் பழங்குடியினராக அறிவித்து, அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டும்' என்பதெல்லாம் ஏட்டளவில் தான் உள்ளது. காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு தற்போது எம்.பி.சி (MBC - மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்) பட்டியலில் தான் சாதிச்சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர ஆதிக்க சாதி மக்களுடன் அவர்களால் போட்டி போட முடியாது. இவர்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதிச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். காட்டுநாயக்கர் சமுதாயமும் முன்னேற்றம் அடையும்" என்றார்.

ராமேஸ்வரம் ஜே.ஜே நகரில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைத் சேர்ந்த வீரன் கூறும்போது, "1964-ல் தனுஷ்கோடி புயலில் அழியும் வரை அங்கே இருந்தோம். அப்புறம் ராமேஸ்வரம் ஜே.ஜே. நகர் காலணிப் பகுதிக்கு வந்துட்டோம். 40 ஆண்டுகளுக்கு மேலே இங்கே இருக்கோம். பல காலமா தாசில்தார் ஆபிசுக்கும், மாவட்ட ஆட்சியர் ஆபிசுக்கும் நடையா நடந்துப் பார்த்துட்டோம் சாமி... எதும் நடக்கல. வேற மாவட்டங்களில் இருக்கும் எங்க சாதி சனத்துக்கு இந்து காட்டுநாயக்கர்ன்னு சாதி சான்றிதழ் கொடுத்து இருக்காங்கள். அவங்கள் குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடம் போய் நல்லா படிக்குதுங்கள். எங்கள் புள்ளைங்க எங்களைப் போல பன்னிதான் மேய்க்கனுமா சாமி? அவங்களாவது படிக்கக் கூடாதா? ஜே.ஜே நகர்ல இருக்க குழந்தைகள் யாரும் 9 வகுப்பை தாண்டி 10வது போகல. பன்னிதான் மேய்க்குதுங்க. நாங்க காசு, பணம் கேட்கல சாமி. சாதி சான்றிதழ் கொடுத்தால் போதும், எங்க புள்ளைங்க படிச்சுக்கும்" என்றார் கண்ணீருடன்.

ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "கடந்த 09.05.2012 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலேயே காட்டுநாயக்கர்களைப் பழங்குடியினராகவே கருதி சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளேன்... இந்தக் கோரிக்கை காட்டுநாயக்கர் சமுதாயத்தினரிடம் நீண்ட காலமாக இருக்கிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும், அதாவதுமலைப் பிரதேச மாவட்டங்களில் மட்டும் இந்து காட்டுநாயக்கர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாழும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இத்தகைய சூழல்களையெல்லாம் கடந்து சாதிச் சான்றிதழ் இன்றி திருவாடானை அருகே சின்ன கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் முருகன் - பழனியம்மாள் தம்பதியினரின் மகன் வீரபாண்டி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்தான் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதன்முதலாக 10ம் வகுப்பை கடந்தவர்.

வீரபாண்டியிடம் பேசும்போது, "நாங்கள் பண்ணைவயல் கிராமத்தில் இருக்கோம். அப்பா, தாத்தா, பாட்டி மாதிரி பன்றி மேய்கிறது பிடிக்காமல், மூடை தூக்க தினம் தூரமாப் போய்ட்டு வருவாங்க... எங்கள மாதிரி நீங்க பன்றி மேய்க்க கூடாது சாமி. நல்லாப் படிச்சு அரசாங்க வேலைக்கு போகனும் என்று கஷ்டப்பட்டு என்னையும் தங்கச்சி பவானியையும் படிக்க வைக்குறாங்க. எங்க சாதி சனத்துள்ள முதன்முதலா நான் தான் பத்தாவது முடிச்சேன். இப்ப பதினொன்னாப்பு படிக்குதேன். சாதிச் சான்றிதழ் இல்லாம என்னை ஸ்கூல்ல சிஸ்டர் சேர்த்துக்கிட்டாங்க.

எனக்கு காலேஜ் போய் படிக்கணும். எங்க ஜெஸ்ஸி டீச்சர் மாதிரி நானும் ஒரு டீச்சர் ஆகனும் அங்கிள். எங்க மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கணும். சாதிச் சான்றிதழ் இல்லாம என்னை காலேஜ்ல சேர்த்துக்க மாட்டாங்களாம். நீங்க சொன்னா சாதி சான்றிதழ் கொடுப்பாங்களா அங்கிள்?" என்று மூச்சு விடாமல் பேசுகிறார்.

29.4.2013 அன்று தமிழக அரசு செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிய அரசாணை ஒன்றில், பழங்குடியினருக்கு சரியான சான்று வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நரிக்குறவர் சமுதாயத்தினரை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர். ஏற்கெனவே காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் எஸ்.டி பழங்குடியினர் பிரிவில் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய முறையில் பழங்குடியினர் (எஸ்.டி) என்று சான்றிதழை வழங்கிடுமாறு தமிழக முதல்வர் உத்திரவிட்டால் சமுதாயத்தின் விளிம்பு நிலையிலிருந்து உயர காட்டுநாயக்கர் சமுதாயத்தினருக்கும் வழிவகை பிறக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ராமேஸ்வரம் ராஃபி, கட்டுரையாளர் - தொடர்புக்கு rameswaramrafi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்