இந்தியாவின் இளைய சமுதாயத்துக்குப் பிரகாசமான எதிர்காலத்தை வழங்கப்போவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். 25 வயதுக்குக் குறைவான 60 கோடி இந்திய இளைஞர்கள் அடிப்படைக் கல்வி மற்றும் கணித அறிவு குறைந்தவர்கள். இந்த நிலையில், அவர்களது கல்வித் தரத்தைப் பெரிய அளவில் முன்னேற்றுவதைப் பொறுத்துதான் மோடி தனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியும். இதை அவரும் உணர்ந்திருக்கிறார்.
“கல்விதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான கருவி; ஏழ்மையை ஒழிக்க மிகச் சரியான ஆயுதம்” என்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குறிப்பிட்டது. கேள்வி என்னவென்றால், மோடி அரசின் கல்விச் சீர்திருத்தம் என்பது, கல்வியறிவும் தொழில் பயிற்சியும் மிக்க தலைமுறையை உருவாக்குவது மட்டும்தானா அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தைப் பிரபலப்படுத்துவதா என்பதுதான்!
மத்திய அரசு நிர்வாகத்துக்கு ‘குஜராத் மாதிரி’யைக் கொண்டு வரப்போவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிடுவதாகத்தான் வாக்காளர்கள் பலர் கருதினார்கள். ஆனால், ‘குஜராத் மாதிரி’ என்பதற்கான முக்கியத்துவம் வேறுமாதிரியானது. தீனாநாத் பத்ரா எழுதிய பாடப் புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதுதான் அது. இந்துத்துவ, வலதுசாரி சிந்தனைகளுடன் வரலாற்றை மாற்றி எழுதுவதில் முனைப்புடன் செயல்படுபவர் தீனாநாத் பத்ரா.
கடந்த பிப்ரவரி மாதம், வெண்டி டோனிகர் எழுதிய ‘தி ஹிண்டூஸ்: ஆன் ஆல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, பெங்குவின் பதிப்பகத்துக்கு அழுத்தம் தந்து, புத்தகத்தின் பிரதிகளைத் திரும்பப் பெற வைத்தார் தீனாநாத் பத்ரா. அவர் எழுதிய பாடப் புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க ஜூன் மாதம் குஜராத் அரசு உத்தரவிட்டது.
சாதாரண விஷயங்களிலிருந்து தீவிரமான கோட்பாடுகள் வரை அவரது போதனைகள் எதையும் அவ்வளவு எளிதில் பொருட்படுத்திவிட முடியாது. உதாரணத்துக்கு, மாணவர்கள் தங்கள் பிறந்த நாளை மெழுகுவத்தி ஏந்தி, கேக் வெட்டிக் கொண்டாடக் கூடாது; ஏனென்றால், அது இந்திய வழக்கம் அல்ல என்று போதிப்பவை அவரது புத்தகங்கள். அத்துடன் வங்காளதேசம், இலங்கை, திபெத், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ என்று வரைபடம் வரைய அவரது புத்தகங்கள் வலியுறுத்துகின்றன. விமானம், மோட்டார் வாகனங்கள், அணு ஆயுதங்கள் பண்டைய இந்தியாவில் இருந்தன என்று கூறுவதுடன் இந்த ‘உண்மைகளை’ மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புவதுதான் பிரச்சினைக்குரிய விஷயம்.
1999-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்துத்துவப் பார்வையில் வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுதும் பணியில் பத்ராவை அமர்த்தியது. 2004-ல் ஆட்சியை இழந்த பின்னர், தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக, எங்கே விட்டதோ அந்த இடத்தில் இருந்தே மீண்டும் தொடர்வதுபோல் தோன்றுகிறது. தனது புத்தகங்கள் தேசியப் பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக பத்ரா கூறுகிறார்.
ஒரு நாட்டின் எதிர்காலத்துக்குக் குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியமானது. வரலாற்று உண்மைகளை மறைக்கக் கூடிய, இந்திய கலாச்சார - பழக்க வழக்கங்கள் எவை என்று அவசரகதியில் தீர்மானிக்கக் கூடிய கருத்தாக்கம் கல்வியை ஆக்கிரமிக்கக் கூடாது. இது அண்டை நாடுகளிடையே இந்தியாவைப் பற்றிய ஆபத்தான கருத்தைத்தான் உருவாக்கும்.
- தி நியூயார்க் டைம்ஸ் தலையங்கம்
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago