என்றும் காந்தி!-14: இந்தியாவில் துளிர்விட்ட சத்தியாகிரகம்

By ஆசை

காந்தி இந்தியாவுக்குத் திரும்பி வந்த நாள் ஜனவரி 9, 1915. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே அவர் நடத்திய போராட்டங்களால் இந்தியாவில் காந்தி மிகவும் பிரபலமாகியிருந்தார். ஆகவே, அவருக்குத் தடபுடலான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுக்கு வந்த காந்தி சும்மா இருக்கவில்லை. தனது குருநாதர் கோகலே சொன்னதற்கிணங்க ’வாயை மூடிக்கொண்டு காதைத் திறந்துவைத்துக்கொண்டு’ இந்தியா முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

இந்தியாவுக்கு காந்தி வந்த சில வாரங்களிலேயே கோகலே மரணமடைந்தது காந்திக்குப் பெரிய இழப்பு வேறு.

இப்போதுதான் தனது ஆசான் இல்லையே! ஆதலால், தனது இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது காந்தியால் பேசாமல் இருக்க முடியவில்லை. பெரும்பாலும் மூன்றாம் வகுப்பிலேயே காந்தி பயணம் செய்தார். அடித்தட்டு மக்களுடன் ஒட்டி உறவாடினார். அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டார். அப்படி ஒரு பயணத்தின்போதுதான் மோதிலால் என்ற தையல்காரரை காந்தி சந்தித்தார். அந்த சந்திப்பு இந்தியாவின் முதல் (குட்டி) சத்தியாகிரகத்தை காந்தி தொடங்க வழிவகுத்தது.

விராம்காம் சுங்கச் சுமை

வாத்வான் என்ற ஊரின் ரயில் நிலையத்தில் காந்தியைச் சந்தித்தார் மோதிலால். விராம்காம் என்ற இடத்தில் உள்ள சுங்க நடைமுறையால் மக்கள் சந்தித்துவந்த இன்னல்களைப் பற்றியெல்லாம் காந்தியிடம் மோதிலால் முறையிட்டார். காய்ச்சலால் அவதிப்பட்ட காந்தி, மோதிலாலிடம் சுருக்கமாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்: “சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறீர்களா?”அதற்கு அந்த இளைஞர் சட்டென்று பதிலளித்தார், “நிச்சயமாகப் போகத் தயாராக இருக்கிறோம், நீங்கள் வழி நடத்தத் தயாராக இருந்தால்.” இளமைத் துடிப்பு என்று ஆரம்பத்தில் தப்புக்கணக்குப் போட்ட காந்தி மோதிலாலின் மன உறுதியைக் கண்டு வியந்தார். நிச்சயமாக உதவுவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்.

பிறகு வாத்வானுக்கு வந்து பார்க்கும் காந்தி, மோதிலாலின் பணிகளைக் கண்டு வியந்துபோகிறார். மாதம் தனக்குத் தேவையான 15 ரூபாயை தினமும் ஒரு மணி நேரத் தையல் வேலையில் மோதிலாலால் எளிதாக சம்பாதிக்க முடிந்தது. மீதி உள்ள நேரத்தில் தன்னை சமூகப் பணிக்காக அந்த இளைஞர் ஒப்படைத்திருந்தார்.

கத்தியவாருக்கு காந்தி செல்லுமிடங்களிலெல்லாம் விராம்காம் சுங்கப் பிரச்சினைகளைப் பற்றிப் புலம்பினார்கள். ஆகவே, அது தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் தயார் செய்த காந்தி பாம்பே ஆளுநருக்கு அனுப்பினார். அவரோ தங்களால் ஒன்றும் செய்ய முடியாது; சுங்கவரி விதிப்பு என்பது டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்று கைவிரித்துவிட்டார். அதன் பின், டெல்லியைத் தொடர்புகொண்டார் காந்தி. அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டு பிரபுவை சந்தித்தபோது காந்தி இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசினார். எல்லா ஆதாரங்களையும் முன்வைத்தார். தனக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது என்று சொன்ன செம்ஸ்ஃபோர்டு, கண்டிப்பாக இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதாக காந்திக்கு உறுதியளித்தார். அவருடனான சந்திப்புக்குச் சில நாட்களுக்குப் பிறகு விராம்காம் சுங்கத்தீர்வை விலக்கிக்கொள்ளப்பட்டது.

தொடக்கப் புள்ளி

இந்தியாவில் காந்தி முன்னெடுத்த முதல் சத்தியாகிரகம் இதுதான். காந்தியும் அப்படியே குறிப்பிடுகிறார்.

முன்னதாக, பாம்பே அரசின் செயலரை காந்தி சந்தித்தபோது சத்தியாகிரகத்தின் மீதான வெறுப்பை அந்தச் செயலர் வெளிப்படுத்தியிருந்தார். சத்தியாகிரகத்தைப் பற்றி பாகஸ்ரா என்ற ஊரில் காந்தி பேசியதைக் குறிப்பிட்ட அந்தச் செயலர், “இது அச்சுறுத்தல் இல்லையா? சர்வவல்லமை வாய்ந்த அரசாங்கம் உங்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு காந்தி, “அது ஒன்றும் அச்சுறுத்தல் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தங்கள் பிரச்சினைகளுக்குச் சட்டபூர்வமாகத் தீர்வு காண்பது எப்படி என்பதைப் பற்றிச் சொல்வது என் கடமை. தன் சொந்தக் காலில் நிற்க நினைக்கும் ஒரு தேசம், விடுதலை அடைவதற்கான எல்லா வழிமுறைகளையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். வழக்கமாக, வன்முறையைத்தான் இறுதித் தீர்வாக அவர்கள் கருதுவார்கள். சத்தியாகிரகமோ, கொஞ்சம்கூட வன்முறை இல்லாத ஆயுதம். அதன் நடைமுறையைப் பற்றியும் அதன் எல்லைகளைப் பற்றியும் விளக்குவதை என் கடமையாகக் கருதுகிறேன். பிரிட்டிஷ் அரசு என்பது சர்வ வல்லமை வாய்ந்த அரசு என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை; அதே நேரத்தில் சத்தியாகிரகம் என்பது சர்வவல்லமை வாய்ந்த தீர்வு என்பதிலும் எனக்குத் துளிகூட சந்தேகமில்லை” என்றார்.

விராம்கிராம் சுங்கத் தீர்வையை விலக்கச் செய்தது இந்தியாவில் காந்தி நடத்திய முன்னோட்டச் சத்தியாகிரகம் என்று சொல்லலாம். அதாவது, சத்தியாகிரகம் நடத்துவதற்கான ஆயத்த நிலையிலேயே தீர்வு கிடைத்துவிட்ட சத்தியாகிரகம் அது. இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி இறுதி வழிமுறையாகவே கையில் எடுத்தார். வன்முறையற்ற வழிமுறைதான் என்றாலும் முறையான திட்டமேதும் இல்லாமல் தொட்டதற்கெல்லாம் அதைக் கையிலெடுத்தால் வன்முறைக்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே, ஒரு பிரச்சினையைத் தீர்க்கமாக அலசி, சூழல் எப்படி இருக்கிறது என்பதை நடைமுறையில் கண்டுணர்ந்து, ஆதாரங்களைத் திரட்டி, அதிகாரத் தரப்பின் கவனத்துக்கு காந்தி கொண்டுசெல்வார். உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசுதல், மனு எழுதுதல், வழக்கு போடுதல் போன்ற வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிப் பார்த்து அப்போதும் பலனேதும் கிடைக்கவில்லையென்றால் அதன் பிறகுதான் காந்தி முறையான திட்டமிடலுடன் சத்தியாகிரகத்தைத் தொடங்குவார்.

கொத்தடிமை ஒழிப்பு

விராம்காம் சுங்கத் தீர்வைப் பிரச்சினையைவிட இன்னொரு முக்கியமான பிரச்சினைக்கும் காந்தி தீர்வு கண்டாக வேண்டும் என்று நினைத்தார். ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினை, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கொத்தடிமைகள் பிரச்சினை. இந்தியாவில் மலிவாக மனித வளம் கிடைக்கிறதென்ற காரணத்தால் இங்கிருந்து இந்தியர்களைக் கொத்தடிமைகளாகத் தென்னாப்பிரிக்காவுக்குக் கொண்டுசெல்லும், மனித உரிமையின் அப்பட்டமான மீறலான அந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று காந்தி நினைத்தார். காங்கிரஸ் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்துத் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கொத்தடிமைப் பிரச்சினையை ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸின் மாளவியா 1916-ல் ‘இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சி’லில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அப்போதைய ஹார்டிங் பிரபு அதற்கு மேலோட்டமான ஒரு உறுதிமொழியை அளித்தார். சரி, சத்தியாகிரகத்தில் இறங்க வேண்டியதுதான் என்று காந்தி நினைத்தார்.

அடுத்த வைஸ்ராயாக வந்த செம்ஸ்ஃபோர்டு பிரபு கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர மறுத்துவிட்டார். ஆகவே, இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அளவிலான போராட்டத்தை நடத்த காந்தி முடிவு செய்தார்.

போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு காந்தி, வைஸ்ராயைச் சந்திக்க விரும்பினார். அவரும் அதற்கு இணங்கினார். அந்தச் சந்திப்பில், தான் உதவுவதாக செம்ஸ்ஃபோர்டு கூறினாலும் திட்டவட்டமான உறுதி ஏதும் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தை பம்பாயிலிருந்து காந்தி தொடங்கினார். கராச்சி, கல்கத்தா, மதறாஸ் என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து ஏராளமான கூட்டங்களில் கலந்துகொண்டு, கொத்தடிமை முறையை ஒழிப்பதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், சத்தியாகிரகப் போராட்டம் வெடிப்பது போன்ற சூழல் காணப்பட்டதாலும் 1917, ஏப்ரல் 2-ம் தேதி கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. முதல் உலகப் போர் நடக்கும் வரையில்தான் இந்தச் சட்டம் அமலில் இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. எனினும் 1920, ஜனவரி 1-ம் தேதி கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் நிரந்தரமாகக் கொண்டுவரப்பட்டது.

இந்த இரண்டு முக்கியமான வெற்றிகளும் காந்திக்கு இந்தியாவில் சத்தியாகிரகம் நடத்துவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தன. சூட்டோடு சூடாக சம்பாரண் சத்தியாகிரகத்தில் காந்தி குதித்தார். இந்தியாவில் அவர் நடத்திய மாபெரும் முதல் சத்தியாகிரகம் சம்பாரண் சத்தியாகிரகம்தான்!

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil. co.in

(நாளை...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

14 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்