ஆமை வேகத்தில் நடைபெறும் அண்ணா வளைவு மேம்பாலப் பணி- நெரிசலில் சிக்கித் திணறும் பூந்தமல்லி நெடுஞ்சாலை

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா வளைவு அருகே நடைபெற்றுவரும் மேம்பாலப் பணி துரிதமாக நடக்காததால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சென்னையின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், அண்ணாநகர் 3வது அவென்யூ மற்றும் நெல்சன்மாணிக்கம் சாலை சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்

புள்ளி வைக்க பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா பவள விழா நினைவு வளைவு அருகே ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அரை வட்ட வடிவ இணைப்பு பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. அதற்காக, கடந்த 2012 -ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அண்ணா பவள விழா நினைவு வளைவை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்பணியில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியை மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. அதன்படி, அண்ணாநகர் 3- வது அவென்யூ சாலையிலிருந்து, கோயம்பேடு பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்ட சுரங்கப் பாதைக்கு பதில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன நெரிசல் தொடர் கதையாக உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் 3- வது அவென்யூ சாலையை இணைத்து அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் 2.80 கி.மீ. நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்டது. மூன்று பிரிவுகளாக இந்த மேம்பாலப் பணி நடந்துவருகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், அண்ணா வளைவை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கல், மேம்பாலப் பணி வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு வேளைகளில் மட்டுமே பணி மேற்கொள்ளும் சூழல் போன்ற காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அண்ணாநகர் 3 -வது நிழற்சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் நெல்சன்மாணிக்கம் சாலை வரை அமைக்க திட்டமிடப்பட்ட 50 தாங்கு தூண்களில் 42 தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அவற்றில் 14 தூண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அண்ணா வளைவு முதல் வைஷ்ணவா கல்லூரி வரையிலான பகுதிகளில் பணி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் ஒட்டு மொத்தப்பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE