ஈரோடு மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்கியதில் முறைகேடு!: தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலம் இல்லாதவர்களுக்கு, முறைகேடாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதியில் 30 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து, அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரபட்ச நிவாரணம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார் அனுப்பி இருந்தனர். அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தின் பெருந்துறை தொகுதியில் ரூ. 30 கோடியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளான மொடக்குறிச்சிக்கு 39 லட்சமும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு 1.54 லட்சமும், பவானி தொகுதிக்கு, 1.16 லட்சமும், அந்தியூர் தொகுதிக்கு 1.23 லட்சமும் வறட்சிநிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபி செட்டிபாளையம் தொகுதிக்கு, 93 ஆயிரமும், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமாரின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நிதி வறட்சி நிவாரணம் முற்றிலும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சுந்தரத்தின் தொகுதிக்கு ரூ.6.63 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் தொகுதிக்கு மட்டும் ரூ. 30 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்ட விவகாரம் அ.தி.மு.க. வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

ரூ.71 லட்சம் முறைகேடு

இந்நிலையில், பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சி கோயில் பேரூராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்கப்பட்டுள்ள ரூ. 2 கோடி வறட்சி நிவாரணத்தில், 71 லட்சரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், இந்த முறைகேடு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணசாமி கூறியதாவது:

காஞ்சிகோயில், பள்ளி பாளையம் பேரூராட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள், விவசாய நிலம் இல்லாதவர்கள் பெயர்களில், காஞ்சிகோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கணக்கு துவங்கப்பட்டு, அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின்படி இதற்கான ஆதாரங்களை நான் பெற்றுள்ளேன். இந்த முறைகேடுக்கு அ.தி.மு.க. பிரமுகர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். தையல் கலைஞருக்கு நிவாரணம் உதாரணமாக, காஞ்சி கோயில் பேரூராட்சி தலைவர் பரமசிவத்தின் அலுவலகம் அருகே தையல்கடை வைத்துள்ள கேரளாவைச் சேர்ந்த சிவன் என்பவரது பெயரில் ரூ. 30 ஆயிரம், பேரூராட்சி தலைவர் பரமசிவத்தின் மாமனார் உள்ளிட்ட 6 பேரின் பெயரில் தலா 40 ஆயிரமும் வறட்சி நிவாரணம் பெறப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், விவசாய நிலங்கள் இல்லாத, தங்கள் உறவினர்கள் பெயரில் வங்கிகணக்கு துவங்கி, வறட்சி நிவாரணத்தை பெற்றுள்ளனர்.

வீட்டுமனையாக பிரித்துப் போடப்பட்ட நிலங்களுக்கு கூட வறட்சி நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமற்ற முறையில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காஞ்சிகோயில் பேரூராட்சியில், வறட்சி நிவாரணம் பெற 2013ம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்க வேண்டும். நிவாரணம் பெற்றவர்களின் விவசாய நிலங்களின் சர்வே எண், விஸ்தீரணம், சிட்டா அடங்கல், ஆர்.எஸ்.ஆர். போன்றவை சரி பார்க்கப்பட வேண்டும்.

இந்த ஊழலை வெளிப்படுத்த, வெளிப்படையான விசாரணை கமிஷன் அமைத்து அரசு விசாரிக்க வேண்டும். இதன் வாயிலாக வறட்சி நிவாரணத்தில் நடந்த மோசடி குறித்த முழு விவரம் தெரியவரும் என்றார். திருப்பி செலுத்தி விட்டோம் இதுகுறித்து காஞ்சிகோயில் பேரூராட்சித் தலைவர் பரமசிவத்திடம் கேட்டபோது, “வருவாய்துறையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்தான், யார், யாருக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டுமென வங்கிக்கு பரிந்துரை செய்கிறார்.

இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டதில், தவறான நபர்களுக்கு வறட்சிநிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, வருவாய்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சி கோயில், பள்ளிபாளையம் பேரூராட்சிகளைச் சேர்ந்த பலர், தாங்கள் பெற்ற 60 லட்ச ரூபாயை வங்கிக்கு திரும்ப கட்டியுள்ளனர்” என்றார்.

வறட்சி நிவராண விவகாரத்தில் விவசாயிகள் மத்தில் பெரும் அதிருப்தி அலை ஏற்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தலைமைக்கு மனு அனுப்பியுள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

9 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்