மற்ற போராட்டங்களில் காண முடியாத மற்றுமொரு அம்சம் காந்தி நடத்திய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டிலும் காண முடியும். யாரை காந்தி எதிர்த்தாரோ அந்த ஆங்கிலேயர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் காந்தியோடு சேர்ந்து, தங்கள் இனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். இரண்டு தேசங்களிலும் காந்தியின் போராட்டத்துக்கு அவர்கள் வலுசேர்த்ததுடன் காந்தியின் நோக்கங்களுக்காக அவர்கள் ஆங்கிலேய அரசிடமும் அரசின் பிரதிநிதிகளிடமும் தொடர்ந்து தூது சென்றார்கள், பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆங்கிலேய அரசுகளின் நிலைப்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் ஏற்படுவதற்கு ஆங்கிலேயர் பலரும் பாடுபட்டிருக்கிறார்கள். இன்று வரலாறு காந்தியையும் பிற இந்தியத் தலைவர்களையும் நினைவுகூர்கிறது. எந்தப் பிரதிபலனையும் பாராமல் நியாயத்துக்காகவும் தங்கள் இனத்தின் மீது ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கவும் காந்திக்கு உறுதுணையாக நின்ற பல்வேறு ஆங்கிலேயரை நாம் மறந்துபோய்விட்டோம்!
ஆங்கிலத்தனம்தான் எதிரி!
காந்தி எப்படி ஆங்கிலேய இதயங்களை வெற்றி கொண்டார் என்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் பெரிய வரலாறு. காந்தி இந்திய விடுதலையைப் பற்றிப் பேசும்போது தொடக்கத்திலிருந்தே ஒரு விஷயத்தை வலியுறுத்திவந்தார். ஆங்கிலேயர் இல்லாத ஆங்கிலேய அரசைத்தான் இந்தியர்கள் விரும்புகிறார்கள்; அதாவது புலி வேண்டாம், புலியும் குணம் மட்டும் வேண்டும் என்பதே இந்தியர்களின் மனநிலை. ஆகவே, காந்தி எதிர்த்தது ஆங்கிலத்தனத்தைதானே ஒழிய ஆங்கிலேயரை அல்ல. இதைத் தனது ஆங்கிலேய நண்பர்களை உணர வைத்ததில் காந்தி பெரும் வெற்றி பெற்றிருந்தார்.
இயேசுவுக்கு மிக நெருக்கமானவர்…
முதன்முதலில் காந்தியின் சுயசரிதையை (1909-ல்) எழுதியவர் ஜோஸஃப் ஜே. டோக் என்ற பாப்டிஸ்ட் பாதிரியார். பிரிட்டனின் டெவோன்ஷயரில் பிறந்தவர். ஜோஹனஸ்பர்க் பாப்டிஸ்ட் திருச்சபைக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்காகத் தென்னாப்பிரிக்காவுக்கு 1907-ல் வந்தார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது பாகுபாடு காட்டும் விதத்தில் பிரிட்டன் அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சாத்விக முறையில் நட்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டிருந்திருக்கிறார். கிட்டத்தட்ட அதேபோன்று நடந்த காந்தியின் சத்தியாகிரகப் போராட்டம் டோக்கின் மனதைக் கவர்ந்தது. இந்தியர்களின் உணர்வுகளை கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் இருந்தது கண்டு டோக் மிகுந்த வருத்தம் கொண்டார். அவரது மனசாட்சிக்கும் அவர் நம்பிய மதத்தின் தார்மிக நிலைக்கும் விடுக்கப்பட்ட கூக்குரலாக இந்திய மக்களின் போராட்டத்தைக் கண்டுகொண்டு அதற்குத் தனது முழு ஆதரவையும் தந்தார்.
காந்தியைத் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் சந்திக்கச் செல்கிறார் டோக். ஆங்கிலேய பாதிரியாரைக் கண்ட இந்தியர்கள் இனம்புரியாத அச்சத்துடன் காந்தியின் அறையை விட்டுச் சென்றுவிடுகிறார்கள். காந்தியைச் சந்தித்தவுடனே “ நீங்கள் நம்பும் இந்த நல்ல நோக்கத்துக்காக எந்த அளவுக்கு நீங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று டோக், காந்தியிடம் ஒரு கேள்வியை நீட்டுகிறார். “என்னைப் பொறுத்தவரை முழுவதும் இதற்கான நான் ஒப்புக்கொடுக்க வேண்டியதுதான்… இதற்காக எந்த நேரத்திலும் என் உயிரை இழக்கவோ அல்லது வேறு எதை வேண்டுமானாலும் செய்யவோ நான் தயாராக இருக்கிறேன்” என்று காந்தியிடமிருந்து சட்டென்று பதில் வந்தது. ( தென்னாப்பிரிக்காவில் காந்தி, ராமச்சந்திர குஹா.) இந்தப் பதில்தான் காந்தியை நோக்கி டோக்கை உந்தித்தள்ளப் பெரிதும் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
மேலும், காந்தி அடிக்கடி இயேசு கிறிஸ்துவை, குறிப்பாக இயேசுவின் மலைப் பிரசங்கத்தை, மேற்கொள் காட்டியதும் டோக்கைப் பெரிதும் ஈர்த்தது. இதன் விளைவாக, 1913-ல் டோக் காலமாகும் வரை அவர் காந்தியின் போராட்டங்களில் பெரும் பங்கு வகித்தார். காந்தி துரோகம் செய்கிறார் என்று கருதி மீர் ஆலம் கான் உள்ளிட்டவர்கள் காந்தியைக் கடுமையாகத் தாக்கியபோது டோக்தான் காப்பாற்றிச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். இதனால், இந்தியர்களிடமிருந்து டோக்குக்கு நன்றிக் கடிதங்கள் வந்து குவிந்தன.
டோக் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலைத்தான் காந்தி டால்ஸ்டாய்க்கு அனுப்புகிறார். காந்தியை டால்ஸ்டாய் தனது சிஷ்யராக ஏற்றுக்கொள்வதற்கு டோக்கின் நூலும் ஒரு முக்கியக் காரணம். டால்ஸ்டாயின் ஆதரவு காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்துக்குப் பெரும் தார்மிக வலுவைக் கொடுத்தது. அப்போது வாழ்ந்த எந்த கிறிஸ்தவரையும் விட காந்திதான் இயேசு கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக இருப்பவராக டோக் கருதினார். காந்தியின் எளிமையும் உண்மையும்தான் இதற்கு முக்கியமான காரணங்கள்.
ஹென்றி போலக்கும் மிலி கிரஹாம் போலக்கும்
காந்தியின் முக்கியமான சக பயணிகளில் ஒருவர் ஹென்றி போலக். இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்த ஹென்றி போலக்கை காந்தியுடன் இணைத்ததற்கு இருவரும் சைவ உணவின் மீது கொண்டிருந்த பற்று மிக முக்கியமான காரணம். ஹென்றி போலக்குக்கும் அவரது காதலி மிலி கிரஹாமுக்கும் காந்திதான் திருமணத்தை நடத்திவைத்தார். காந்தியின் குடும்பமும் ஹென்றி போலக்கின் குடும்பமும் ஒன்றுசேர்ந்து வாழ்க்கையை நடத்தியது தென்னாப்பிரிக்காவின் அந்தக் காலத்து நிறவெறிச் சூழலில் பெரிய புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். காந்தி எந்த அளவுக்குத் தன் போராட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதே அளவுக்கு ஈடுபாடு செலுத்தியவர்கள் போலக் தம்பதியினர். காந்தி சிறைக்குச் சென்றால் போராட்டத்தையும் பத்திரிகை, பண்ணை போன்ற விவகாரங்களையும் அந்தத் தம்பதியினர் திறம்படப் பார்த்துக்கொண்டார்கள். காந்தியுடன் ஹென்றி போலக்கும் சிறை சென்றதும் உண்டு.
1913-ல் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஹென்றி போலக்கும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே நடந்த விசாரணையில் ஹென்றி போலக், ஒரு ஆங்கிலேயராகவும் யூதராகவும் வழக்கறிஞராகவும் அந்தப் போராட்டத்தில் தான் கலந்துகொண்டதற்காகக் கூறுகிறார். ஒரு ஆங்கிலேயராக, தனது பேரில் ஆங்கிலேய அரசு கொடுமை இழைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கத் தன்னால் முடியாது என்கிறார். ஒரு யூதராக, எந்த இனத்தின் மீதும் எந்த தேசத்தினர் மீதும் ஏவப்படும் அடுக்குமுறையோடு தன்னால் கைகோக்க முடியாது; அதனால், இந்தியர்கள் மீது இழைக்கப்படும் அநீதியைத் தன் உயிரின் ஒவ்வொரு நரம்பாலும் எதிர்க்க வேண்டும் என்கிற உணர்வு தன்னை உந்தித்தள்ளியது என்றார்.
ஒரு வழக்கறிஞராக, அரசுக்கும் தனது தொழிலுக்கும் விசுவாசமாக இருப்பதாகத் தான் சத்தியப் பிரமாணம் எடுத்திருப்பதாகவும், அந்தப் பிரமாணத்துக்கு உட்பட்டு அரசின் குடிமக்களுக்கு நீதி கிடைக்கத் தன்னால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அவற்றைச் செய்ததாகவும், விசுவாசத்தைவிட நீதியையும் மனிதச் சட்டத்தைவிட தர்மத்தின் சட்டத்தையுமே முதன்மையானவையாகக் கருதும் ஒரு கண்ணியமான மனிதனாகத் தான் இதையெல்லாம் செய்ததாகவும் போலக் குறிப்பிட்டார். காந்தி உள்ளிட்ட இந்தியர்கள் பேசியதெல்லாம் ஒரு விஷயமே இல்லை; ஹென்றி போலக் போன்ற ஆங்கிலேயரையும் காந்தி தன்னைப் போல் பேச வைத்ததுதான் விஷயம். இதுதான் இதயங்களை வெற்றி கொள்ளுதல் எனும் கலை.
சிறை சென்றது மட்டுமல்ல. காந்தி தனது போராட்டத்துக்கு ஆதரவு தேடியும் அரசியல் செல்வாக்கின் மூலம் மாற்றம் ஏற்படுத்தவும் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஹென்றி போலக் இந்தியாவுக்கு வந்து தென்னாப்பிரிக்கப் போராட்டத்துக்கு ஆதரவும் நிதியும் திரட்டினார். இந்தியர்கள், ஆங்கிலேயர் இரண்டு தரப்பிலும் காந்தியின் போராட்டத்தைப் பற்றி எடுத்துக்கூறினார். அவரது இந்தியப் பயணத்தின்போது தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தைப் பற்றிய புத்தகம் ஒன்றையும் ஹென்றி போலக் எழுதினார். அவரைப் போலவே அவரது மனைவி மிலி போலக்கும் காந்தியைப் பற்றிய நூல் ஒன்றைப் பின்னாட்களில் எழுதினார்.
ஜெனரல் ஸ்மட்ஸும் காந்தியின் காலணிகளும்
ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் காந்திக்கும் உள்ள அரசியல் பிணக்கு யாவரும் அறிந்ததே. அந்தப் பிணக்கைத் தாண்டியும் இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு இருந்திருக்கிறது. காந்தி சிறை வைக்கப்பட்ட போது அவருக்கு மதசம்பந்தமான புத்தகங்களை ஸ்மட்ஸ் கொடுத்தனுப்பியிருக்கிறார். அதற்குப் பதிலாக காந்தி தனது தொண்டர்களை ஒரு ஜோடி காலணிகளை ஸ்மட்ஸுக்குத் தன் சார்பில் பரிசளிக்கச் சொன்னார். காந்தியின் 70-வது பிறந்த நாள் தருணத்தில் அந்தக் காலணிகளை காந்திக்கே திருப்பி அனுப்பிய ஸ்மட்ஸ் இப்படி ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தார்: ‘இந்தக் காலணிகளை நான் பல கோடைக் காலங்களில் அணிந்திருக்கிறேன். என்றாலும் மாபெரும் மனிதர் ஒருவரின் காலணிகளில் நிற்பதற்குச் சிறிதும் தகுதியில்லாதவனாக என்னைக் கருதுகிறேன். நான் அப்போதே பெரும் மதிப்பு கொண்டிருந்த ஒரு மனிதருக்கு எதிராளியாக நான் இருக்க வேண்டுமென்பது எனது தலையெழுத்து… பிரச்சினையின் மனிதப் பின்னணியை அவர் ஒருபோதும் மறந்ததில்லை, ஒருபோதும் கோபப்பட்டதில்லை, வெறுப்பு கொண்டதில்லை, மிகவும் இக்கட்டான சூழல்களில் கூட தனது மெல்லிய நகைச்சுவை உணர்வை அவர் தக்கவைத்துக்கொண்டிருந்தார். அவரது பண்பும் வழிமுறையும் அந்தக் காலத்திலும் பிற்பாடும் நிலவிய மூர்க்கத்தனத்துக்கும் வன்முறைப் போக்குக்கும் நேரதிராக இருந்தன…’
ஆதிக்கத் தரப்பின் பிரதிநிதி ஒருவரை இப்படிப்பட்ட சிந்தனை மாற்றத்துக்குக் கொண்டுவருவதற்கு எவ்வளவு தியாகங்களை காந்தி செய்திருக்க வேண்டும்? ‘எதிராளியை வெறுக்காமல் எதிர்க்க வேண்டும்’ என்ற காந்தியின் வழிமுறைதான் எதிர்த் தரப்பிலிருந்து இத்தகைய மனமாற்றங்களை ஏற்படுத்தியது.
சார்லஸ் ஆண்ட்ரூஸ், மீரா பென்…
தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தில் காந்திக்குத் துணைநின்ற ஆங்கிலேய நண்பர்களின் உறவு இந்தியாவிலும் தொடர்ந்தது. இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று காந்தியின் போராட்டங்களில் பேச்சுவார்த்தைகளில் பெரும் உதவி செய்தவர் பாதிரியார் சார்லஸ் ஆண்ட்ரூஸ். காந்தியை இந்தியாவுக்குத் திரும்பி வந்து இங்கேயும் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று தூண்டிய சக்திகளுள் சார்லஸ் ஆண்ட்ரூஸின் நட்பும் ஒன்று. அவரும் காந்தியைப் பற்றி ஒரு முக்கியமான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இன்னும் ஏராளமான ஆங்கிலேய நண்பர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் காந்தியின் போராட்டங்களுக்குத் தங்கள் உடல், பொருள், ஆவியை ஒப்படைத்தார்கள். ஆங்கிலேய அட்மிரலின் மகளான மாடலீன் ஸ்லேட், காந்தியைப் பற்றி ரோமன் ரோலந்து எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து காந்தியின் சிஷ்யையாகச் சேர்ந்துகொண்டார். தனது பெயரை மீரா பென் என்று மாற்றிக்கொண்டார். அதேபோல் இங்கிலாந்திலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள வெள்ளை இனத்தவர் பலரும் நேரிலும் மானசிகமாகவும் காந்திக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் ஆதரவு வழங்கினார்கள்.
எட்வினா மவுண்ட்பேட்டன்
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் காந்தியின் அறிவிக்கப்படாத சிஷ்யையாக வந்து சேர்ந்தவர் எட்வினா மவுண்ட்பேட்டன். பிரிவினையில் இந்தியா ரத்தம் கொப்பளித்துக்கொண்டிருந்த நேரத்தில் லட்சக்கணக்கான இந்துக்களும் முஸ்லிம்களும் பரஸ்பரம் இரு நாடுகளிலிருந்தும் அகதிகளாக இடம்பெயர்ந்தன. டெல்லியில் இருந்த அகதிகள் முகாமுக்கு காந்தி, நேரு போன்றவர்களைத் தவிர அநேகமாக வேறு இந்தியத் தலைவர்கள் யாரும் போய்ப் பார்த்திராத நேரத்தில் எட்வினா அகதிகள் முகாமுக்கு இடைவிடாமல் சென்றுவந்ததுடன் அகதிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதருவதிலும் முனைப்பாக ஈடுபட்டிருந்தார்.
போர்க்காலத்தில் ஓடிஓடி மருத்துவச் சேவைசெய்யும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செவிலியரைப் போலவே எட்வினா செயல்பட்டுக்கொண்டிருந்தார். நோயாளிகள், மரணப் படுக்கையில் இருந்தவர்கள், சொத்துக்களையும் சொந்தபந்தங்களையும் இழந்தவர்கள் என்று ஏராளமானோருக்கு ஆறுதலாக இருந்து அவர்களின் கண்ணீரை எட்வினா துடைத்துவிட்டார். இதற்கு காந்தியின் நவகாளி யாத்திரை மிக முக்கியமான உந்துதல். இந்தியாவை விட்டு எட்வினா தன் கணவர் மவுண்ட்பேட்டனுடன் சென்றபோது லட்சக் கணக்கான அகதிகள் கண்ணீருடன் அவரை வழியனுப்பிவைத்தார்கள். இந்தியாவை விட்டுச் சென்ற பிறகும் காந்தியிடமிருந்து பெற்ற தாக்கம் எட்வினாவுக்கு நீடித்திருந்தது.
ஆங்கிலேயரை எதிரிகளாக அல்ல, நண்பர்களாகவே வழியனுப்பிவைப்போம் என்றார் காந்தி. அப்படி நண்பர்களாக ஆங்கிலேயரை வழியனுப்பிவைப்பதில் ஆங்கிலேய நண்பர்கள் எத்தனையெத்தனை பேர் காந்திக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்! அவர்களின் இதயங்களையெல்லாம் அறத்தின் அடிப்படை வெளிப்பாடான அன்பாலேயே காந்தி வென்றார். வன்முறைப் பாதையை காந்தி தேர்ந்திருந்தால் இவர்களில் யாரும் அவர் பின்னால் வந்திருக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, காந்தியின் முதன்மையான எதிரிகளாக இவர்களே இருந்திருக்கவும் கூடும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை…)
முக்கிய செய்திகள்
மற்றவை
14 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago