கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அவசரப்பட்டு கூறிவிட முடியாது. புதிய அச்சுறுத்தல், எச்சரிக்கைகளை புறந்தள்ளுவது மெத்தனத்துக்கே இட்டுச் செல்லும். பாகிஸ்தானையொட்டிய எல்லையில் நிலைமை மேம்பட்டுவிடவில்லை. தன்னுடைய ஆட்சிக் காலத்தின் பாதிப்பகுதிக்கு வந்துவிட்ட மோடி அரசில், உள்நாட்டுப் பாதுகாப்பு மெச்சும்படி இல்லை என்பதே உண்மை.
2014 மே மாதம் ஸ்திரமான உள்நாட்டுப் பாதுகாப்பு நிலையில்தான் மோடி அரசு பதவியேற்றது. காஷ்மீர் எல்லை அமைதியாக இருந்தது. வடகிழக்குப் பகுதி குறித்து பத்திரிகை களில் தலைப்புச் செய்திகள் கிடையாது. மாவோயிஸ்ட் பகுதியில் மட்டும் தொல்லைகள் இருந்தன. ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முதல் எதிரிகள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக் காட்டியும்கூட அவர்களை ஒடுக்குவதில் முரண்பட்ட அணுகுமுறைகளே இருந்தன.
அந்தந்த மாநில போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தனர். அரசியல் தலைவர்கள் கூட உயிருக்கு அஞ்சி மாவோயிஸ்டுகளுக்கு மாமூல் கொடுத்து தப்பித்தனர். இவர்கள் மட்டுமின்றி ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்பட்ட பாகிஸ்தானிய ஜிகாதிகளும், உள்நாட்டு ஜிகாதிகளும் வழக்கம்போல தொல்லை தந்தனர். ஆனால் 2008-க்குப் பிறகு அந்தப் பிரிவிலும் ஓரளவுக்கு ஸ்திர நிலையே நிலவியது. 2014 மே மாதத்தில் இடதுசாரி தீவிரவாதம், காஷ்மீர், வடகிழக்கில் மோதல்கள் ஆகியவை வரிசை கட்டி நின்றன என்று இப்போதைய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவதும் ஏற்கத்தக்கதே.
மோடி பதவிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் நிலைமை மிகவும் மாறிவிட்டது. மாவோயிஸ்ட் பகுதிகளில் மட்டும் முன்பைவிட அதிக அமைதி நிலவுகிறது. பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு குறைந்துள்ளது. பாதுகாப்புப் படையினருடனான மோதலில் உயிருடன் பிடிபடும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் காவல் துறையிடம் சரண் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது உண்மையா, நாடகமா என்பது தனிக்கதை.
இப்போதுள்ள உள்நாட்டு அச்சுறுத்தல்களை காஷ்மீர் அமைதியின்மை, வடகிழக்கு மோதல் கள், மாவோயிஸ்ட் பகுதிகள் என்று வரிசைப்படுத் தலாம். ஐ.எஸ்., ஐ.எம்., அமைப்புகளின் மூலமான அச்சுறுத்தல் அதே நிலையில் தொடருகிறது.
உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணங்களால் பத்தாண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மீண்டும் முதல் பிரச்சினையாகி இருக்கிறது. பாகிஸ்தானுடனான உறவில் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறோம், அதுவும் இந்திய அரசின் அரசியல் முடிவினால். அதிகம் கவலையூட்டுவது உள்நாட்டுக் கோணம்தான். 2010-11-ஐ நினைவூட்டும் நிலைமையே அங்கு நிலவுகிறது. அமைதியான காஷ்மீர் பேரவைத் தேர்தல் - பிறகு தொடங்கிய அரசியல் பேச்சுகள் என்று எல்லாவற்றையும் அது பின்னுக்குத் தள்ளிவிட்டது.
சித்தாந்த ரீதியாக முரண்பாடுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் கூட்டு வைத்த தால் ராஜதந்திரத்துடன் முடிவுகள் எடுக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இவ்விரண் டுமே சேர்ந்து செயல்படுவதில் தவறிவிட்டன. “கல் வீச்சில் ஈடுபடுபவர்களையும் வெளிநாட்டு சதிகாரர்களுக்கு உடந்தையாக செயல்படு கிறவர்களாகவே கருதி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று தரைப்படைத் தலைமை தளபதி ஜெனரல் விபின் ராவத் கூறியது, விரக்தியினால் தானே தவிர புதிய முடிவால் அல்ல.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் எது நடந்தாலும் அதைக் கையாளும் திறமை ராணுவத்துக்கு இருக்கிறது. ஆனால் ராணுவத்தால் மக்களை அடக்க முடியாது. மக்களால் ‘அதிக பட்சம்’ எடுத்துச் செல்லக்கூடிய ஆயுதம் கற்கள். ராணுவத்திடம் உள்ள மிகவும் ‘குறைந்த ஆற்றல்’ உள்ள ஆயுதம் தானியங்கித் துப்பாக்கி. இவ்வி ரண்டும் களத்தில் மோதினால் என்ன நடக்கும்?
உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்தது என்று பாராட்டப்படும் இஸ்ரேல் ராணுவத்தாலேயே பாலஸ்தீன எதிர்ப்பாளர்களை அடக்க முடிய வில்லை. தன்னுடைய எல்லைக்குள், நாட்டு மக்கள் மீதே இந்திய ராணுவத்தால் ஆயுதங் களைப் பயன்படுத்த முடியாது.
மத்திய அரசும் மாநில அரசும் இளைஞர் களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டன. காஷ்மீர் அமைதியின்மையை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கின்றனர். உளவுப்பிரிவு போலீஸார் கட்டுப்பாட்டு அறைகளிலும் எல்லையில் ராணுவமும் ஈடுபடுத்தப்படுகிறது. இது அடல் பிஹாரி வாஜ்பாய் கையாண்ட உத்தி அல்ல. வாஜ்பாயின் காஷ்மீர் கொள்கைதான் தனக்கு ஊக்கம் அளித்தது என்று கூறும் மோடி, அரசியல் ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்பு எந்த நிலையில் இருக் கிறது என்பதற்கு உரைகல் அவசியம் என்றால், துணை ராணுவப் படைப் பிரிவுகள் எத்தனை பாசறையில், எத்தனை களத்தில் உள்ளன என்பதைக் கணக்கிட்டாலே போதும். துணை பாதுகாப்புப் படையில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இப்போது ஏதாவது ஒரு மாநிலத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கிலும் மோதல்கள் தீவிரமடைந் துள்ளன. மிசோரத்தில் கலகக்காரர்களுடனும் அசாமில் போராட்டக்காரர்களுடனும் ராஜீவ் காலத்தில் 1980-களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உடன்பாடுகளால் அமைதி நிலவியது. இப்போது அதற்கு முந்தைய காலத்துக்கு நிலைமை திரும்பிக் கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் இனங்களுக்கு இடையிலான மோதலால் அராஜகம் நிலவுகிறது. மத்திய பாதுகாப்புப் படையினர்தான் கொண்டுபோய் குவிக்கப்படுகின்றனர். தேர்தல் ஆதாயத்துக்காக காங்கிரஸ், பாஜக இரண்டுமே இதை அரசியலாக்கி வருகின்றன.
நாகாலாந்து நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது. ஒரேயொரு பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே பிரச்சினை தீர்ந்துவிட்டதைப்போல கொண்டாடப்பட்டது. ஆனால் குழுக்களுக்கிடையில் மோதலும் போட்டியும் தீவிரமடைந்து வருகின்றன. இக்குழுக்கள் வெளிப்படையாக ஆயுதங்களுடன் சுற்றுகின்றன, வரி வசூலிக்கின்றன. எனவே நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்படுவது மிகமிக அவசியம்.
பின் குறிப்பு: காஷ்மீர் நிலவரம் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1989-ல் ராஜீவ் பிரதமராக இருந்தபோது பூட்டா சிங் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரையும் அவருடைய மகனையும் தொடர்புபடுத்தி பல ஊழல் புகார்கள் வெளியாயின. அவை தொடர்பாக தன்னுடைய நிலையை விளக்க அவர் என்னையும் ‘இந்தியா டுடே’ எடிட்டர் அருண் புரியையும் விருந்துக்கு அழைத்திருந்தார். அப்போது ரஷியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜார்ஜிய பகுதி அரசியல் பிரமுகர் எட்வர்ட் ஷெவார்ட்நட்சேயும் விருந்துக்கு வந்தார். “ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராகத் திரளும்போது நீங்கள் எப்படி அதிக உயிரிழப்பு இல்லாமல் சமாளிக்கிறீர்கள், எங்கள் நாட்டில் ராணுவத்தை அனுப்பினால் அவர்கள் விஷவாயுவை மக்கள் மீது திருப்பிவிட்டுவிடுகிறார்கள்” என்று அங்கலாய்ப்புடன் சொன்னார்.
“கும்பல்களை அடக்க நாங்கள் ராணுவத்தை அனுப்புவதில்லை; மத்திய ஆயுதப் போலீஸ் படையை அனுப்பிவிடுவோம்; உங்களுக்குத் தேவைப்பட்டால் பயிற்சிக்கு 2 பட்டாலியன்களை அனுப்புகிறோம்” என்று அவரிடமே தெரிவித்தார்!
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
மற்றவை
4 days ago
மற்றவை
4 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
8 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
24 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago