'இயேசு கிறிஸ்து நமக்கான பாதையைக் காட்டினார். காந்தி அந்தப் பாதையை வெற்றிகரமாக நமக்குச் செயல்படுத்திக் காட்டினார்' என்றார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். காந்தியும் கூட அகிம்சையை ஏதோ தனது கண்டுபிடிப்பாக முன்வைக்கவில்லை. "இந்த உலகத்துக்கு போதிக்க புதிதாக என்னிடம் ஏதுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப் போலவே அவ்வளவு தொன்மையானவை" என்று அவரே சொல்லியிருக்கிறார்.
அகிம்சை, ஆனால் உயிர்ப்பலிகள் ஏன்?
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாதை அகிம்சைதான் என்றாலும் கடைசியில் ஏன் இவ்வளவு உயிர்ப் பலிகள் (மதக் கலவரம், பிரிவினைகள்) என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ‘அகிம்சை’ என்றதொரு பாதையில் ஒரு நாட்டின் சுதந்திரப் போராட்டம் இந்த அளவுக்கு நடைபெற்றது அதுதான் முதல்முறை. அதுவும் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட, பலதரப்பட்ட மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாட்டில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கோபத்தை வன்முறையில் செல்ல விடாமல் அமைதிப் பாதை நோக்கித் திருப்புவது அவ்வளவு எளிய விஷயம் அல்ல. 'பூரண அகிம்சை' என்பது லட்சியம்தான். அந்த லட்சியத்தை முழுவதுமாகப் பின்பற்றும் அளவுக்கு இந்தியர்கள் இன்னும் தயாராகியிருக்காத நிலை; நடைமுறையில் அதைப் பின்பற்றுவதில் உள்ள சிக்கல்களின் விளைவு; ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவையே இறுதியில் நிகழ்ந்த வன்முறைகளுக்குக் காரணம். இந்திய சுதந்திரப் போராட்டம் அகிம்சை வழியில் நடந்தே அவ்வளவு ரத்தப் பலிகளைக் கடைசியில் கொடுத்திருக்கிறதென்றால், வன்முறை வழியில் நடந்திருந்தால் நம்மால் யோசித்தே பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்திருப்போம்; சுதந்திரமும் மேலும் பல ஆண்டுகள் தள்ளிப்போடப்பட்டிருக்கும். அப்படியே சுதந்திரம் அந்த வழியில் கிடைத்திருந்தாலும் வன்முறை மூலமாக சுதந்திரம் பெற்ற நாடுகள் பலவற்றைப் போலவே சுதந்திரத்துக்குப் பிறகும் ரத்தக்களரியின் தேசமாக இந்தியா தொடர்ந்திருக்கும்; சிதைந்தும் போயிருக்கக் கூடும். இன்றுவரை சிதையாமல் இந்தியா தாக்குப்பிடித்துக்கொண்டிருப்பதற்கு அதன் அகிம்சைப் பாதையும் ஒரு காரணம்.
இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், பெரும்பாலானோர் ஏழைகளாக இருக்கும் ஒரு நாட்டில் வன்முறை மூலம் சுதந்திரப் போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்தியா பேரழிவையே சந்தித்திருக்கும். இங்கிலாந்து சிறு நாடாக இருந்தாலும் ஆங்கிலேயே சாம்ராஜ்யம் ஒட்டுமொத்த உலகத்தையும் சுற்றிவளைத்திருந்தது. அப்படிப்பட்ட வலிமை மிக்கவர்களை எதிர்கொள்ளும் வலிமை, பசியால் மெலிந்துகிடக்கும் இந்தியர்களுக்கு இல்லை. வலிமையை வலிமையால் வீழ்த்துவது சிறந்த உத்தியல்ல. வலிமையை மென்மையால் வீழ்த்துவதே சிறப்பான உத்தி. இந்த உத்தியைக் கண்டுகொண்ட காந்தி அதையே அகிம்சையாக மக்களுக்கு போதித்தார். உலக மக்களின் பரிவு இந்தியாவுக்குக் கிடைத்ததற்குக் காரணமே அகிம்சை வழிப் போராட்டம் என்பதால்தான். நியாயமான காரணங்களுக்காக வன்முறையை மேற்கொண்டு தன் தரப்புக்கும் பேரழிவைத் தந்து எதிர்த் தரப்புக்கும் பேரழிவைத் தந்து தோற்றுப்போன எத்தனையோ போராட்டங்களை நாம் அறிவோம். அந்தப் போராட்டங்கள் உலக மக்களின் பரிவை இழந்ததற்குக் காரணம் அவர்களின் வன்முறைப் பாதையே.
பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி போன்றோரின் தியாகங்கள் மகத்தானவை. ஆனால், அவர்களின் வன்முறைப் பாதையை காந்தி அங்கீகரிக்கவில்லை. ஒரு செயலின் பலன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அந்தச் செயல் செய்யப்படும் விதமும் முக்கியம் என்றவர் அவர். ஆயுதம் எடுத்துப் போராடியவர்களைக் கண்டல்ல, அகிம்சையைக் கண்டுதான் ஆங்கிலேயர்கள் அதிகம் நடுநடுங்கினார்கள்.
அகிம்சையெனும் புரட்சி
ஒரே ஒரு சம்பவம்: உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கிய பின் காந்தி கைதுசெய்யப்படுகிறார். ஆனால், அவருடைய தொண்டர்கள் போராட்டத்தைத் தொடரும் வகையில் உப்பெடுக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கு எதிரில், அவர்கள் உப்பெடுக்க முன்வந்தால், அவர்களை அடித்து நொறுக்கப் பெரும் படையொன்று தயாராக நிற்கிறது. தொண்டர்கள் அஞ்சாமல் முன்செல்கிறார்கள். முன்செல்பவர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஆனாலும், தொடர்ந்து தொண்டர்கள் முன்செல்கிறார்கள். அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அடிப்பவர்களுக்குக் கை நடுங்க ஆரம்பிக்கிறது. ஆனால், காந்தியின் தொண்டர்கள் நடுங்கவில்லை. அடிப்பவர்களை, எதிர்ப்பில்லாமல் அடிவாங்குபவர்கள் நடுங்கவைக்கும் நிகழ்வு வேறேதும் உண்டா அதற்கு முன்? இதைவிட என்ன புரட்சி வேண்டும்?
இதற்கு முன்னோடியான பல நிகழ்வுகளை காந்தியின் தென்னாப்பிரிக்கக் காலத்திலிருந்து உதாரணம் காட்ட முடியும். 1913-ல் தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் பகுதியில் காந்தி தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டம் மிகவும் முக்கியமானது. ஆங்கிலேய அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஆயிரக் கணக்கன ஏழை எளியவர்களை ஒன்றுதிரட்டி அரசுக்கெதிராக அமைதியான அணிவகுப்பை காந்தி முன்னடத்திச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ‘கேப் கார்ட்’ (Cape Cart) எனப்படும் குதிரை வண்டியொன்று வருகிறது. போராட்டக்காரர்களுக்கு முன்பாக வந்து நிற்கும் அந்தக் குதிரை வண்டியிலிருந்து ஆங்கிலேய அதிகாரியான சாம்னியும் ஒரு போலீஸ்காரரும் இறங்குகிறார்கள். ‘நான் உங்களைக் கைதுசெய்கிறேன்’ என்கிறார். ‘நான் அதற்கு எந்த மறுப்பும் சொல்லப்போவதில்லையே’ என்று சொல்லும் காந்தி தனது கூட்டத்தை நோக்கித் திரும்பி, ‘அமைதி வழியில் தொடர்ந்து போராடுங்கள்’ என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிடும் போலீஸ்காரர், ‘ நீங்கள் இப்போது ஒரு கைதி; உரையாற்றும் உரிமை உங்களுக்கு இல்லை’ என்று கூறி அவரைக் கைது செய்து வண்டியில் ஏற்றுகிறார். வண்டியை விரைவாக ஓட்டும்படி தனது சாரதிக்குப் பணிக்க, புயல் வேகத்தில் புறப்பட்டுச் செல்கிறது வண்டி. ஒட்டுமொத்தக் கூட்டமும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறது. கைதுக்கெதிராக வன்முறை, சலசலப்பு எதுவும் இல்லை. எப்படிப்பட்ட ஒரு மனச்சமநிலையையும் மனஉறுதியையும் தெளிவையும் அந்த மக்களுக்கு காந்தி வழங்கியிருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.
இதைப் பற்றிப் பின்னாளில் காந்தி இப்படி எழுதுகிறார்: ‘தென்னாப்பிரிக்காவில் தரிசாகக் கிடந்த ஒரு நிலத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றா நாங்கள், தடைசெய்யப்பட்ட பகுதி ஒன்றுக்குள் நுழைய முயன்றோம். என்னுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் கணிசமான பெண்களும் இருந்தார்கள்… தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு எங்களுக்கு அளித்த மிகப் பெரிய கவுரவம் அது (வெறும் மூன்று பேர் மட்டும் வந்து கைது செய்தது). நாங்கள் எந்த அளவுக்கு மன உறுதி கொண்டிருந்தோமோ அந்த அளவுக்குச் சிறிதும் தீங்கிழைக்காத இயல்புடையவர்கள் என்பதை ஆங்கிலேய அரசு அறிந்திருந்தது. என்னைக் கைதுசெய்ய வந்தவர்களைக் கண்டதுண்டமாக வெட்டிப் போடுவதற்கு என்னுடன் இருந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கு ரொம்ப நேரம் ஆகியிருந்திருக்காது. அப்படிச் செய்திருந்தால் அது மிகவும் கோழைத்தனமான ஒரு செயலாகவே இருந்திருக்கும்; மேலும், அவர்கள் செய்துகொண்ட சத்தியத்தை அவர்களே மீறியது போலவும் ஆகிவிட்டிருக்கும். ஆனால், அவர்கள் மிகவும் கட்டுப்பாடான படைவீரர்கள்"
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தென்னாப்பிரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி போராட்டங்களின் போது காந்தி கைதுசெய்யப்பட்டால் போராட்டம் அப்படியே நின்றுவிடாது. அத்தனை பேருக்கு அவர் பயிற்சி கொடுத்திருந்தார். காந்தி இல்லாவிட்டாலும் போராட்டம் சற்றும் தீவிரம் குறையாமல் நடக்கும். ஏனெனில் ‘காந்தி’ என்றால் அவர்களைப் பொறுத்தவரை காந்தி என்ற மனிதரின் உடலை மட்டுமல்ல அதற்கும் அதிகமாக அந்த மனிதரின் உணர்வையே குறிக்கும். காந்தியின் உடல் அவர்களுடன் இல்லையென்றாலும் அவரது உணர்வு அவரது தொண்டர்களை வழிநடத்தும். காந்தி கைதானாலும் அவரது தொண்டர்கள் கலங்காமல் முன்சென்றதற்குக் காரணம் இதுதான். இப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்ட சத்தியாகிரகத் தொண்டர்கள் இருக்கும்போது கைதாவதற்கு காந்தி கவலைப்பட முடியுமா?
எங்கிருந்து வந்தது இந்த சக்தி?
எப்படிப்பட்டப் போராட்டத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ளும் துணிவு, நீண்ட காலப் போராட்ட வாழ்வின் விளைவாலும் அசாத்தியமான மனப்பக்குவத்தாலும் காந்திக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால், அந்தத் தொண்டர்களுக்கு இவ்வளவு சக்தி, மன உறுதி எங்கிருந்து வந்தது? அதுதான் காந்தியின் சக்தி. எல்லோருக்குமான மன உறுதியைக் கதிர்வீச்சுபோல் பரப்பும் சக்தி அது. அந்த சக்தியைக் கண்டுதான் ஆங்கிலேயர் அதிகம் அஞ்சினார்களே தவிர, ஆயுதங்களையோ ஆயுதப் போராட்டங்களையோ கண்டு அல்ல.
உண்மையில், காந்தியின் காலத்துக்கு முன்னாலும், அவரது காலத்திலும் எத்தனையோ ஆயுதக் கிளர்ச்சிகளை நசுக்கியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆகவே, ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை வன்முறைப் புரட்சி அடித்துத் துரத்தியிருக்கும் என்றும், அதை காந்திதான் மழுங்கடித்தார் என்றும், இதற்காகவே ஆங்கிலேயர்கள் காந்தியைக் கொண்டுவந்தார்கள் என்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ திரும்பத் திரும்ப சொல்வது எவ்வளவு தவறாக கருத்து என்பது இப்போது புரிகிறதல்லவா!
மற்ற புரட்சிகளின் நிலை என்ன?
காந்தி மட்டும் இல்லையென்றால் புரட்சியின் மூலம் ஆங்கிலேயரை அடித்துத் துரத்தி இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தியிருக்கலாம். அவர்தான் கெடுத்துவிட்டார் என்று மார்க்கண்டேய கட்ஜூவைப் போலவே சில இடதுசாரிகள் தரப்பில் அடிக்கடிச் சொல்லப்படுவது குறித்து பேராசிரியர் மார்க்ஸ் நான் எடுத்த பேட்டியில் இவ்வாறு எதிர்வினை தருகிறார்: "அவர்களிடம் ஒரு எளிய கேள்வி. லெனின் மாபெரும் புரட்சியாளர்தான். அவர் புரட்சி ஏற்படுத்திய ரஷ்யாவில் இன்று என்ன நிலை என்று கேட்க வேண்டும். மாவோ ஏற்படுத்திய சீனப் புரட்சியின் இன்றைய நிலை என்ன? சும்மா பேசலாம். ஆனால், இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை"
புரட்சிகர இடதுசாரி இயக்கங்களில் ஈடுபட்டிருக்கும் அனுபவம், சிறுபான்மையினருக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்காகவும் மனித உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் அனுபவம் கொண்டவர் அ. மார்க்ஸ். காந்தியை அவர் தனது ஆதர்சங்களுள் ஒன்றாக ஏன் கொண்டிருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இது குறித்து மார்க்ஸ் மேலும் சொல்கிறார், "வன்முறையை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துவதை அற அடிப்படையிலான தவறு என்று காந்தி பார்க்கிறார். நான் அதை அற அடிப்படையிலான தவறாக மட்டுமல்லாமல் உத்திரீதியிலான தவறாகவும் பார்க்கிறேன். நாங்களும் நக்ஸலைட் இயக்கத்தில் இருந்திருக்கிறோம். ஆபத்துடன் விளையாடியிருக்கிறோம். போலீஸிடம் அடிவாங்கியிருக்கிறோம். ஆனால், இன்று நக்ஸலைட் இயக்கங்கள் என்பது முற்றிலும் மோசமான நிலையை அடைந்துவிட்டன. மற்றவர்களைக் கொல்வது மட்டுமல்லாமல் தங்களுக்குள் கொல்வது என்ற மூர்க்கமான நிலையை அடைந்துவிட்டன. நக்ஸலைட் கொள்கையின் அடிப்படை என்பது கிராமங்களை ஆக்கிரமித்து அப்படியே நகரங்களைச் சுற்றிவளைப்பதுதான். இன்றைக்கு நக்ஸலைட் இயக்கங்களின் இருப்பு என்பது தண்டகாரண்யத்தில் ஆரம்பித்து ஆந்திரம் வரை கிழக்குக் கடற்கரையோரக் காடுகளில் மட்டுமே என்றாகிவிட்டது. சமவெளிக்கு அவர்கள் வரவேயில்லை. மற்ற சில இடங்களில் அடையாளரீதியில்தான் அவர்கள் இருப்பு. அடிப்படையில் வன்முறையின் மூலம் மக்களிடமிருந்து எளிதில் அந்நியப்படுத்தப்படுவோம் என்பதுதான் உண்மை. அரசாங்கம் மிகச் சுலபமாக நீங்கள் வன்முறையாளர் என்று பிரச்சாரம் செய்து மக்களிடையே அவர்கள் மீது வெறுப்பும் பயமும் ஏற்படுத்தி ஒதுக்கிவிட முடியும். அடுத்ததாக, வன்முறையின் மூலம் கொல்லப்பட்ட உயிர்கள். இன்றைக்கு நீங்கள் ஈழத்தில் பார்த்தால் முப்பது ஆண்டுகாலப் போராட்டம் என்பது உயிரிழப்பிலும் இன அழிப்பிலும் வந்து முடிந்திருக்கிறது. ராஜபக்சே மட்டுமல்ல பிரபாகரனும் தமிழர்களைக் கொன்றிருக்கிறார் என்று பார்க்கும்போது வன்முறையின்மூலம் விளைந்ததென்ன என்ற பெரும் கேள்வி நம் முன் எழும்" என்கிறார்.
மேலும் அ. மார்க்ஸ் சொல்கிறார், "1980-களுக்குப் பிறகு ஹமாஸ், ஸ்காட்லாந்தில் உள்ள ஆயுதப் போராட்ட இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பலவும் ஆயுதப் பாதையைக் கைவிட்டு வேறு விதமான பாதைக்குச் செல்வது என்று முடிவெடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அமைதிவழியைத் தேர்ந்தெடுத்தவர் காந்தி. இந்தியா போன்ற பின்தங்கிய, ஏழை மக்கள் நிரம்பிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது பேரழிவில்தான் கொண்டுபோய் விடும் என்று உறுதியாக எண்ணியவர் காந்தி. இந்தப் பாடத்தை அவர் கற்றுக்கொண்டது தென்னாப்பிரிக்காவில். பலமான எதிரி, பலவீனமான மக்கள். இந்த பலவீனமான மக்களைக் கொண்டு பலவீனமான எதிரியைப் பணியவைப்பதில் வன்முறையை மேற்கொண்டால் இழப்பு என்பது நமக்குதான். அடுத்ததாக, வன்முறை மூலம் ஒரு தலைமுறையானது தனது நிகழ்காலத்தை இழக்கிறது. உன்னதமான லட்சியங்களைக் காரணம் காட்டித்தான் நிகழ்காலத்தை இழக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உத்வேகத்தில் பலரும் தங்கள் நிகழ்காலத்தை இழக்க முன்வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, உன்னத லட்சியமொன்றைக் காட்டிகூட ஒருவரது நிகழ்காலத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன். இன்னொரு விஷயம் என்னவென்றால், எதிர்காலம் என்பது அப்படியொன்றும் உத்தரவாதமான எதிர்காலமும் அல்ல. ரஷ்யப் புரட்சியை விட நேர்மையான புரட்சி இருக்க முடியாது. லெனினைவிட உன்னதமான மனிதாபிமானத் தலைவர் இருக்க முடியாது. ஆனால், அந்த ரஷ்யப் புரட்சியும் கூட அந்த மக்களுக்கு விடுதலையைத் தரவில்லை. அந்த மக்களாலேயே தூக்கியெறியப்பட்ட ஒரு அரசாங்கம்தான் இறுதியில் நடந்தது. ஆகவே, மக்களின் நிகழ்காலத்தை அழித்துவிட்டு எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ஒரு வழிமுறையைத் தவிர்த்துவிட்டுதான் நாம் யோசிக்க வேண்டியதாகிறது. இந்த வகையில் காந்தியின் அகிம்சையைப் பற்றி நாம் பார்க்க வேண்டும்"
(நாளை...)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
24 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago