திண்டுக்கல்: பிரையண்ட் பூங்காவுக்கு 5.88 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆண்டு சீசனில் மொத்தம் 5.88 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.1.66 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சிறந்த சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, டம்டம் பாறை, வழிநெடுக இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சுற்றுலா மையங்கள் உள்ளன. இவற்றில் பல்வகை பூஞ்செடிகள், மரங்கள் நிறைந்த பிரையண்ட் பூங்கா சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த பூங்காவை 1908-ம் ஆண்டு எச்.டி.பிரையண்ட் என்ற வனத்துறை அதிகாரி அமைத்தார். அதனால், அவர் பெயரிலே பிரையண்ட் பூங்கா என அழைக்கப்படுகிறது. சுற்றுலாவுக்காக கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், கண்டிப்பாக இந்த பூங்காவைப் பார்த்துச் செல்வர்.

ஆண்டுதோறும் 2 சீசன்கள்

கொடைக்கானலில் ஆண்டுதோறும் இரு சீசன்கள் நடைபெறுகின்றன. ஏப். 1 முதல் மே 31-ம் தேதி வரை முதல் சீசனும், ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் வரை 2-வது சீசனும் தொடங்கி முடிகிறது. மற்ற மாதங்களில் பனி, குளிரால் சுற்றுலாப் பயணிகள் வருகை மிகக் குறைவாகக் காணப்படும். முதல் சீசன் காலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், விடுமுறை கால சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இரண்டாவது சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், குழுகுழுவாக சுற்றுலா பயணிகள் அதிகளவு கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். அதனால், இந்த இரு சீசனிலும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும்.

2013 ஏப். முதல் மார்ச் வரை ஒரு ஆண்டு சீசன் மூலம் பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கைத் தாண்டி கடந்த டிசம்பர் முடிவிலே 5 லட்சத்து 88 சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 24 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், வரும் மார்ச் முடிவில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் பயணிகள் வருகை

மேலும், அவர்கள் கூறுகையில், கடந்த 51 ஆண்டுகளில் தற்போதுதான் கூடுதல் சுற்றுலா பயணிகள் வருகை, வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த 2012-ம் ஆண்டு 5 லட்சத்து 11 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அதன் மூலம் ரூ.94 லட்சத்து 24 ஆயிரம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE