கடந்தது நூறாண்டு… இன்னும் கொட்டகையில் பிணவறை!- வால்பாறை அரசு மருத்துவமனையின் அவலம்

கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் உள்ள நகரம் வால்பாறை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது ஆனைமலை ஹில்ஸ் ஹால்பிட்டல்.

வால்பாறையில் முதல்முறையாக அமைக்கப்பட்ட அரசுக் கட்டிடம் என்ற பெருமையுடன் இன்றும் மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனை தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தேயிலைத் தோட்ட மக்களின் வரலாற்றுப் பதிவுகளில், அந்த மக்களுக்கு வந்த நோய்களும், அதற்கென வழங்கப்பட்ட மருத்துவமும் முக்கிய இடம் பெறுகின்றன. 1915ம் ஆண்டு பிப்.16ம் தேதி புதுத்தோட்டம் பகுதியில் ஜி.ஏ.மார்ஷ் என்பவரால் அமைக்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையும், அந்த கோர வரலாற்றின் முக்கியச் சான்றாகும்.

இப்படி பல பெருமைகளைத் தாங்கி, நூறாவது ஆண்டில் பயணிக்க உள்ள மருத்துவமனை மக்களுக்கு எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பது கேள்விக்குறியே. ஆண்டுகள்தான் நூறு கடந்துவிட்டன. ஆனால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளும், கட்டப்பட்ட கட்டிடங்களும் எத்தனை என்பதே பொதுமக்கள் கேள்வி.

அவர்கள் கூறுகையில், நூறு ஆண்டுகளுக்கு முன் கொட்டகையில் அமைக்கப்பட்ட பிரேத பரிசோதனைக் கூடமே, இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு என தனியாக இருந்த பிரிவு சிதிலமடைந்து, சில வருடங்களுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. பல் மருத்துவம், மகப்பேறு, சித்த மருத்துவம் என பல பிரிவுகளில் இருந்தாலும், மருத்துவ வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், கட்டிடப் பிரிவுகள் என பற்றாக்குறைகள் நிறைந்துள்ளன. 2005-06ம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட எலும்பு மற்றும் இதய சிகிச்சைப் பிரிவு பூட்டியே கிடக்கிறது என்கின்றனர்.

கடும் குளிர், வன விலங்குகள் நடமாட்டம், அடிக்கடி ஏற்படும் மலைப்பாதை விபத்துக்கள் என தினம் தினம் இம்மக்கள் சந்திக்கும் மருத்துவத் தேவைகள் ஏராளம். அதே நேரம், கூலித் தொழிலாளர்கள் என்பதாலும், தனியார் மருத்துவமனைகள் அதிகம் இல்லாததாலும், இங்கு வந்து செல்பவர்கள் ஏராளம்.

ஆனால் இடம், பணியாளர்கள், வளர்ச்சி உள்ளிட்ட பற்றாக்குறைகளால், பல மைல் தொலைவு கடந்து, கோவையைத் தேடி வரும் நிலை உள்ளது. 2012, வால்பாறை பேருந்து விபத்தில் கூட, பொள்ளாச்சிக்கும், கோவைக்கும் தான் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். வால்பாறை மருத்துவமனைக்கு யாரும் கொண்டு செல்லப்படவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

முதல்வருக்கு கடிதம்

மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து முதல்வருக்கு, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளார். மருத்துவ வசதிகள் குறைவாக உள்ளதையும், சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களின் நிலை குறித்தும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

விரைவில் புதுப்பொலிவு

மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பாத்திமா கூறுகையில், வால்பாறை மருத்துவமனையின் வளர்ச்சியே, எங்களது முக்கிய இலக்கு. வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் மகப்பேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை தர முயற்சி செய்து வருகிறோம். தற்போது, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மருத்துவமனை புதுப் பொலிவு பெறும் என்றார்.

அதிகாரிகளின் வாக்குறுதிப்படி, இந்த மருந்துவமனையின் நூற்றாண்டு விழா, சகல வசதிகளுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பது, பொதுமக்கள் எதிர்பார்ப்பு. அது அரசாங்கத்தின் செயல்பாட்டிலேயே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE