என்றும் காந்தி!- 24: மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?

By ஆசை

(பகுதி-1)



இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இந்தத் தொடர் காந்தியைப் பற்றியது என்பதால் பெண் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன. ஆனால், அவரது தென்னாப்பிரிக்கக் காலங்களில் போகப் போகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. கஸ்தூர்பாவைத் தன் மனைவி என்ற நிலையிலிருந்து தனது சத்யாகிரகப் போராட்டத்தின் சக பயணி என்ற நிலையில் அடையாளம் காண்கிறார்.

பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துதல்:

உலகிலேயே பெண்களை அதிக அளவில் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் அதற்கு முன்னோடிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகம்தான். இவை யாவுமே காந்தியால்தான் சாத்தியமானது.

காந்தி, தனது தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் ஆரம்பத்தில் பெண்களை நேரடியாக ஈடுபடுத்தவில்லை. அவரது பண்ணைகளிலும் அலுவலகத்திலும் பெண்களுக்கு முக்கியமான பங்கு அளிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு கருதி பெண்களை ஆரம்பத்தில் போராட்டத்தில் காந்தி ஈடுபடுத்தவில்லை. ஆனால், கிறிஸ்துவத் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் டிரான்ஸ்வாலில் செல்லாது என்று ஒரு சட்டத்தை அங்குள்ள அரசு இயறிய பிறகு பெண்களைப் போராட்டக் களத்துக்குக் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்று கருதுகிறார் காந்தி. கஸ்தூர்பாவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் குழுவொன்று ட்ரான்ஸ்வாலிலிருந்து அணிவகுத்துச் சென்று நேட்டால் பகுதிக்குள் நுழைந்து கைதாவது என்று திட்டமிடப்பட்டது. இவர்கள் ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று காந்தியால் அழைக்கப்பட்டார்கள். இந்தச் சகோதரிகள் கைதாகவில்லையென்றால் அங்கிருந்து நேராக நேட்டால் மாகாணத்தின் நியூகேஸில் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்துக்குச் சென்று அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படித் தூண்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ பதினோரு பேரில் பத்துப் பேர் தமிழ்ப் பெண்கள். அதே போல் காந்தியால் ‘நேட்டால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட நேட்டால் பிரதேசப் பெண்களின் இன்னொரு குழு, அனுமதி இல்லாமல் ட்ரான்ஸ்வால் பகுதிக்குள் நுழைந்து கைதாக வேண்டும். இதுதான் திட்டம்.

திட்டமிட்டதுபோல் ட்ரான்ஸ்வாலில் நுழைய முயன்ற ‘நேட்டால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டார்கள். அதையடுத்து போராட்டம் உக்கிரம் பெறவே மேலும் பல பெண்கள் இணைந்துகொண்டு அந்தப் போராட்டத்தை ஒரு தொடரோட்டம் போல மாற்றினார்கள். நேட்டால் பகுதிக்குள் நுழைந்த ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்படாததால் அவர்கள் நேராக நியூகேஸில் சுரங்கப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தவே அவர்களும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டு, மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதிக் கட்டத்தில் இப்படிப் பெண்களை ஈடுபடுத்தி தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் காந்தி வெற்றியைப் பெற்றார். இதன் தொடர்ச்சியே இந்தியப் போராட்டங்களில் காந்தி பெண்களை ஈடுபடுத்தியது.

இந்தியாவில் பெண்களின் நிலை:

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காலத்தில் இந்தியப் பெண்களின் நிலையைத் தற்போதைய பெண்களின் நிலையுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அரசியல், பொது வெளி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, கலை-இலக்கியம் போன்றவற்றில் முன்பு நினைத்தே பார்த்திருக்க முடியாத அளவில் பெண்களின் பங்களிப்பு தற்போது நிகழ்கிறது. வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும், பெண்களுக்கெதிரான வன்முறை, சாதி ஆணவக் கொலை முதலான கொடுமைகள் ஒழிவது போல் தெரியவில்லை. எனினும், காந்தி இந்தியாவுக்குத் திரும்பிய காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் இடையே கணிசமான அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. இதில் காந்திக்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதையும் மறைக்க முடியாது.

இந்தியாவுக்குத் திரும்பிய காந்திக்கு இங்கே காணக்கிடைத்த காட்சிகள் அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கின. இந்தியர்கள் தங்கள் பெண்களை அடிமையிலும் மோசமான நிலையிலேயே வைத்திருந்தனர் (இன்னமும் அப்படித்தான்). பழமையில் ஊறிப் போய் மிகவும் பிற்போக்கான சமூகமாக இந்தியா காட்சியளித்ததை அவர் கண்டுணர்ந்தார். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்காமல் தேச விடுதலை சாத்தியமில்லை என்றே காந்தி கருதினார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டக் களத்தில் காந்தி நுழைவதற்கு முன் படித்த, மேட்டுக்குடி ஆண்கள் மட்டுமே அதை ஆக்கிரமித்திருந்தனர். காந்தி வந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே காங்கிரஸ் கட்சியில் ஏராளமான ஏழை எளிய மக்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதைவிட முக்கியம், காந்தியின் கீழ் காங்கிரஸில் இணைந்து செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கைதான்.

போகும் இடங்களிலெல்லாம் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கு எதிராகத்தான் அதிகம் பேசுவார். கூட்டத்தின் ஓரத்திலோ, வீட்டுத் திண்ணைகளிலோ மறைந்து நின்றபடி காந்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் பெண்களைக் கூட்டத்தை நோக்கி வரச் சொல்வார். ஆண்களும் பெண்களும் கலந்து உட்காரச் சொல்வார். பெண்களைப் போராட்டக் களத்துக்கு அனுப்பும்படி தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்துவார். போராட்டங்களில் பிரதான இடங்களைப் பெண்களுக்குத் தருவார். இப்படியாக, இந்திய வரலாற்றில் பெருந்திரள் பெண்களை முதன்முதலில் அரசியல்படுத்தியவரானார் காந்தி.

பொதுவாக, பல கூட்டங்களில் பேசும்போது காந்தி தன் கையை விரித்து ஐந்து விரல்களையும் காண்பிப்பார். அதைப் பற்றி விவரிப்பார். முதல் விரல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம் கிடைப்பதற்கான லட்சியம்; இரண்டாவது விரல், நூல் நூற்றல்; மூன்று, மது உள்ளிட்ட போதை வகைகளைத் தவிர்த்தல்; நான்கு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை. ஐந்து, ஆண்-பெண் சமத்துவம். சுதந்திரம் என்பது இந்த ஐந்து விரல்களில் ஒன்று கூட இல்லை என்பதை நாம் கவனிக்கலாம். இந்த ஐந்து விஷயங்களையும் சாதித்தாலே சுதந்திரம் என்பது தானாக வந்துவிடும் என்பது காந்தியின் நம்பிக்கை. அதுவரை ‘சுதந்திரம்’ என்பது மட்டுமே இந்தியச் சுதந்திரப் போரட்டத்தில் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால், மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் அதில் இணைத்ததன் மூலம் காந்தி பெரும் புரட்சியையே நிகழ்த்தினார்.

சக பயணிகள்!

மாற்றத்தைத் தன்னிடமிருந்தே காந்தி ஏற்படுத்தினார். பெண்களையே தனது வழித்துணைகளாகவும் உறுதுணைகளாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவரோடு விவாதிக்கும்படியும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தால் தைரியமாக வெளிப்படுத்தும்படியும் பெண்களை அவர் ஊக்குவித்தார். முடிவுகளை எடுப்பதில் மனைவியருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தங்கள் கணவர்கள் அப்படி அனுமதிப்பதில்லை என்று சில பெண்கள் காந்தியிடம் முறையிட்டபோது, “எங்கள் வீட்டில் என் மனைவிக்குதான் முதல் இடம், நான் இரண்டாவது இடத்தில்தான்” என்று அவர்களுக்கு பதில் கூறினார். முதல் இடம், முன்னுரிமை என்பனவற்றை ஆண்கள் தர வேண்டும் என்பதைவிட பெண்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

தீண்டாமை ஒழிப்பில் காந்தி பெண்களையே அதிகம் நம்பியிருந்தார். அவரது உண்ணாவிரதத்துக்குச் செவிமடுத்து ஜவாஹர்லால் நேருவின் தாயார் ஸ்வரூப் ராணி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கைகளிலிருந்து உணவைப் பெற்று உண்டார். அவரது முன்னுதாரணத்தை இந்தியா முழுவதும் பல பெண்கள் பின்பற்றினார்கள்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அவர் கைராட்டையைப் பிரதான போர் ஆயுதமாக முன்வைத்தபோது பல தலைவர்களாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காந்தியின் செயலைக் கிண்டலுடன் அணுகியவர்களும் இருந்தார்கள். ஆனால், பொருளாதாரத் தன்னிறைவுக்கு நெசவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த காந்தி கைராட்டை சுயராஜ்ஜியத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பினார். இந்த விஷயத்தில் பெண்களையே அவர் பெரிதும் நம்பினார். வீட்டில் ஆடை தொடர்பான தேர்வுகளில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருப்பதால் கைராட்டையை அவர்களிடத்தில் எடுத்துச் சென்றார். அந்நியத் துணி பகிஷ்கரிப்பில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் (ஒரு வெகுஜன உதாரணம்: ஷங்கரின் ‘இந்தியன்’). கைராட்டையும் அந்நியத் துணி பகிஷ்கரிப்பும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை அசைக்கவே செய்தன. அதன் விளைவாக இங்கிலாந்தின் துணி ஆலைகள் பல மூடப்பட்டன.

போராட்டங்களில் பெண்களைத் தலைமை தாங்கச் செய்தது

தென்னாப்பிரிக்காவைப் போலவே இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றிலும் பெண்களைத் தலைமையேற்கச் செய்தார் காந்தி. உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியை கவிக்குயில் சரோஜினி தலைமையேற்று நடத்தினார். காந்தியுடன் கஸ்தூர்பாவும் பல போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார். ‘வெள்ளையரே வெளியேறுக’ இயக்கத்தை காந்தி முன்னெடுத்தபோது அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி கலந்துகொள்வதாக இருந்த கூட்டத்தில் தான் கலந்துகொண்டு பேசப்போவதாக கஸ்தூர்பா அறிவித்தார் அதைத் தொடர்ந்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். ஆகா கான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோதுதான் கஸ்தூர்பா காலமானார். மீராபென், மனு காந்தி என்று பலரும் காந்தியுடன் கைதாகியிருக்கிறார்கள்.

தனது போராட்டங்களில் பெண்களை அதிகம் காந்தி நம்பியதற்கு முக்கியமான காரணம் பெண்கள் இயல்பாகவே அகிம்சையைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதுதான். உடல் வலு இல்லாததால் பெண்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். காந்தியைப் பொறுத்தவரை அகிம்சைக்கே அதிக வீரம் வேண்டும். ஆகவே, ஆண்களைவிட பெண்களே வீரமும் துணிவும் கொண்டவர்கள் என்று காந்தி உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை பரஸ்பரம் பெண்களை காந்தி நோக்கியும் காந்தியைப் பெண்களை நோக்கியும் நகர்த்தியது. இவ்வளவு நாட்களாக நம்மை யாருமே பொருட்படுத்தாத நிலையில் நம்மை நோக்கி ஒருவர் பேசுகிறார்; நம்மைப் பிரதானப்படுத்திப் பேசுகிறார் என்ற எண்ணம் காந்தியை நோக்கிப் பெண்களைப் பெரும் படையாகத் திரண்டுவரச் செய்தது.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது முழுமையாக ‘ஆண்மை’ என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது; அப்படியொரு போராட்டத்தை காந்தி முன்னெடுத்திருந்தால் ஒருபோதும் பெண்கள் இப்படியொரு ஆதரவை காந்திக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள். வன்முறைப் பாதையைப் பெண்கள் நாடாததற்கு உடல்ரீதியாக அவர்கள் பலவீனமானவர்கள் என்று வழக்கமாகச் சொல்லப்படும் காரணத்தை காந்தி நம்பவில்லை. வன்முறையின் பலனின்மையைப் பெண்கள் உணர்ந்திருந்ததாலும், அகிம்சை என்ற ஆயுதத்தைத் தனக்கும் முன்பே பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்கள் வெற்றிகரமான ஆயுதமாகப் பிரயோகித்துவந்திருந்ததாலும்தான் வன்முறைப் பாதையைத் தவிர்த்துப் பெண்கள் தன்னை நோக்கி வந்தார்கள் என்று காந்தி நம்பினார்.

நகங்களும் பற்களும்

அகிம்சையில் காந்தி சமரசமே செய்துகொள்ளவில்லை என்றாலும் பெண்களுக்கு அதில் விதிவிலக்கு அளிக்கவும் செய்தார். “ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது இம்சையைப் பற்றியோ அகிம்சையைப் பற்றியோ யோசித்துக்கொண்டிருக்க மாட்டாள். அவளது முதன்மையான கடமை தற்காப்புதான். தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்கு அவளுக்கு எந்த வழிமுறை அப்போது தோன்றினாலும் அதைப் பிரயோகிப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டு. கடவுள் அவளுக்கு நகங்களும் பற்களும் கொடுத்திருக்கிறார். தனது முழு பலத்துடன் அவற்றை அவள் பயன்படுத்த வேண்டும். தன் முயற்சியில் அவள் உயிரிழக்கும்படி ஆனாலும் அதற்கும் அவள் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார்.

எனினும் உடல் வலிமையை விட மனவலிமைக்கு முன்னுரிமை கொடுக்கிறார் காந்தி. பெண்களைச் சிறுவயதிலிருந்து மனத்துணிவுடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறுகிறார். பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்களையும் திருமணத்துக்கான பொருள்போல பெண்களைப் பராமரிக்கும் பெற்றோர்களையும் காந்தி கடுமையாகச் சாடினார்.

பெண்களுக்கெதிரான தீமைகள் குறித்த காந்தியின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் பற்றி நாளைய அத்தியாயத்தில் பார்ப்போம்!

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

(நாளை…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

14 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்