கடற்படை அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க குழு அமைப்பு

கடற்படை மாலுமி ஒருவர் தனது மேலதிகாரிகள் மீது கூறிய ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பிராந்திய கடற்படையில், திருநெல்வேலியில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் போர்க் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வருபவர் சுனில்குமார் சாகு. இவர் தனது மேலதிகாரிகளுக்கு எதிராக நிதி முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.

இதையடுத்து சுனில்குமார் சாகுவை கடற்படை அதிகாரிகள் அறையில் அடைத்து வைத்ததாகவும் பின்னர் கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். சஞ்சீவினி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் சாகுவின் மனைவி ஆர்த்தி குற்றம் சாட்டியிருந்தார்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சாகு, மருத்துவ ஆலோசனையின்படியே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கடற்படை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சாகுவின் புகார் தொடர்பாக கமாண்டர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களில் இக்குழு தனது அறிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாகுவின் வேண்டுகோளை ஏற்று, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருக்க சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE