பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கு விரைவு சிகிச்சை- ஒருங்கிணைந்த மருத்துவத்தால் சாத்தியம்

சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க்கு விரைவான, நவீன சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், புற்றுநோய், நரம்பியல், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 9 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளுக்கான புறநோயாளிகள் பிரிவும் செயல்படுவதால், தினமும் 200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவுக்கு வருகின்றனர்.

ஒரே இடத்தில் மூளை நரம்பியல், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட துறை இயங்குவதால், பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் மூலம் முகம் சீரமைப்பு, விபத்துகளில் சிக்கி துண்டான கை, கால்களை ஒட்ட வைப்பது மற்றும் மார்பக புற்றுநோய்க்கு விரைவான சிகிச்சை அளிக்க வசதி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் டாக்டர் என்.சி.ஹரிஹரன் கூறியது:

இந்தியாவில் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் செயல்படும் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை துறையில் புற்றுநோய் பாதித்த மார்பகம் முழுவதுமாக அகற்றப்படுகிறது. அதன்பின், 6 மாதம் அல்லது ஓர் ஆண்டு கழித்து நோயாளிகள் சம்மதித்தால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் செயற்கையாக மார்பகம் பொருத்தப்படும். மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு சென்றால், மார்பகத்தை அகற்றிவிடுவார்கள் என பெண்கள் அச்சப்படுகின்றனர். இதனால், மார்பகப் பகுதியில் புற்றுநோய் கட்டி அல்லது வேறு ஏதாவது சிறிய கட்டிகள் இருந்தால் கூட பரிசோதனைக்கு பெண்கள் செல்வதில்லை.

இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை துறையும், பிளாஸ்டிக் சர்ஜரி துறையும் இணைந்து செயல்படுகிறது. புற்றுநோய் அறுவைச் சிகிச்சை துறையின் மூலம் பாதித்த மார்பகம் முதலில் அகற்றப்படும். அதன்பின், ஓரிரு மணி நேரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் மூலம் வயிறு, முதுகு போன்ற பகுதியில் இருந்து சதைகளை எடுத்து செயற்கையாக மார்பகம் உருவாக்கப்படும்.

முகம் சீரமைப்பு:

ஒரு சிலருக்கு பிறவிலேயே தலை, காது, மூக்கு அமைப்புகள் மாறியிருக்கும். நரம்பியல் துறையின் உதவியுடன், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இவர்களை அழகாக மாற்ற முடியும். முகம் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் உடனடியாக செய்யப்படும்.

இதேபோல விபத்துகளில் கை, கால்கள் துண்டானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் துண்டான பகுதிகளை மீண்டும் ஒட்ட வைப்பதற்கான நவீன மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன. விபத்தில் சிக்கி துண்டான உறுப்புகளை அப்படியே எடுத்துக் கொண்டு 6 மணி நேரத்துக்குள் வந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைத்துவிட முடியும். துண்டான உறுப்புகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு ஐஸ் பாக்ஸில் வைத்து இருந்தால் 12 மணி நேரத்துக்குள் கொண்டு வரலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE