பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியமித்திருக்கும் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து, அகமதியா பிரிவைச் சேர்ந்த அதீஃப் ரெஹ்மான் மியான் எனும் பொருளாதார அறிஞர் நீக்கப்பட்டிருப்பது அகமதியாக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பழமைவாத முஸ்லிம் அமைப்புகளின் நெருக்கடி காரணமாக அவர் நீக்கப்பட்டிருப்பது வெளிப்படையான விஷயம். பாகிஸ்தான் மட்டுமல்லாது, பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அகமதியாக்களின் நிலை இதுதான். அவர்கள் முஸ்லிம்களாகவே அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
பிளவுபடாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் கடியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முஸ்லிம் அறிஞர் மீர்சா குலாம் அகமது (1835-1908). அவர் குரான், சுன்னா, ஹதீஸ் ஆகியவற்றைப் பின்பற்றியவர். எல்லையற்ற கருணையுள்ள அல்லாவே ஒரே கடவுள். அவருடைய போதனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும், அனைவரையும் அவரைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர், இறையருள் தன்னுள் இறங்கியதாகவும் சில ஆலோசனைகளைக் கூறியதாகவும் கூறினார். இஸ்லாமியர்களிடையே மதப்பற்றும், வழிபடல்களில் சரியான முறைகளும் குறைவதாகக் கருதிய அவர், அமைதி வழியில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இப்படியாக இஸ்லாத்தில் 1889-ல் புதிய பிரிவு ஏற்பட்டது. அவரைப் பின்பற்றுபவர்கள் ‘அகமதியாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அகமதுவை அவரது ஆதரவாளர்கள் ஓர் உருவகமாக, தூதர் என்றனர். பிற முஸ்லிம்கள் இதை ஏற்கவில்லை.
அகமதியா இயக்கம் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. உலகில் உள்ள 106 கோடி முஸ்லிம்களில் அகமதியர்கள் எண்ணிக்கை 1.25%. அகமதியர்கள் நன்கு படித்தவர்கள். சட்டம், பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை என்று எல்லா துறைகளிலும் வல்லவர்கள். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் மறுகட்டமைப்புக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்பவர்கள். ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எழுத்தறிவு பெற்றவர்கள் 30%. ஆனால், அகமதியர்களின் எழுத்தறிவு 100%!
அகமதியர்களின் செல்வாக்கும் எண்ணிக்கையும் பெருகுவது பிறருக்கு உவப்பளிக்கவில்லை. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அரசும் அவர்களை ஒடுக்கத் தொடங்கியது. 1974-ல் பிரதமர் சுல்பிகர் அலி புட்டோ நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து ‘அகமதியர்கள் முஸ்லிம்கள் அல்ல’ என்று அறிவித்தார். இதனால், அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களானார்கள். அவர்களின் வழிபடும் இடங்கள் மசூதிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல், பாகிஸ்தானிலிருந்த தங்களுடைய தலைமையகத்தை, பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அகமதியர்கள் மாற்றிவிட்டனர்.
இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு புதிய அரசியல் சூழலுக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 பேரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து அதீஃப் ரெஹ்மான் மியான் நீக்கப்பட்டிருக்கிறார். உலகின் தலைசிறந்த 25 பொருளாதார அறிஞர்களில் ஒருவர் என்று பன்னாட்டு நாணய நிதியத்தால் பாராட்டப்பட்டவர் இவர். இப்படிப்பட்ட திறமைசாலியை பாகிஸ்தான் இழப்பது தவறு என்று அந்நாட்டு அறிவுஜீவிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பாகிஸ்தான் அரசுப் பணிகளுக்கான நியமனத்தில் இனம், மதம், சாதி, பாலினம், வசிப்பிடம், பிறந்த ஊர் என்று எந்தக் காரணியின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்று பாகிஸ்தான் அரசியல் சட்டப் பிரிவு 27 கூறுகிறது. ஆனால், அந்நாட்டின் வளர்ச்சியில் கணிசமான பங்கு வகித்திருக்கும் அகமதியாக்கள் விஷயத்தில் இது கைகொடுக்கவில்லை என்பதுதான் துயரம். மத அடிப்படைவாதிகளிடம் ஒரு நாடு சிக்கிக்கொள்கிறபோது காலம் நெடுகிலும் அதற்கு என்னவெல்லாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது பாகிஸ்தான்.
முக்கிய செய்திகள்
மற்றவை
5 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
8 days ago
மற்றவை
9 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago