பிஏபி திட்டத்தை முன்னெடுத்த விகேபி!

By எஸ்.கோபு

இரு  மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சினை, மோதலாய்  மாறும் இன்றைய காலகட்டத்தில்,  பல நதிகளை இணைத்து,  10 அணைகளைக் கட்டி, கடந்த 60 ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி இரு மாநிலங்களும் அந்த நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது ஆச்சரியம் அளிக்கும் தகவல். பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம்தான் அது. இத்திட்டத்தின் வரலாறு என்ன?

பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த வி.கே.பழனிசாமி கவுண்டர், தனது பள்ளிப் பருவத்தில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது, அவர் குடும்பத்தின் வளர்ப்பு யானைகள், பரம்பிக்குளம் பகுதியில் மரம் இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. இதைக் காண பழனிசாமி சென்றுள்ளார். ஒரு நாள் பிற்பகலில் வேளாண் பணிகளை முடித்துவிட்டு,  சாப்பிடுவதற்காக, கை-கால்களைக் கழுவ  பரம்பிக்குளம் ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது ஆற்றில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றுள்ளது.

மதிய உணவை முடித்துவிட்டு, மீண்டும்  கைகளைக் கழுவ ஆற்றுக்குச் சென்றபோது,  ஆற்றின் நடுவில் இருந்த, 20 அடி உயரமுள்ள  குன்று மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்பட்ட  இந்த மாற்றம், அவர் மனதில்  பசுமரத்தாணிபோல பதிந்தது. சில நிமிடங்களில் எங்கிருந்து அவ்வளவு தண்ணீர் வந்தது என்ற கேள்வி, அவரது  மனதை குடைந்துகொண்டே இருந்தது.

பின்னர் விடுமுறை நாட்களில் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து,  யானை மீது அமர்ந்து, ஆற்றின் போக்கு,  நீர்வளம் குறித்து ஆர்வமாக அறிந்துகொண்டார். இந்த அனுபவமே,  பின்னாளில் பிஏபி திட்டத்தை முன்னெடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்தது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தாலுகா, உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் பாசன வசதி பெற, அரபிக் கடலில் கலக்கும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே அணைகட்டி,  தண்ணீரை கிழக்கு நோக்கித் திருப்பி, பாசனத்துக்கு அளிக்க வேண்டுமன, 1935-ல்  சென்னை மாகாண சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக  இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர் தலைமையில், விவசாயிகள் போராடி வந்தனர்.

ஐந்தாண்டுத் திட்டத்தில்...

இது தொடர்பாக 1954-ல் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வி.கே.பழனிசாமி பேசியபோது, “மதராஸ் மாகாணத்தில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடி, கடலில் கலக்கும் ஆறுகளை கிழக்கு நோக்கித் திருப்பி, வறண்ட நிலங்கள் பாசன வசதி பெறச் செய்ய வேண்டும் என்று 1935-லிருந்து போராடி வருகிறேன். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்கவில்லை. அடுத்த ஐந்தாண்டுத்  திட்டத்திலாவது நிதி ஒதுக்க வேணடும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில், 1956-ல்  இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  மதராஸ் மாகாணத்தில் கோயம்புத்தூர் ஜில்லாவில் இருந்த பாலக்காடு பகுதி, கேரள மாநிலத்துடன் இணைந்தது.  மேலும், மதராஸ் மாகாணத்தில் இருந்த சில பகுதிகள் பிரிந்து,  ஆந்திராவில் இணைந்தன. அதுவரை  ஆந்திராவுடன் இணைந்த பகுதிகளில் இருந்துதான் அரிசி கிடைத்து வந்தது. அரிசிப் பற்றாக்குறையை சரிசெய்ய வேளாண்மையில் தன்னிறைவு பெறுவது அவசியமானது.

முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டக்காலங்களில்,  நீர்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. பவானிசாகர், சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி அணைகளின்  திட்டப் பணிகள் முடிவுறும் நிலையில் இருந்தன. 1954-ல் மதராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காடு பகுதியில், மலம்புழா அணையை காமராஜர் திறந்து வைத்தார்.

அப்போது, பொள்ளாச்சி பகுதி காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களான சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, நா.மகாலிங்கம் ஆகியோர், பரம்பிக்குளம்-ஆழியாறு அணைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக  அவரிடம் எடுத்துரைத்தனர். தமிழகத்தில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடி கேரளத்தில் பாய்கின்ற நதிகளின் நீரை கிழக்குத்  திசையில் திருப்பிவிட வேண்டுமென, 1955-56-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அப்போதைய முதல்வர் காமராஜர், நீர்ப் பாசனத் துறை அமைச்சர் கக்கனை சந்தித்து வி.கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

காமராஜரும் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார். இரண்டாண்டுகள் ஆகியும் இது தொடர் பாக காமராஜர் எந்த முடிவும் எடுக்காததால், ஒரு நாள் காமராஜரை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறிவிட்டு, தலைமைச்  செயலகத் திலிருந்து வி.கே.பழனிசாமி  பொள்ளாச்சி கிளம்பினார்.

இதற்கிடையில், பாசனத் திட்டங்கள் குறித்து பயிற்சி பெறுவதற்காக யூ.ஆனந்தராவ் என்ற  பொறியாளரை அமெரிக்காவுக்கு அரசு அனுப்பியிருந்தது. பயிற்சி முடித்து தமிழகம் திரும்பிய யூ.ஆனந்தராவுக்கு, எங்கு போஸ்டிங் போடுவது என தலைமைச் செயலகத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

PAP-VKPjpgright

அப்போது காமராஜர்,  “பரம்பிக்குளம் அணை திட்டம் குறித்து வி.கே.பழனிசாமி நீண்ட நாட்களாக என்னிடம் தெரிவித்து வந்தார். நான் கண்டுகொள்ளவில்லை என்று கோபித்துக் கொண்டு, பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.  நீங்களும் பொள்ளாச்சிக்கு சென்று, அவரிடம் அந்த திட்டம் குறித்து கலந்தாலோசித்து, எனக்கு அறிக்கை தர வேண்டும்” என்று ஆனந்தராவிடம் கூறி, அவரை பொள்ளாச்சிக்கு அனுப்பிவைத்தார் காமராஜர்.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இருவரும் பரம்பிக்குளம் பகுதிக்குப்  புறப்பட்டனர். தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் பகுதிகளில்  அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்துக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், இருவரும் யானைகள் மீது அமர்ந்து  சென்று, பரம்பிக்குளத்தை அடைந்தனர். அங்கு 5 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட ஆனந்தராவ், தனது அறிக்கையை அரசுக்கு அனுப்பினார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் வேளாண் தன்னிறைவுக்கு புதிய நீர்பாசனத் திட்டம் அவசியம் என்பதால், ஆங்கிலேய அரசால் 1921-ல் கிடப்பில் போடப்பட்ட திட்டத்துக்கு, 1956-ல் மறுவடிவம் கொடுக்க  நினைத்தது தமிழக அரசு. இதன்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கித் திருப்பும்  திட்டத்தை பொதுப்பணித் துறை ஆய்வு செய்ய அரசு ஆணை வழங்கியது.

இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் சாலக்குடி, பெரியாறு, பாரதபுழா ஆகிய மூன்று வடிநிலங்களில் பாயும், சாலக்குடி ஆற்றின் கிளை நதிகளான சோலையாறு, ராமகிருஷ்ண மலைப் பகுதியில் உற்பத்தியாகும் பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறுகளுடன், பெரியாறு நதியின் கிளை நதியான இடைமலையாற்றில் கலக்கும் நீராறு, ஆனைமலை ஆறு, பாரதபுழா ஆற்றின் கிளை நதிகளான, சமவெளியில் பாயும் ஆழியாறு, பாலாறு என 8 ஆறுகளையும் இணைக்கும் திட்டத்துக்கான ஆரம்ப நிலை ஆய்வை  தலைமைப் பொறியாளர்   ஆனந்தராவ் தலைமையில், ஜெ.ஆப்ரஹாம், டி.எஸ்.கண்ணன் அடங்கிய பொறியாளர் குழுவினர் மேற்கொண்டனர்.

பிஏபி பயணம் தொடரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

7 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

27 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்