மக்களாட்சியை பதிவு செய்யும் உடுமலை சமூக ஆர்வலர்

ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான வாக்கு விவரங்களை, கடந்த  20 ஆண்டுகளாக நூலாக அச்சிட்டு வெளியிடுகிறார் உடுமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்.

தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என்று வலியுறுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதையும், சிலர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் வாக்குப்பதிவு சதவீதங்களைக் கொண்டு கணித்துவிடமுடியும்.

எனினும், வாக்குப்பதிவு நாளில், மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதைத்தான் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன்  உற்று நோக்குவர். அதன் பின்னர், ஓரிரு நாட்களில் பதவி ஏற்பு என சகலமும் முடிந்து, கட்சித்  தொண்டர்கள் உட்பட அனைவரும் தங்கள் வேலையைப் பார்க்க தொடங்கிவிடுவர்.

தேர்தல் நடவடிக்கைகள், வாக்குப்பதிவு விவரங்களை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளில், சாதாரண மக்கள் ஈடுபட மாட்டார்கள்.

உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில்  ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள்  மற்றும் நோட்டாவுக்குப் பதிவான வாக்கு விவரங்களை, அரசியலில் களம் காண விளையும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இன்றைய இளம் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் வட்டமடித்து வரும் மூத்த நிர்வாகிகளிடம்கூட, தகவல்களை சேகரிக்கும் போக்கு இருப்பதில்லை.

இந்த நிலையில், உடுமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.சந்திரசேகரன், தொடர்ந்து 20 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவை, உடுமலை, மடத்துக்குளம் சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்கு விவரங்களை சேகரித்து,  நூலாக அச்சிட்டு வருகிறார்.

நடந்துமுடிந்த  மக்களவைத் தேர்தலில்,  பொள்ளாச்சி தொகுதி விவரம் அடங்கிய `மக்கள் தீர்ப்பு 2019’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில்,  உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்தூர், மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குச் சாவடி வாரியாக பதிவான வாக்கு விவரம் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு இந்த தேர்தல் தொகுப்பு மிகவும் உதவும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களிடையே இந்த நூல் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏ.சந்திரசேகரன் கூறும்போது, “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தேர்தலும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனாலும், சில நாட்களிலேயே அவற்றை மறந்து விடுவோம்.

எனவே, ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களின் வாக்குப் பதிவு விவரங்களை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் லாப நோக்கமின்றி வெளியிட்டு வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE