ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நல்லடக்கம்: ஆளுநர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி

By இரா.ஜெயப்பிரகாஷ், பெ.ஜேம்ஸ்குமார்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் மடத்துக்குள் மகா பெரியவர் பிருந்தாவனத்துக்கு அருகில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(83). அவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உயிர் பிரிந்தது.

இதனைத் தொடர்ந்து சங்கர மடத்தில் அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை சங்கர மடத்துக்கு உள்ளே மகா பெரியவர் பிருந்தாவனத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு 7 அடி ஆழம், 7 அடி அகலத்துக்குப் பள்ளம் தோண்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நல்லடக்கத்துக்கான தொடக்க நிகழ்வுகள் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கின. சுமார் 500 பேர் பங்கேற்ற வேதபாராயணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சங்கல்பம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ ஜெயேந்திரருக்கு கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரின் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.

இந்த அபிஷேகத்தில் சந்தனம், பன்னீர், பால், தயிர், விபூதி, இளநீர் உட்பட 11 வகையான பொருட்களை பயன்படுத்தினர். சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், விநாயகர் என 5 கடவுளுக்கு உரிய சாலிகிராமம் உள்ளது. இதில் சிவனுக்கு உரிய சாலிகிராமம் (நேபாளத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட இறைவனுக்கு நிகராகக் கருதப்படும் தெய்வீக சக்தியுடைய கல்) காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ளது. இந்த சாலிகிராமத்தை ஸ்ரீ ஜெயேந்திரர் சிரசில் வைத்து அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மகா பெரியவர் பிருந்தாவனத்தை சுற்றியவாறு ஸ்ரீ ஜெயேந்திரர் உடல் எடுத்து வரப்பட்டது.

பின்னர் 3 அடி ஆழம், 3 அடி அகலம் கொண்டு மூங்கில் கூடையில் ஸ்ரீ ஜெயேந்திரரின் உடல் சற்று சாய்ந்து அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் குழியில் நவரத்தினங்கள், பஞ்சலோகங்கள், வெள்ளி, தங்கம், உப்பு, வசம்பு, விபூதி ஆகியவை போடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஜெயேந்திரர் உடல் குழிக்குள் வைக்கப்பட்டது.

பின்னர் வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஜெயேந்திரர் உடல் நல்லடக்கத்துக்காகக் குழிக்குள் இறக்கப்படும்போது மட்டும் அந்த இடம் திரை கொண்டு மூடப்பட்டது. ஜெயேந்திரர் நல்லடக்கம் முடிந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது திரை விலக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கிடைத்தது.

பக்தர்கள் பலர் நல்லடக்கம் நடைபெறும்போது பஜனைப் பாடல்களைப் பாடியபடி இருந்தனர். ரிக் வேதம் தொடர்பான வேத பாராயணங்களையும் வாசித்தனர். ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர என்ற கோஷங்களையும் பக்தர்கள் எழுப்பினர்.

உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமர்ந்து தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் சங்கர மடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பின் வந்தவர்கள் மடத்துக்கு வெளியே வைக்கப்பட்ட திரையில்தான் நல்லடக்கம் நிகழ்ச்சியைப் பார்த்தனர். 8 மணிக்குள் மடத்துக்குள் வந்த பக்தர்கள் நல்லடக்கம் நடைபெற்ற இடத்தின் முன்பு அமர்ந்து தரிசித்தனர்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்திருந்தார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடைசியாக சந்தித்த முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவர். மடத்துக்கு வந்த ஆளுநர் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு பின்னர் அஞ்சலி செலுத்தினார். இந்த இறுதிச் சடங்கில் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக இருந்தது. அவரால் கலந்துகொள்ள முடியாததால், அவரது கடிதம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக, ஸ்ரீ விஜயேந்திரரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான போலீஸார் சங்கர மடத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்