இந்தியாவின் அதிகார விளையாட்டு

By செய்திப்பிரிவு

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, புவியரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் காரணமாக வல்லரசு அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பை இந்தியாவுக்கு அதிகமாக்கியிருக்கின்றன.

மோடி முதலில் ஜப்பானுக்குச் சென்று பிரதமர் ஷின்சே அபேயைச் சந்தித்துப் பேசினார். பிறகு இந்தியாவுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார். இப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். சீனாவை அடக்கவும், ரஷ்யாவுக்குப் பதில் தரவும், இராக் - சிரியாவில் மத பயங்கரவாதிகளைச் சமாளிக்கவும் இந்தியாவை அணைக்கத் தயாராகிறது அமெரிக்கா. நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம், ராணுவப் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைப்பு ஆகியவற்றை அளிக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது.

அமெரிக்கா தரும் அத்தனை சலுகைகளையும் பெறத் தயாராக இருந்த போதிலும் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவற்றுடன் உறவாடுவதால் பெரும் சலுகைகளை விட்டுத்தர இந்தியா தயக்கம் காட்டும். சீனத்துடன் இந்தியா கொண்டுள்ள உறவு சிக்கலானது. இரண்டுமே வர்த்தகம், முதலீடுகளைப் பெருக்கிக்கொள்ள நினைக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நிலைமையை ஜனநாயகப்படுத்த நினைக்கின்றன. ஆயினும் இதற்கு வரம்புகள் உண்டு.

1962 போரில் அடைந்த தோல்வி இந்தியாவை இன்னமும் உறுத்துகிறது. ஆசியாவில் சீனாவுக்கு இணையாக ராணுவ பலத்தில் வர வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானுடனான உறவை சீனா முறித்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

அமெரிக்காவுடன் இந்தியா ராணுவக் கூட்டாளியாகச் சேர்ந்தால், சீனா இந்தியாவுக்குப் பாடம் புகட்டும். இந்தியாவுடன் போருக்குப் போக வேண்டாம் என்று பாகிஸ்தானை சீனாதான் இப்போது தடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உள்ள உறவு காரணமாகத்தான் ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்காமல் இருக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேர்ந்தால், ரஷ்யாவும் பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனையைத் தொடங்கிவிடும்.

இந்திய ராணுவத்தின் வலிமையைப் பெருக்குவது, பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவது, பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பது, பாகிஸ்தானைச் சீர்குலைக்க டி.டி.பி. பயங்கரவாதிகளைத் தூண்டிவிடுவது என்ற உத்தியை நரேந்திர மோடி கைக் கொள்ளப் பார்க்கிறார். இதனால் பாகிஸ்தானின் தேசியவாதிகளும், மதத் தீவிரவாதிகளும் இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதில் மேலும் உறுதி யடைவார்கள். இந்தியாவுடன் ராணுவ சமபல நிலையை எட்ட பாகிஸ்தான் மேலும் அணுஆயுதங்களை நாடத் தொடங்கும்.

காஷ்மீர் பிரச்சினை, பயங்கரவாதத் தாக்குதல்கள், அணுகுண்டை வெடித்துப்பார்க்கும் ஆர்வம் மிக்க ராணுவச் சூழல் காரணங்களால் இந்திய - பாகிஸ்தான் தேக்கநிலை, சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கே ஆபத்தானதாக மாறக்கூடும். வல்லரசாகும் இந்தியாவின் ஆசை, பாகிஸ்தானுடன் ஒரு போருக்கு நிச்சயமாக வித்திடும்.

டான் - பாகிஸ்தான் நாளிதழ் தலையங்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE