பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை 14 ஆண்டுகளுக்கு முன்பே கறுத்துப் போனது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை வடிவமைக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய அதிகாரிகள் சிக்குகிறார்கள்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாணத்தால் ஆன சிலையை மறைத்து 2004 ஜன.26-ல் புதிய உலோக சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை தயாரிக்கும் பணி ஸ்தபதி முத்தையாவிடம் அளிக்கப்பட்டது. சிலை தயாரிக்க வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
உலோக சிலை கடந்த 2004-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே சிலை கறுத்துப் போனது. அப்போதே சிலை தயாரிப்பில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அப்போதைய அதிமுக அரசு விசாரணை நடத்தவில்லை. எனினும், இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜாவை பணியிட மாற்றம் செய்தது.
தமிழக ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என கேரளாவை சேர்ந்த உன்னி கிருஷ்ண பணிக்கர் பிரசன்னம் பார்த்து கூறியதால் நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை வைக்க திட்டமிட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சிலை கறுத்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்து.
2000-ம் ஆண்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்து 12 ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசின் முடிவின்படி 6-ம் ஆண்டிலேயே, அதாவது 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கும் காரணம் புரியாமல் முருக பக்தர்கள், ஆன்மிகவாதிகள் குழப்பம் அடைந்தனர்.
2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னதாக 22 நாள் கருவறை சாத்தப்பட்டது. இத்தனை நாட்கள் கருவறை சாத்தப்பட்ட சம்பவம், முன்னெப்போதும் நடைபெறவில்லை என்கின்றனர் முருக பக்தர்கள். அப்போது நவபாஷாண சிலையை மாற்ற முயற்சி நடைபெற்றதா எனவும் அச்சம் எழுந்ததாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றதற்கான காரணத்தை ஆன்மிகரீதியாக ஆராய்ந்த ஆலோசகர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை பல ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ளதுதான் காரணம் என தெரிவித்ததாகவும், இதைத் தொடர்ந்து, பரிகாரம் தேடும் முயற்சியாக தினமும் ஒருவேளை மட்டும் டபுள் லாக்கரை திறந்து, இந்த சிலைக்கு நெய்வேத்தியம் மட்டும் காட்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. செவ்வாய் அதிபதியாக விளங்கும் முருகப் பெருமானின் நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்வதற்கு கோயிலின் தலைமை குருக்களாக இருந்த கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு புதிய குருக்கள் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்தே புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை பிரச்சினை தொடங்கியது முதல் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடத்தப்பட்டதாகவும், இதில் பக்தர்கள் நலனோ, பொது நலனோ இல்லை எனவும் கூறுகிறார் பழநி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் செந்தில்குமார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாண சிலையை மறைத்து வைக்கப்பட்ட புதிய சிலையை செய்வதில் முறைகேடு நடைபெற்றிருப்பது ஸ்தபதி முத்தையா வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய சிலை பழநி மலைக் கோயிலில் கருவறைக்கு இடதுபுறம் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘டபுள் லாக்கர்’ என்று பெயர். இந்த அறையில் மூலவருக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, தங்க வேல், சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த ‘டபுள் லாக்கர்’ அறையில்தான் கடந்த 14 ஆண்டுகளாக சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிலையை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இதில் இடம் பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் யார் என்ற விவரம் போலீஸாரால் சேகரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே.கே.ராஜாவிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் கொடுக்கும் வாக்குமூலம் அடிப்படையில் மேலும் சில அறநிலையத் துறை அதிகாரிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்ய வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. அப்போது அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர், அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
நவபாஷாண சிலையின் சிறப்பு
ஒன்பது வகையான அரிய பாஷாணங்களைக் கொண்டு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகன் சிலையை உருவாக்கினார் சித்தர் போகர். நவபாஷாண கலவை இரும்பைவிட உறுதியானது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் சிறப்பே இந்த சிலைதான்.
இரவில் நவபாஷாண சிலையை முழுமையாக சந்தனம் பூசிவிடுவர். காலையில் இந்த சந்தனத்தை கலைந்து ராக்கால சந்தனம் என வழங்கப்படும். சிலையில் இருந்து வெளியாகும் ஒருவகை வியர்வை தன்மை சந்தனத்தில் கலந்துவிடும். இதனால் ராக்கால சந்தனம் சாப்பிட்டால் தீராத நோய்களும் தீர்க்க வல்லது என்பது நம்பிக்கை.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago